Published:Updated:

அக்னி நட்சத்திரக் கோடையில் சாப்பிட/தவிர்க்க வேண்டிய உணவுகள்..! #ExpertOpinion

மாங்காய், மாம்பழம், அன்னாசி, பலா போன்ற அனைத்துமே கோடையில் கிடைக்கும் பழங்கள். அவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடாமல் குறைந்த அளவு மட்டுமே சாப்பிடவேண்டும். துரித உணவுகளை `மெல்லிய விஷம்' என்பார்கள். சிலரது இரவு உணவே பீட்சாவாகத்தான் இருக்கும்.

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டினாலே உடல் வியர்வையால் நனைந்து விடுகிறது. 
இந்தக் கோடையை எப்படிச் சமாளிப்பது? 

`எளிய உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் கோடையின் வெப்பத்தை எளிதாகச் சமாளிக்கலாம்' என்கிறார் உணவியல் நிபுணர் அபிராமி. 
கோடைக்காலத்தில் அவசியம் சாப்பிடவேண்டிய உணவுகள், தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை என்று விளக்குகிறார் அவர். 

``கோடைக்காலத்தில் அதிகஅளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். கோடையில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும், 13 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சிலர் கணக்குச் சொல்வார்கள். கணக்குவைத்துக்கொண்டு லிட்டர் லிட்டராகக் குடிக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 150 முதல் 200 மில்லி தண்ணீர் குடிக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ அவர்களது உடல்எடையைக் கணக்கில்கொண்டு, இத்தனை லிட்டர் தண்ணீர்தான் குடிக்கவேண்டும் என்று சொல்வது தவறான விஷயம். போதிய இடைவெளியில் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் சருமம் வறட்சியாகிவிடும்.
உணவுப் பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படும் என்றாலும், நீர்ச்சத்து இழப்பாலும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மலச்சிக்கல் பிரச்னைக்கு 8 பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். 

தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் 4 டீஸ்பூன் பார்லியை நீர்விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். அது பாதியாக வற்றியதும் அதில் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நாள் முழுவதும் குடித்து வந்தால் பிரச்னை சரியாகிவிடும்.

சிலர் கோடை வெப்பத்தைக் காரணம் காட்டி உணவைத் தவிர்ப்பார்கள். வெயில் காலத்தில் ஏற்கெனவே சோர்வாகக் காணப்படுவோம். அப்போது உணவைத் தவிர்க்கும்போது அதிகமாகப் பசியெடுக்கத் தொடங்கும். இதனால் விரைவில் சோர்வாகி, உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். எனவே, மூன்று வேளையும் தவறாமல் சாப்பிடவேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. நீர்ச்சத்துள்ள தக்காளி, வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. 

ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறக் காய்கறிகள், பழங்கள், க்ரீன் டீ ஆகியவற்றை அவ்வப்போது எடுத்துக்கொள்வதன் மூலம் புறஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்காமல் தடுக்கலாம். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாகக் காணப்படும் என்பதால், சருமப் பாதிப்புகளிலிருந்து சருமப் புற்றுநோய் வரை ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டது. அடிக்கடி க்ரீன் டீ எடுத்துக்கொண்டால் சீக்கிரம் முதுமைத்தோற்றம் ஏற்படாமல், இளமையாகத் தோற்றமளிக்கலாம்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்:

மாங்காய், மாம்பழம், அன்னாசி, பலா போன்ற அனைத்துமே கோடையில் கிடைக்கும் பழங்கள். அவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடாமல் குறைந்த அளவு மட்டுமே சாப்பிடவேண்டும். துரித உணவுகளை `மெல்லிய விஷம்' என்பார்கள். சிலரது இரவு உணவே பீட்சாவாகத்தான் இருக்கும். இதுபோன்று தொடர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடுவதால் இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். துரித உணவுகளைத் தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரத்துக்கு ஒருமுறை வேண்டுமானால் சாப்பிடலாம். மதுவை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் முக்கியமாகப் பாதிக்கப்படுவது கல்லீரல்தான். கோடைக்காலத்தில் நமது உடலில் ஏற்கெனவே சூடாக இருக்கும். அந்த நேரத்தில் மது அருந்தும்போது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால் துரித உணவுகளையும் மதுவையும் முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது நல்லது.

கோடையில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைச் சிலர் தவிர்ப்பார்கள். சிக்கன், மீன் ஆகியவற்றை வாரத்துக்கு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரித்தால் அதிலிருக்கும் புரதச் சத்துகள் எண்ணெய்யில் கலந்துவிடும், உடலுக்குக் கிடைக்காது. குழம்பு வைத்துச் சாப்பிடுவதே நல்லது. மட்டன் உள்ளிட்ட பிற இறைச்சிகளை மாதத்துக்கு இரண்டுமுறை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் அவர்.

வீடியோ : கிராபியென் ப்ளாக்

பின் செல்ல