Published:Updated:

தூக்க மாத்திரைக்கு அடிமையானவர்களை மீட்பது எப்படி?

தூக்கமின்மைக்கான மாத்திரையைத் தினமும் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம் என்கிறது ஓர் ஆய்வு.

தூக்க மாத்திரைக்கு அடிமையானவர்களை மீட்பது எப்படி?
தூக்க மாத்திரைக்கு அடிமையானவர்களை மீட்பது எப்படி?

'திகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்படலாம்' என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. `ஜீரியாடிரிக்ஸ் மற்றும் ஜிரன்டோலஜி இன்டர்னேஷனல்' (Geriatrics & Gerontology International) என்ற இணையப் பத்திரிகை செய்த ஆய்வில், தினமும் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களுக்கு ரத்தஅழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தூக்கமின்மைக்கான மாத்திரையைத் தினமும் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆய்வுகள் அனைத்தும் நடுத்தர வயதினருக்கே செய்யப்பட்டன. தற்போது முதல்முறையாக முதியவர்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர் ரத்தஅழுத்தப் பாதிப்புள்ள 752 முதியவர்கள்  5 ஆண்டுக்காலம் இந்த ஆய்வுக்காக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டனர். அதில் 156 பேர், தங்களது உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வுகள் குறித்தும், தூக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் சூழல் குறித்தும் பொது மருத்துவர் தினகரனிடம் கேட்டோம்.
"தூக்கமின்மைக்கான மாத்திரைகள் யார் யாருக்கு பரிந்துரைக்கப்படும் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாகத் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நிம்மதியான ஓய்வு தர வேண்டுமென்பதற்காக இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அளவுக்கு மீறிய வலி உணர்வால் அவதிப்படுபவர்களுக்குச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்திருந்தாலோ அல்லது அவருக்குத் தீவிர உடல் சோர்வு பிரச்னை ஏற்பட்டிருந்தாலோ தூக்கம் வராமலிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலிலும் இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் முதலில் வலி நிவாரணிகள்தான் தரப்படும். அதில் தீர்வு கிடைக்காதபோது, தூக்க மாத்திரைகள் தருவார்கள்.

மனநலம் சார்ந்து ஏதேனும் பிரச்னை இருந்தாலும் சிலருக்கு தூக்கம் தடைபடும். அப்படிப்பட்டவர்களுக்குத் தூக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு தூக்கம் தடைப்பட்டாலும் தூக்கமின்மைக்கான மாத்திரை பரிந்துரைக்கப்படும். எத்தகைய பாதிப்பிலிருந்து மீள மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறதோ, அது சரியானதும் மாத்திரைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும். வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு, அதை முழுவதுமாகச் சரிசெய்ய முடியாது என்பதால் மாத்திரையை நிறுத்துவதில் சிக்கல் இருக்கும். சம்பந்தப்பட்ட வாழ்வியல் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிவுரைக்கப்படுவதன் பின்னணி இதுதான். அதாவது, உடலின் அளவீடுகளைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும்போது, இந்த மாத்திரைக்கான தேவை ஏற்படாமல் போகக்கூடும். ஆகவே மாத்திரையை நிறுத்துவது சிக்கலாக இருக்காது.

வாழ்வியல் நோய் பாதிப்பு உள்ளவர் இளம் வயதினர் என்றால், அளவீடுகளை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரலாம். மாத்திரைகள் கொடுப்பதையும் சீக்கிரம் நிறுத்திவிடலாம். வயது முதிர்ந்தவர் என்றால், அளவீடுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் இருக்கும். காரணம், அவர்களுக்கு உடல்நலச் சிக்கலுடன் சேர்த்துக் கூடுதலாக மனநலச் சிக்கல்களும் இருக்கும். அதனால் அவர்கள் இந்த மாத்திரைகளைச் சாப்பிடும் காலம் நீட்டிக்கப்படும். இப்படி நீண்ட நாள்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் ரத்தஅழுத்தம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என்பதே சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. தூக்கமின்மைக்கான மாத்திரை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் பக்கவிளைவுகளைவிட அது ஏற்படுத்தும் நன்மைகளே அதிகம். எந்தவொரு மனிதனுக்கும் உடலுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கும்போது, ஹார்மோன் பிரச்னைகளும் வேறு உடல் உபாதைகளும் பெரிய அளவில் தடுக்கப்படுகின்றன அல்லது தவிர்க்கப்படுகின்றன. ஏற்கெனவே சிக்கலில் இருப்பவர் என்றால், அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இது பயன்படும். 
பெரும்பாலான உயர் ரத்தஅழுத்த நோயாளிகளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை அறிவுறுத்துவதுண்டு. அடிப்படையில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ச்சியாக தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தால், குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம் என்பதும் உண்மை. சில தூக்க மாத்திரைகள், நோயாளிகளை அதற்கு அடிமையாக்கிவிடும். நோயாளியின் உடல் தன்மையைப் பொறுத்து மாத்திரையின் தன்மையும் வேறுபடும். இப்படிப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு, உடலுக்கு ஒத்துப்போகும் வேறு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியிருக்கும். 

கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியை ஆரோக்கியமான வாழ்வியலுக்குக் கொண்டுவந்து, மனதளவில் 'மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும்' என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து வெளிக்கொண்டு வருவார்கள். ஒருகட்டத்துக்குமேல், தூக்க மாத்திரையின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். 'மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும்' என்ற நிலையில் உள்ள சில நோயாளிகள், அவர்களாகவே  மாத்திரை பயன்படுத்துவதை அதிகப்படுத்திக்கொள்வர். உதாரணமாக, ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட வேண்டிய மாத்திரையைத் தினமும் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஒருவகை மனநலச் சிக்கலாக மாறிவிடும். இதுபோன்று மாத்திரைகளுக்கு மனதளவில் அடிமைப்பட்ட நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை அவசியம். ஆரோக்கியமான தூக்கத்தை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை வழியாக அடைய வேண்டுமென்று நோயாளிகள் அறிவுறுத்தப்படுவர். 
தூக்க மாத்திரைகளைக் கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மனரீதியாக அதற்கு அடிமையானவர்கள் மட்டும், முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று அதிலிருந்து வெளியே வரவும்" என்கிறார் தினகரன்.