Published:Updated:

ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு... என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் சீரகச் சம்பா, பண்ருட்டி பலாப்பழம், ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகிய பொருள்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு... என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு... என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து, திருபுவனம் பட்டுச் சேலைக்கும் `புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. இதன்மூலம், சர்வதேசச் சந்தையில் பட்டுச் சேலையின் மதிப்பு உயரும். உலகின் எந்த நாட்டுக்கும் இனி பட்டுச் சேலைகளை எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். இதுவரை தமிழகத்திலிருந்து 30 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடுகளைப் பெற்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. 35 பொருள்களுடன் கர்நாடகம் முதலிடத்தையும், 33 பொருள்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பொருளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு அங்கீகாரமே புவிசார் குறியீடு. தொடர்ந்து அந்தப் பொருளின் தரத்தைக் காத்துக்கொள்வதற்கான சான்றாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும். அந்த அமைப்பு அந்தந்த நாட்டிலுள்ள பாரம்பர்யப் பொருள்களை ஆய்வுசெய்து, இந்தச் சான்றிதழை வழங்கி அங்கீகரிக்கும். ஒரு நாட்டில் சான்றிதழ் பெற்றுவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்பட்டு வரும், உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் எளிதாகச் சான்றிதழ் பெறலாம். அதன்மூலம் சர்வதேச அளவில் அந்தப் பொருளின் வணிகத்தை மேம்படுத்தலாம். 

தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும், குச்சி போன்ற தோற்றத்தில், தனித்துவமான நிறத்துடன், நாசியைத் துளைக்கும் மணத்துடன்கூடிய ஈரோடு சின்னநாடன் மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு  உண்டு. பவானி ஆற்றுப் பாசனமும், அந்தப் பகுதியின் மண் வளமுமே அதற்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதே மஞ்சளைக் கொண்டுபோய் வேறு எங்காவது விளைவித்தால் இதே தரம் நிச்சயமாக இருக்காது என்று உறுதியாகச் சொல்கிறார்கள். உணவில் மட்டுமல்லாமல், மருந்திலும் ஈரோடு மஞ்சள் பயன்பட்டுவருகிறது. 

நாள்பட்ட சளி, குடல்புண், ரத்தசோகை, சர்க்கரைநோய் பாதிப்புகளுக்கு மருந்து தயாரிக்க, ரத்தம் சுத்திகரிக்க, குடல்புழுக்களை கட்டுப்படுத்த, ரத்தநாள அடைப்புகளைச் சுத்தம் செய்ய,வெளிக்காயங்களுக்கு மருந்தாக, நிறமூட்டிகளாக, அழகு சாதனப் பொருள்களாகப் பல்வேறு பயன்பாட்டுக்கு ஈரோடு மஞ்சள் உதவுகிறது. இத்தகைய காரணங்களுக்காகத்தான் ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சளில் இருக்கும் `குர்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதே இதற்குக் காரணம். இதுவே இதன் சிறப்பாகவும் கருதப்படுகிறது. 

பொதுவாக ஒரு பொருளுக்குப் புவிசார் குறியீடு பெறுவது எப்படி, எத்தனை நாள்களுக்குள் பெறலாம் என்பதுபோன்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். அதுகுறித்து விரிவாக விளக்குகிறார் புவிசார் குறியீடு தலைமை அலுவலர் சின்னராஜா.

``குறைந்தபட்சம் 200 வருடங்களுக்கு மேலாக விளைவிக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் பாரம்பர்ய பொருளுக்கு புவிசார் குறியீடு பெறலாம். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்னை கிண்டியில்தான் அலுவலகம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும், விவசாயப் பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பொருளுக்குப் புவிசார் குறியீடு பெற வரலாற்றுரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் ஓராண்டுக்குள் சான்றிதழ் பெறலாம். வழக்கறிஞர், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 7 பேர் கொண்ட குழு அதைச் சரிபார்க்கும். இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறுவார்.

ஒரு பொருள் புவிசார் குறியீடு பெறுவதற்கான தகுதியைப் பெற்றாலும், யாருக்காவது அதில் ஆட்சேபம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள புவிசார் பதிவகத்தின் `ஆன்லைன்' இதழில் அறிக்கை வெளியிடப்படும். யாருக்கும் ஆட்சேபம் இல்லாத பட்சத்தில், புவிசார் குறியீடு பெற தேர்வு செய்யப்படும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை மறுபதிவு செய்து கொள்ளவேண்டும். 

மஞ்சளைப் பொறுத்தவரை, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், புவிசார் குறியீடு பெறுவதற்காக 2011 - ம் ஆண்டில் எங்கள் அலுவலகத்தில் பதிவு செய்தனர். களஆய்வு, கலந்துரையாடல், பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன், மருத்துவ ஆய்வறிக்கைகள் எனப் பல்வேறுகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் புவிசார் குறியீடு பெறுவதற்கான தகுதியுடையதாக, எங்களது ஆன் லைனில் பதிவு செய்து, யாருக்கும் மறுப்பு இருக்கிறதா எனக் கேட்டோம். யாருக்கும் ஆட்சேபம் இல்லாததால் அரசிதழில் வெளியிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளோம்.  

இதன்மூலம் இந்திய அரசின் பாரம்பர்யப் பொருள்களில் ஈரோடு மஞ்சளும் உண்டு. உற்பத்திரீதியான வணிகத்தை அதிகரிக்க இது உதவும். மஞ்சளை விளைவிக்கும் விவசாயிகள்தான் இனி அதன் சொந்தக்காரர்கள். இதற்கு முன்பு ஒருமுறை அமெரிக்காவில் இந்திய மஞ்சளில் உள்ள மருத்துவக் குணங்களைக் கண்டறிந்து, காப்புரிமை பெற முயற்சி செய்தார்கள். இந்திய அரசாங்கம் அதை முறியடித்தது. இனி அதற்கான வாய்ப்புகள் இல்லை. உலகில் எந்தவொரு தனிநபரோ அல்லது நாடோ இனி மஞ்சளுக்கு உரிமை கோர முடியாது. 

மஞ்சளைத் தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டு நெசவு முறை மற்றும் கலை நேர்த்திக்காக இது வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து இந்தப் பட்டு நெசவு செய்யப்படுகிறது. திருபுவனம் பட்டு சொசைட்டிதான் இதற்கான கோரிக்கையை வைத்து தரவுகளைப் பதிவு செய்தது. அந்தவரிசையில் பழநி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் சீரகச் சம்பா, பண்ருட்டி பலாப்பழம், ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகிய பொருள்கள் பரிசீலனையில் இருக்கின்றன'' என்கிறார் சின்னராஜா. 

ஒருபொருளுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், சர்வதேச அளவில் அதன் விற்பனை வாய்ப்பும், விலையும் அதிகரிக்கும். அதனால் தங்களின் பாரம்பர்யப் பொருள்களைக் காக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இதுபோன்ற அங்கீகாரப்படுத்துதலுக்கான முயற்சிகளை மேற்கொண்டு, நம் பாரம்பர்யத்தைக் காக்கவேண்டும்.