Published:Updated:

காமமும் கற்று மற 13 - சுகம்தானா குடும்பத்தலைவிகளே?

காமமும் கற்று மற

கூடற்கலை - 13

காமமும் கற்று மற 13 - சுகம்தானா குடும்பத்தலைவிகளே?

கூடற்கலை - 13

Published:Updated:
காமமும் கற்று மற

`கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடைக்காலம் உனைக் காண வேண்டும்
நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழைக் கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்...’
                                                 - கவிஞர் நா.காமராசன்


``என்னது... பெண்களுக்கும் பாலியல்ரீதியான பிரச்னைகள் உண்டா... அவர்களும் ஆசைப்பட்டு அழைப்பார்களா... என் மனைவி ஒருநாளும் அப்படி அழைத்ததில்லையே… நான் ஆசையோடு நெருங்கினால் என்னுடன் இணங்குவாள்; எனக்கு விருப்பமில்லாத நாள்களில் அவளை நான் நெருங்கியதில்லை; அவளும் என்னிடம் ஒரு நாளும் தாம்பத்ய உறவு பற்றிக் கேட்டதே இல்லை. இவையெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கின்றன. சுவாரஸ்யத்துக்காக இப்படியெல்லாம் எழுதுகிறீர்களா?’’ என்னிடம் கேட்டேவிட்டார் அந்தத் தொழிலதிபர்.

ஆண், பெண் உடல் அமைப்பு, ஹார்மோன்களின் வேலை... என மருத்துவ ஆதாரங்களைச் சொல்லி விளக்கியும், எனது பதிலில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

‘`நான் கொடுப்பதுதான் அவளுக்குச் சுகம். நான்தான் அதைத் தருகிறேன். அதைப் பெறும்நிலையில் அவள் இருக்கிறாள். எனவே, அவள் என்னைக் கேட்பதில்லை; நான் தரும்போது மறுப்பதுமில்லை’’ என்று அடித்துச் சொன்னார் அவர். நண்பர்கள் வட்டாரத்தில், `படு ரொமான்ட்டிக்கானவர்’ என்ற பெயர் வேறு அவருக்கு உண்டு. ஆனால், அவரது சொந்த அனுபவத்தைக் கேட்டால், அதன் குறுக்குவெட்டு வேறு மாதிரியாக இருந்தது.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

நாங்கள் சந்தித்துக்கொள்ளும் கிளப்பின் உறுப்பினர்கள் பலர் மத்தியில், இது பேசுபொருளாகவே மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு இந்த டாபிக் ஓயவே இல்லை. ஆளாளுக்குத் தங்கள் மனைவி, கேர்ள் ஃப்ரெண்ட், எக்ஸ், ஒய்... எனச் சொந்த அனுபவங்களைப் பற்றிப் பொதுவெளியில் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாலியல் மருத்துவர்களும், அது குறித்த ஆய்வாளர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான். உண்மையில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட தாம்பத்யம் என்பது ‘பேசுபொருள்’ என்பதை மறந்து அல்லது மறைத்து, `பேசாப்பொருள்’ ஆக்கிவிட்டார்கள்.

இங்கே எத்தனை ஆண்கள், தங்கள் இணையிடம் தாம்பத்யம் குறித்து முழுமையாகப் பேசுகிறார்கள்... தாம்பத்ய உறவில் முழு திருப்தி அடையும் எந்த ஆணாவது, தனது துணையின் திருப்தி பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாரா... அப்படிக் கேட்பவர்களின் எண்ணிக்கை கூடும்வரை பெண்களையும், அவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வதற்குச் சாத்தியமே இல்லை. ஆண்கள் இனியேனும் அதைக் கற்றுத் தெளிய வேண்டியது அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறிகுறிகள், வகைகள்

பாலியல் உணர்வு சுழற்சியின் (Sexual Response Cycle) அடிப்படையில்தான் பெண்களுக்கான பாலியல் பிரச்னைகளின் வகைகள் அமைகின்றன. இவற்றில் எந்த ஒரு நிலையை அடைய முடியாமல் போவதும், உறவில் திருப்தி ஏற்படுவதைத் தடுத்துவிடும். பாலியல் வாழ்க்கையில் திருப்தி ஏற்படாதநிலையில், உறவில் விரிசல் விழுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.

பாலியல் உணர்வின்மை

தாம்பத்யத்தில் இருபாலருக்குமே பாலியல் உறவுக்கான நாட்டமும் ஆசையும் மிகவும் அவசியம். சமயங்களில் இருவருக்கும் இது இல்லாமல் போகலாம். பாலியல் உறவில் நாட்டமின்மை என்பது, பாலியல் உறவு சுழற்சி தொடங்குவதற்கு முன்னரே அதை நிறுத்திவிடும். இது சிலருக்குத் தற்காலிகமாகவும், சிலருக்கு நீண்ட நாள்களுக்கும் இருக்கும்.

காமமும் கற்று மற 13 - சுகம்தானா குடும்பத்தலைவிகளே?

எழுச்சித் தடை

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் எழுச்சி உண்டு. சில நேரங்களில் தாம்பத்ய உறவில் நாட்டமின்மை காரணமாக, அவர்கள் எழுச்சி அடைய முடியாமல் போகலாம். இல்லையென்றால், ஆணின் செயல்பாடு அவர்களை முழுதிருப்தி அடையச் செய்யாமல் போகலாம். இவையும் அவர்களின் தாம்பத்ய உறவு நாட்டத்தைக் குறைத்துவிடும்.

உறவின்போது வலி

சில பெண்களுக்கு உறவில் ஈடுபடும்போது வலி (Dyspareunia) ஏற்படலாம். முதன்முறை உறவுகொள்ளுதல், இலகுவற்ற தன்மை, மனத்தடை போன்ற பல காரணங்களால் அவர்களால் தாம்பத்யத்துக்கு ஒத்துழைக்க முடியாத சூழலில் இப்படி நிகழும். இதன் காரணமாகவும், பாலியல் உறவில் நாட்டமில்லாமல் போகலாம்.

காரணத்தைக் கண்டறிந்தால், மேற்கண்ட பிரச்னைகள் அனைத்தும் மிக எளிதாகச் சரிசெய்யக் கூடியவையே. வந்த பிறகு சரிசெய்வதைவிட, வரும்முன் காப்பது இன்னும் நல்லது.

- கற்போம்...

சுகம்தானா குடும்பத்தலைவிகளே?

தாம்பத்யத்தில் முழு திருப்தி அடையாமல் இருப்பது, தாம்பத்ய உறவில் ஆசைகொண்ட, உணர்ச்சிகள் எழுச்சியடையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, உறவின் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாத காரணத்தால், ஒரு கட்டத்தில் அவர்களுக்குப் பாலியல் உறவுமீது நாட்டம் குறைந்துவிடும். இப்படிப்பட்ட பிரச்னைகளால் ஏறத்தாழ
7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம்வரையிலான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்தப் பெண்கள் பல ஆண்டுகளாகக் கணவனுடன் வாழும் குடும்பத்தலைவிகள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.