சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

பாகுபலி மாதிரி சிவலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு மலையில் ஓட வேண்டாம்; மூச்சிரைக்காமல், முதுகு பிடிக்காமல், 25 லிட்டர் தண்ணீர் கேனை அதன் இணைப்புப் பாத்திரத்தில் கவிழ்த்து வைக்கவாவது முடியவேண்டும் இல்லையா? நாற்பதில் பலருக்கு அது முடியாததாகிப் போய்விட்டது. அதற்கும்கூட, அல்ஜீப்ராவில் சிக்கிச் சின்னா பின்னமாகிக்கொண்டிருக்கும் பத்தாம் வகுப்புப் பையன் தேவைப்படுகிறான். ஆமாம்! இன்றைய நாற்பதுகள் பலருக்கும் தொப்பை வயிற்றில் மட்டுமல்ல; கன்னத்தில் தொப்பை, கையில் தொப்பை, கீழ்த்தாடையில் தொப்பை. அத்தனை தசையும், இளநீர் குடித்த பின்னர் சுரண்டித் தின்னும் வழுக்கை மாதிரி ‘கொழகொழ’வெனத் தொங்கிப் போயிருக்கிறது. 

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

அப்போதெல்லாம் வீடுகளில் பெரிய நிலைக்கண்ணாடி இருக்கும். பெரிய கல் வீடுகளில் கொஞ்சம் பெரிதாக பெல்ஜியம் கண்ணாடிகள்கூட  ஒன்றிரண்டு இருக்கக்கூடும். ஆனால், அதிலும்கூட அதிகபட்சம் தோள்பட்டைவரைதான் தெரியும். அப்பா ஷேவிங் செய்ய வைத்திருக்கும் கண்ணாடியோ போஸ்ட்கார்டு சைஸில் இருக்கும். நடுவில் குறுக்காய் உடைந்து கோடுவேறு விழுந்திருக்கும். அந்தக் கண்ணாடியை இடது கையில் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, வலது கையில் ரேசரைப் பிடித்து, முகத்தைப் பளபளவென அவர் ஷேவிங் செய்வது சின்னதாய் ஒரு சர்க்கஸ்தான். கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி, முகத்தில் கீறல் விழுந்து, அதுவரை ‘பொன்னம்பலமாய்’ இருந்த முகம், ‘பிளேடு பக்கிரி’யாய் மாறிவிடும். இப்படி, அந்தக்காலத்து வீட்டுக் கண்ணாடிகள் பெரும்பாலும் நம் அழகு முகத்தை மட்டுமே காட்டின. எண்ணெய் தடவிய முடியைத் துல்லியமாய் வகிடு எடுக்கவும், மோதிர விரலில் சாந்துப்பொட்டை எடுத்து நெற்றி முடி குழைந்து வெட்கிச் சந்திக்கும் நெற்றிப்பொட்டில் வைக்கவும், ஆள்காட்டி விரலில் எடுத்த ஐடெக்ஸ் மை, கண்ணீரைத் தராமல் இமைக்கும் இறங்காமல், இமை முடியில் இழையோட வைக்கவும் மட்டுமே கண்ணாடிகள் பயன்பட்டன.

ஒருபோதும் அக்கண்ணாடிகள், இருபாலரின் தொப்பைகளைக் காட்டவே இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை. வீட்டுக்கு வீடு டிரெஸ்ஸிங் டேபிள் வந்துவிட்டது. அந்த ஆளுயரக் கண்ணாடிகளை யதேச்சையாய்க் கடக்கும்போதெல்லாம், அதில் தெரியும் நம் உருவமே,  நம்மைப் பார்த்து ‘கெக்கே பிக்கே’ எனச் சிரிப்பதில் சங்கடம் ஏகத்துக்கு வருகிறது. ஆனால் அதைக்கூட அலட்சியமாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் மோசமில்லை’ எனக் கண்ணாடி முன்னால் மூச்சைப்பிடித்துத் தொப்பையை விழுங்கி, ஆசுவாசப் படுத்திக்கொள்வோர் நாற்பதுகளில் சற்றே அதிகம்.

அன்றைய நாற்பதுகள், தங்களுக்கு வரும் தொப்பையை ‘இதெல்லாம் வயசானால் வரத்தான் செய்யும்; வசதியான வாழ்வின் அடையாளமாக்கும்; பண்ணையார் அழகு’ எனக் கடந்துபோய்க்கொண்டிருந்தனர். இப்போது அப்படி இல்லை. ‘நின்று குனிந்து பார்க்கையில், குறைந்தபட்சம் கால் பெருவிரலாவது தெரிய வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியம் தெரிகிறது என்று பொருள்’ என்கிற படிப்பைப் பள்ளிக்கூடமே சொல்லிக்கொடுத்துவிட்டது.

