Published:Updated:

"தேர்தல்னாலே மன அழுத்தம்தான்..!’’ - சி.பி.எம் கே.பாலகிருஷ்ணன் #LetsRelieveStress

சில இடங்களில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை மனுவாக அளிப்பார்கள். அதற்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். அப்போது, `எனக்கு அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டது...’ என்று மக்களை தட்டிக்கழித்துவிட்டுச் செல்ல முடியாது. இப்படியாகத் தேர்தல் நேரங்களில் பல குறுக்கீடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

"தேர்தல்னாலே மன அழுத்தம்தான்..!’’ -  சி.பி.எம் கே.பாலகிருஷ்ணன்  #LetsRelieveStress
"தேர்தல்னாலே மன அழுத்தம்தான்..!’’ - சி.பி.எம் கே.பாலகிருஷ்ணன் #LetsRelieveStress

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டனர். தங்களுடைய வேட்பாளர்களை வெற்றிபெறவைக்க, கட்சியின் தலைவர்களும் களத்தில் இறங்கி பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டனர். மற்ற நேரங்களைவிடத் தேர்தலின்போது கட்சித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் மனஅழுத்தம் என்பது கூடுதலாகவே இருக்கும். அதேபோல, அவர்கள் தங்களுடைய `ஹெல்த்' விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள்?

முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.  

``வழக்கமாக தேர்தல் நேரத்தில் நேரம் காலம் பார்க்காமல் சுற்ற வேண்டியிருக்கும். ஆனால், இப்போது இரவு 10 மணியுடன் பரப்புரை முடிந்துவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் வரக்கூடிய பிரச்னை என்னவென்றால், ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்போம். குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த இடங்களுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அங்கு மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகும். சில இடங்களுக்கெல்லாம் போய்ச் சேரவேமுடியாது. போய்ச் சேர்ந்தாலும் சில நிமிடங்கள் கூட பேச முடியாமல் போய்விடும். இப்படியான இடர்பாடுகள் தினம்தினம் நடக்கும். ஏனெனில், அரசியல் பரப்புரைக்காகச் செல்லும்போது அதை மட்டுமே செய்யமுடியாது. வழியில் வாக்காளர்களின் கோரிக்கைகளையும், கட்சி ஊழியர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டியிருக்கும்.

சில இடங்களில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை மனுவாக அளிப்பார்கள். அதற்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். அப்போது, `எனக்கு அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டது...’ என்று மக்களைத் தட்டிக்கழித்துவிட்டுச் செல்ல முடியாது. இப்படியாகத் தேர்தல் நேரங்களில் பல குறுக்கீடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மற்ற நேரங்களில் செல்லும்போது மக்கள் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் வருகிறபோது, 'அவர்களைப் பார்க்கலாம், பேசலாம், அவர்களுடன் புகைப்படம், செல்பி எடுத்துக்கொள்ளலாம்' என்கிற ஆர்வத்தோடு வருவார்கள். அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட  முடியாது. இப்படியான இடர்பாடுகள் எல்லாம் வரத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளிக்கத்தான் வேண்டும். 

அதே மாதிரி, அரசியல் களத்தில் அன்றன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டியிருக்கும். இன்றைக்கு ஒரு பிரச்னை வரும். நாளை வேறொரு பிரச்னை வரும். எதிர்க்கட்சிகள் புகார் கூறுவார்கள். ஆக, ஒவ்வொரு நொடியையும் கவனித்து, அதற்கேற்ப பதில் சொல்லவேண்டும். இப்படியாகத் தயார்நிலையில் இருந்தால்தான் அரசியல் பரப்புரையைச் சிறப்பாகச் செய்யமுடியும். 

முன்பு, ஒரு ஊரில் பேசியதை அடுத்த ஊரிலுள்ள மக்கள் கேட்க வாய்ப்பு இல்லை. ஆனால், இன்று தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் ஒரு ஊரில் பேசியதை, உலகமெங்கும் உள்ள மக்கள் கேட்கும் வாய்ப்பு வந்துவிட்டது. ஆக, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசிவிடமுடியாது. அதனால், ஒவ்வொரு ஊருக்கும் செல்கிறபோது அந்த ஊரினுடைய தற்போதைய நிலைமை, பிரச்னை போன்றவற்றை எடுத்துக் கையாண்டால்தான் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஆர்வமாகக் கேட்பார்கள். அதற்காக நம்மைத் தயார்செய்துகொள்கிறபோது நெருக்கடி ஏற்படத்தான் செய்யும்.  

இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி என்ன பேசியிருக்கிறார், மாலையில் என்ன பேசியிருக்கிறார் என்பது தெரிந்தால்தான் அடுத்தக் கூட்டத்தில் அதைப்பற்றிப் பேச முடியும். அதுமட்டுமல்லாமல், மோடி மக்களுக்கு எதைச் செய்ய தவறியிருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யவில்லை என்று அந்தந்த அணியின் மீது இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை இருக்கிறது. அதேநேரத்தில் மக்களுக்கு என்ன மாற்றை நாங்கள் முன்வைக்கிறோம் என்பதும் முக்கியம். எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதால் மட்டுமே மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நிலைமை இப்போது கிடையாது. இவையெல்லாம் பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கிற பிரச்னைகளாக இருக்கிறது!” என்கிற கே.பாலகிருஷ்ணனிடம், அவருடைய டயட் குறித்துக் கேட்டோம். 

``எளிய உணவுகளையே சாப்பிடுவேன். வாக்காளர்களைச் சந்திக்கிறபோது அவர்கள்  கூல்ட்ரிங்க்ஸோ, மோரோ, இளநீரோ தரும்போது `வேண்டாம்' என்று மறுக்கமுடியாது. அவர்களுடைய திருப்திக்காக கொஞ்சமாவது குடிக்க வேண்டியிருக்கும். அதனால் சில பாதிப்புகள் ஏற்படும். மக்கள் அன்பாகத் தருகிறபோது அதைத் தட்டிக்கழிப்பது அவர்களின் மனதை நோகச்செய்யும். அதனால் எதுவாக இருந்தாலும் அந்த உபசரிப்பை ஏற்றுக்கொள்வேன். 

தேர்தல் நேரங்களில் கூடுமானவரை அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. போகும் வழியில் ஏதேனும் ஒரு தோழர் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டுவிட்டு செல்வேன். சில தருணங்களில் ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருக்கும். பல நேரங்களில் நமது உணவுக் கட்டுப்பாடுகளை மீற வேண்டியிருக்கும். கூடுமானவரை மூன்று வேளையும் அளவாகச் சாப்பிடுவதும், அசைவ உணவைத் தவிர்ப்பதுமே தேர்தல் நேரங்களில் நான் கடைப்பிடிக்கிற வழிமுறை!” என்கிறார் கே.பாலகிருஷ்ணன்