Published:Updated:

முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!

முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!

ஹெல்த்

யற்கைக்கு முரணான எந்த மாற்றமும் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தத்தான் செய்யும். இப்போதெல்லாம் பல பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்பட்டுவிடுகிறது. இதுவும் இயற்கைக்கு முரணானதே. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் விவரிக்க முடியாதவை. முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, குழந்தையின்மை மருத்துவர் ஜி.கிருத்திகா தேவியிடம் பேசினோம்.

முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!

“பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுவதைத்தான் `மெனோபாஸ்’ என்கிறோம். அதாவது, சினைப்பையிலிருந்து கருமுட்டை உற்பத்தியாவது நின்றுவிடும் நிலை. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவதுதான் இயல்பு. ஆனால், ஒரு மருத்துவராக என் அனுபவத்தில், இப்போதெல்லாம் 20 வயது முதலே மெனோபாஸுக்கு உள்ளாகும் பெண்களைப் பார்க்கிறேன். இதை நாங்கள் ‘Premature Ovarian Failure’ என்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு பெண்ணுக்கு சினைப்பையில் சுரக்கும் ஹார்மோன்கள்தாம் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தும். பொதுவாக 40 வயதுக்குமேல் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கும் இந்த ஹார்மோன்கள், இப்போதெல்லாம் முன்கூட்டியே செயலிழக்கத் தொடங்கிவிடுகின்றன. ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதற்கான முக்கியக் காரணங்களைப் பார்ப்போம்.

முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!

மரபணு

ஒரு பெண்ணின் மரபணு சார்ந்த காரணங்களாலும் முன்கூட்டியே அவருக்கு மெனோபாஸ் ஏற்படலாம். அந்தப் பெண் தன் அம்மா வயிற்றில் கருவாக  வளர்ந்தபோது ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக அவருக்கு இப்படி ஆகலாம். இவர்களுக்கு அந்த நேரத்துக்கான மருந்துகளைத்தான் கொடுக்க முடியும். முற்றிலும் குணமாக்கி, இயல்பானநிலைக்குக் கொண்டு வருவது இயலாது.

எதிர்ப்பு சக்தி

பொதுவாக, வெளியிலிருந்து வரும் கிருமிகளோடு போராடுவதே நம் உடலின் எதிர்ப்பு சக்தியின் பணி. ஆனால், சிலருக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே அவர்களுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஏற்படும் நோய்களை `Auto Immune Diseases’ என்கிறோம். இப்படி எதிர்ப்பு சக்தியின் செயல்திறனில் மாற்றம் ஏற்படும் பெண்களுக்கு சினைப்பை செயலிழந்து, முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படக்கூடும்.

எண்டோமெட்ரியம்

சில பெண்களுக்கு எண்டோமெட்ரியத்தில் கட்டி வந்து, சினைப்பையை அகற்ற வேண்டியிருக்கும். அதனாலும் மெனோபாஸ் ஏற்படலாம்.

புற்றுநோய்

ஒரு பெண்ணின் உடலில் எந்தப் பகுதியில் புற்றுநோய் வந்திருந்தாலும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தாக்கத்தால் சினைப்பை செயலிழந்துவிடலாம். இதனாலும் முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படலாம்.

முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!


மன அழுத்தம்

வீடு, உறவுகள், அலுவல் சூழல் போன்ற காரணிகள் ஏற்படுத்தும் கடுமையான மன அழுத்தமும் சில பெண்களுக்கு முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படக் காரணமாக அமையலாம். மேற்கூறியவற்றில், மரபணு காரணங்கள் தவிர்த்து, மற்றவற்றுக்கு உரிய சிகிச்சைகள் இருக்கின்றன. இந்த ஐந்து முதன்மைக் காரணங்கள் தவிர, உடல் பருமனும், முறையற்ற உணவுப் பழக்கமும் முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.

தவிர்க்கும் வழிகள்!

இளம் வயது முதலே பெண்கள் சமச்சீரான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும், தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுகளையும், அளவுக்கு அதிகமான அசைவ உணவையும் தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு பதிலாக அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் சம்பந்தமாக ஏதேனும் மாறுபாட்டை உணர்ந்தால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.

 - வி.எஸ்.சரவணன்

அதிவிரைவாகப் பூப்படைந்தால்..!

உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட சில காரணங்களால் இன்று சிறுமிகள் உடல் பருமனுக்கு ஆளாகி அதிவிரைவாகவே பூப்படைந்துவிடுகிறார்கள். ‘அதிவிரைவிலேயே பூப்படைவதால், அவர்களுக்கு மெனோபாஸும் முன்கூட்டியே ஏற்படுமா?’ என்று பலரும் கேட்கிறார்கள். கவலை வேண்டாம்... இரண்டுக்கும் தொடர்பில்லை.