 ஆனால், நம் துரதிர்ஷ்டம், கால் பெருவிரல் இல்லை... பலருக்குக் குனிந்து பார்த்தால் பூமியே தெரியவில்லை. இன்றைய முழுக்கண்ணாடிகள் அழகை மட்டும் காட்டும் பொருள் அல்ல; ஆரோக்கியத்தைக் கோடிட்டுக் காட்டும் பொருளும்கூட.

ஆம் நண்பர்களே! இறுக்கமான கட்டுடல் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகின் அடையாளம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் முகவரியும்கூட. அதற்கான மெனக்கெடல் மிக மிக அவசியம். சத்தியமாய் எந்த மாத்திரை மருந்தாலும், தொப்பையைக் கரைக்க முடியாது. சில கொழுப்பு எரிப்பான்கள் (fat burners)நாம் எடுக்கும் முயற்சிக்குப் பக்கபலமாக இருக்கும். அவ்வளவுதான். சிக்கென்ற கட்டுடலைப் பெற மூன்று பெரு முயற்சிகள் தேவை. 1. யோகாசனம் 2. உடற்பயிற்சி 3. விளையாட்டு. யோகாசனக் கலை பற்றி மிக நுட்பமாய்ப் பேசவேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளன.

சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி மட்டும் யோகா பனியனுக்குள் உடலைத் திணித்துக்கொண்டு, முகநூலில் திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு, புதிய யோகிகள் பயமுறுத்துகிறார்கள்.
யோகா தொப்பைக்கும் நோய்க்குமான மருந்து மட்டுமல்ல, அதையும்தாண்டிப் புனிதமானது. அதன் ஆழமும் அகலமும் ஆந்த்ரோபாலஜியும் சோஷியாலஜியும் பெரிதினும் பெரிது. அடுத்த சில வாரங்களில் யோகாவைப் பற்றி விரிவாகப் பேசுவோம். தற்போது உடற்பயிற்சியையும் விளையாட்டையும் மட்டும் கொஞ்சம் வியர்க்க வியர்க்கப் பார்க்கலாம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

சுகர் கொஞ்சம் ஏறிவிட்டது என்பதாலோ, கணவன் இப்போதெல்லாம் கடைக்கண்ணில் பார்ப்பதில்லை என்பதாலோ, கண்ணாடியில் பார்க்கும்போது  ‘பிப்பெட் பியூரட்’ மாதிரி இருந்த உடம்பு, ‘சின்ன சைஸ் பீக்கர்’ மாதிரி ஆகிப்போன காட்சி அடிக்கடி தென்படுவ தோலோ, ‘நாளையிலிருந்து ஓடப்போகிறேன்; பக்கத்து வீட்டு அக்காவோடு பேட்மின்டன் விளையாடப்போகிறேன்’ என நடு இரவில் சங்கல்பம் செய்துவிட்டு, அதிகாலையில் நைக் ஷூ, டிராக் ‌ஷூட் என அலங்காரம் செய்து, களத்தில் இறங்குவது கொஞ்சம் ஆபத்து. விளையாட்டு நிச்சயம் நல்லதுதான். ஆனால், அதற்கு முன்னதாக உடற்பயிற்சி வேண்டும்.

 என்ன பயிற்சிகள்? மூன்று வகையான பயிற்சிகள் அவசியம். 1. இதய நுரையீரல் தசைகளுக்கான உடற்பயிற்சி (Cardio respiratory fitness) 2. தசைகளுக்கான உடற்பயிற்சி (muscle fitness) 3. மூட்டுகளுக்கான உடற்பயிற்சி (joint fitness). இவற்றில், இதய நுரையீரலுக்கான உடற்பயிற்சி மிக முக்கியமானது. ஏரோபிக் (Aerobic exercise), எண்டியூரன்ஸ் (Endurance exercise) என்ற செல்லப்பெயர்கள் இதற்கு உண்டு. மொத்தத்தில், இப்பயிற்சிகள் மூலமாகத்தான் எல்லா தசைகளுக்கும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். இந்த ஃபிட்னஸ் இல்லாமல், ஆஞ்சநேயர் கதம் தூக்கிக்கொண்டு போகிற ஸ்டைலில், மட்டையை வைத்துக்கொண்டு பட்டையைக் கிளப்பலாம் என்று போனால், விளையாடும்போது கை கால் தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அந்தத் தசைகள் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு.  தசை நாண்கள் கொஞ்சம் முறுக்கி, பிய்ந்துபோகவும் வாய்ப்புண்டு.  சில நேரங்களில் இதயத் தசைகள் திணறுகையில் மாரடைப்பு வரை கொண்டு செல்லக்கூடும். ‘டாக்டர்தானே விளையாடச் சொன்னார்? முதல்ல அவருக்கு போனைப் போடு... அல்லது அவர் மேல கேஸைப் போடு’ எனக் கிளம்பிவிடக் கூடாது. எல்லா விளையாட்டுக்கும் முன்னர் ஃபிட்னஸ் மிகவும் அவசியம். உங்கள் கல்லூரிக்காலத்தில், மனசுக்குப் பிடித்தவர்களிடம் கடிதம் கொடுக்கும் முன்னர், லேசாக முகத்தைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ரெஸ்பான்ஸ் கிடைக்குதா?’ என்று வழிந்த மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். விளையாடப்போகும் முன்னர் பயிற்சி கட்டாயம்.

