Published:Updated:

‘நீர்த்தேக்க தொட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லை’ - மாசுபடிந்த குடிநீரால் பொதுமக்கள் அவதி

water

‘நீர்த்தேக்க தொட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லை’ - மாசுபடிந்த குடிநீரால் பொதுமக்கள் அவதி
‘நீர்த்தேக்க தொட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லை’ - மாசுபடிந்த குடிநீரால் பொதுமக்கள் அவதி

வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீரைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலுள்ள கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியம்பள்ளி, வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியிலுள்ள நெடும்பலம், பாமணி, பெரிய சங்களாந்தி, மேல் மருதூர், கீழப்பனையூர், எடையூர், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் தண்ணீரைக் கொண்டுதான் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடந்த மார்ச் 8-ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இப்பணிகள் சரி செய்யப்பட்டு நேற்று (மார்ச் 13) முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முதல் இதுவரையில் திடீர் திடீரென பொதுமக்கள் வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆங்காங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த நாகை மாவட்டக் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் திருவாரூர் மாவட்டக் கலெக்டர் ஆனந்த் ஆகியோர்  மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினரும் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீரால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், ``குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பின்னரே, அனைவரும் பயன்படுத்த வேண்டும்’’ என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ``கஜா புயல் பாதிப்புக்குப் பின் இப்பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக பராமரிக்கவில்லை. அதனால் மாசுபடிந்த குடிநீரையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சேதமடைந்த குடிநீர்க் குழாய்களில் தேங்கியிருந்த கழிவுப் பொருள்களை அகற்றாமல் அவசர கதியில் சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்த காரணத்தால்தான் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போதுள்ள நிலையில் குடிநீரை  கண்டாலே அச்சப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

படங்கள் : பா.பிரசன்னா