இதய நுரையீரல் உடற்பயிற்சி மூலமாக வாழ்நாள் அதிகரிக்கிறது. சர்க்கரை நோய்,  ரத்த அழுத்தம், மாரடைப்பு வருவது குறைகிறது என்று ஆய்ந்து அறிந்து சொல்லிவிட்டார்கள். VO2 Max என்கிற பார்முலா (ரத்த நாடியில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ரத்த நாளத்தில் உள்ள ஆக்சிஜன் வேறுபாடுகளை, இதயம் துடிக்கும்போது வெளிப்படும் ரத்தத்தின் கொள்ளளவோடு பெருக்கி, கணக்கிடுகிறார்கள்) இதற்கு அடிப்படை. அந்தக் கஷ்டமான  VO2= Q x CaO2-Cv O2 என்ற பார்முலாவெல்லாம் நமக்குத் தேவையில்லை. நமக்குத் தெரிய வேண்டியது vo2 max என்ற அளவுதான். இந்த அளவை இதய நுரையீரல் பயிற்சியில் அதிகரிக்க முடியும்.  அப்படி அதிகரித்தால் நிச்சயம் ஆயுள் கூடும்; சுகர் கூடாது; திடீர் மாரடைப்பு வராது என்பதுதான்.

அடுத்ததாக, தசைகளுக்கான உடற்பயிற்சிகள். இவை விளையாடப் போகும் முன்னர் ரொம்ப அவசியம். தசையின் வலு திறம்பட, நீடித்த உடலுறுதிக்குத் தயாராக, தசை நாண்கள் சேதமடையாமல் இருக்க, விளையாடும்போதும் இரவு உறங்கும்போதும் வலி கொடுக்காமல் இருக்க உதவும் பயிற்சிகள்.

மெல்லிய வேகத்திலான ஓட்டம், ‘ஸ்குவாட்’ (மேற்கத்திய கழிப்பறையில் உட்கார்வதுபோல் உட்கார்ந்து எழும் பயிற்சி), குப்புறப் படுத்து கைகளால் உடல் எடையைத் தூக்கி இறக்கும் புஷ் அப்ஸ் (Push ups), கிரஞ்சஸ் (Crunches), ட்ரைசெப்ஸ் டிப்ஸ் (Triceps Dips) என தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் நிறைய உண்டு.  சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு சினிமாவில் செய்வதையெல்லாம் யூடியூபில் பார்த்துப் பரவசப்பட்டு அதைச் செய்ய முயலாமல், முறையாக அதற்கென உள்ள பயிற்சியாளரை அணுகிக் கற்றுக்கொள்ளுங்கள். தசைகளுக்கான பயிற்சியை முறையாகச் செய்ததற்குப் பின்னர் விளையாடச் செல்வது,  ஒரேநாளில் விளையாட்டை மூட்டை கட்டி வைக்காமல் இருக்க உதவும்.

மூட்டுகளுக்கான உடற்பயிற்சி மிக மிக அவசியமான ஒன்று. மூட்டுகளை முழு அளவில் மடக்கி நீட்டும்தன்மை, சுழலும்தன்மைகளைப் பயிற்சியின் மூலம் முழுமையாகப் பெற்ற பின்னரே காலால் பந்தை உதைக்கவும், மட்டையால், பூப்பந்தை விளாசவும், பும்ரா மாதிரி பந்தை வீசவும் முயல வேண்டும். பள்ளியில் விளையாட்டு வகுப்பில்கூட, பொய்யாக டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொடுத்துவிட்டு மரத்தடியில் பாடத்தைப் படித்த முதல் பெஞ்ச் படிப்பாளிகள் நம்மில் சிலர் இருக்கலாம். அவர்கள், நாற்பது வயதில் தொப்பை பெருகி இருக்கும்போது, நேரே மைதானத்துக்கு வந்து, பும்ராவை நினைத்துக் கொண்டு பந்து வீசப்போனால், கை சுளுக்கி, தோள்பட்டை நாண் பிய்ந்து... அப்புறம் பனியனைக் கழற்றி விட வீட்டம்மாவை உதவிக்குக் கூப்பிட நேரிடும்.

 மூட்டுகளை, இணைப்புத்தசைகளை, நாண்களை வலுவாக்கச் சிறப்பான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவை விளையாடுவதற்கு மட்டுமல்ல, மூட்டுவலி, கழுத்துவலி நீங்குவதற்கான சிகிச்சையும்கூட. நாற்பதுகளில் பெண்கள் பலருக்கும் வரும் குறுக்கு வலி, சற்று எடை கூடுவதால் வரும் மூட்டுவலிக்குக்கூட இந்தத் தசை மூட்டு உடற்பயிற்சிகள் பெரிதும் உதவும். ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகள், நீச்சல் பயிற்சி ஆகியவை இடுப்பு, கால், கழுத்து, முதுகுத்தண்டுவட மூட்டுகளை வலுவாக்கும்.

உடற்பயிற்சிக்கென்றே பிரத்யேக உடை, காலுறை, காலணி இவற்றோடு, முடிந்தால் உங்கள் இணையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அந்தப் பயிற்சிகளின்போது, மெல்லிய இசையும் கூடவே சின்னச் சின்னதாய் ஒருவரை ஒருவர் செய்யும் எள்ளலும் தினம் மறக்காமல், ‘அட நீயா இது... எங்கப்பா போச்சு உன் தொப்பை?!’ என ஏகத்துக்குப் பாராட்டும் சேர்ந்துவிட்டால், நான்காவது பிட்னஸும்கூட வாய்க்கும். ‘அதென்ன நான்காவது பிட்னஸ்’ என, இதைப்படிக்கும் கவித்துவமான நாற்பதுகள் சத்தியமாய்க் கேட்க மாட்டார்கள்.

- இனியவை தொடரும்...

- கு.சிவராமன்;  ஓவியம்: சந்தோஷ் நாராயணன்

நீச்சல்

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

நாற்பதுகளுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் முதலிடம் நீச்சலுக்குத்தான். ‘மூட்டு தேயும், தசை பிடிக்கும், லிகமென்ட் பிய்ந்துபோகும்’ என எவ்வித பயமும் இல்லாமல், ஒட்டுமொத்த தசைகளையும் உள்ளுறுப்புகளையும் வலுப்படுத்த முடியும் என்றால் அது நீச்சலால் மட்டும்தான். முதுகுவலி, கழுத்துவலி உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் வலிபோக்கும் ஒருவித சிகிச்சையும் நீச்சல்தான். ‘கார்டியோ ரெஸ்பிரேடரி, தசை, மூட்டு ஃபிட்னஸ்’ என்ற மூன்று வகை ஃபிட்னஸ்களையும் கொடுக்க நீச்சலால் மட்டுமே முடியுமாம். ‘நீச்சலா, இந்த வயசுக்கு மேலயா?’ எனத் தயங்க வேண்டாம். மூன்றே நாள்களில் மீனாய் நீந்த வைக்கப் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்கள் நம்மூரில் நிறைய உண்டு.

இதய நுரையீரல் உடற்பயிற்சிகள்

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8

வேக நடை, ஓட்டம், நடனம், நீச்சல், சைக்கிள், படிக்கட்டுகள் ஏறுதல், டென்னிஸ், கால்பந்து மாதிரி விளையாட்டும்கூட.

‘இதையெல்லாம் செய்ய நேரமில்லை, மைதான மில்லை. கூட வர நண்பர்கள் இல்லை’ என்பவர்கள், கார் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது. தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்வது, வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைத்து அதில் 45 நிமிஷம்  முழுமையாய்ச் செயல்படுவது, அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வது ஆகியவற்றைச் செய்யலாம். இவையும்கூட மிகச்சிறந்த இதய நுரையீரலுக்கான உடற்பயிற்சிதான். ‘குறைந்தபட்சம் வாரத்துக்கு 150 நிமிஷம் இப்படியான பயிற்சி மட்டுமே ஆயுளைக் கூட்டும்’ என்கிறது அமெரிக்க இதய நிபுணர் கூட்டமைப்பு.