பிரீமியம் ஸ்டோரி
முதல் உதவி!
முதல் உதவி!

ரிஸ் சாய்நாதனுக்கு அன்று பிறந்த நாள். காலையில் வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, பள்ளிக்குச் சென்றான் ஹரிஸ். உணவு இடைவேளையின்போது பசி எடுக்க, வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட்டு இருக்கிறான். நிதானமாக சாப்பிடவேண்டிய பழத்தை குழந்தை அவசர அவசரமாக சாப்பிட முயற்சிக்க, அந்தப் பழம் உணவுக் குழாய் வழியாக இறங்குவதற்குப் பதிலாக மூச்சுக் குழாய்க்குள் போய்விட்டது. உடனே, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட... சுற்றி இருந்தவர்கள் பதட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து இருக்கிறார்கள். அந்த அவகாசத்துக்கு உள்ளேயே வாழைப்பழம் ஹரிஸைப் பலி வாங்கிவிட்டது.  

''உணவுக் குழாய்க்குச் செல்ல வேண்டிய உணவு தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றால்... அதை வெளியேற்ற நம் உடம்பில் இயற்கையாக இருக்கும் மெக்கானிஸம்... இருமல். இருமுகிறபோது, உள்ளே இருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால், மூச்சுக் குழாயினுள் சென்ற உணவு பலமாக உந்தி வெளியே தள்ளப்படும். இதைத்தான் புரையேறிவிட்டது என்று சொல்வோம். இது சகஜமான ஒன்றுதான்.

குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக்குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், பொட்டுக் கடலை, பட்டாணி, வேர்க்கடலை மாதிரியான சிறிய வகை உணவுப் பொருட்கள்கூட மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூச்சுக்குழாயில் அடைத்துக்கொள்ளும் இந்த மாதிரிப் பொருட்களை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைப்பட்டு உயிருக்கேகூட ஆபத்தாகிவிடும். சில சமயங்களில், அடைத்துக்கொண்ட பொருட்களை வெளியேற்றி உயிரைக் காப்பாற்றிவிட்டாலும், அந்த சில நிமிடப் போராட்ட இடைவெளியில், சரியாக ஆக்சிஜன் கிடைக்காது. அதனால், மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது'' என்று எச்சரிக்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்னாள் இயக்குநர், டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

முதல் உதவி!

குழந்தைகள் சாப்பிடும் உணவு தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட்டால், அவர்களுக்கு எப்படி முதல் உதவி கொடுப்பது என்பதையும், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனவும் சொல்கிறார்...

''வாழைப்பழம் போன்ற எளிதில் மசியக்கூடிய உணவாக இருந்தாலும்கூட, மிகச் சிறிய துண்டுகளாக எடுத்துத்தான் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்.  குழந்தைகளை சுயமாக சாப்பிடப் பழக்கும்போதும் சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிடவே கற்றுக்கொடுக்க வேண்டும். அதையும் மீறி குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக் கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன் பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, இரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும் (படம்:1). இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கி உள்ள பொருள் வாய் வழியாக வெளியே வந்துவிடும்.

சற்றே பெரிய குழந்தையாக இருந்தால், பாதிக்கப்பட்ட குழந்தையின் முதுகுப் பக்கமாக நின்று, அந்தக் குழந்தையின் விலா எலும்புகளுக்குக் கீழாக... அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறே மேல் நோக்கித் தள்ள வேண்டும் (படம்:2).இப்படிச் சில முறைகள் செய்யலாம். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, சிக்கி இருக்கும் உணவை குழந்தையின் வாய் வழியாக வெளியே தள்ளிவிடும்.

இந்த முதல் உதவி சிகிச்சை  பெரியவர்களுக்கும் பொருந்தும். மிகப் பெரிய இறைச்சித் துண்டுகளைச் சாப்பிடும்போதோ, தண்ணீர் அருந்திக்கொண்டே உணவு சாப்பிடும்போதோ பெரியவர்களுக்கும் தொண்டையில் உணவு அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த மாதிரியான நேரங்களில்  இந்த முதல் உதவி நிச்சயம் பலன் கொடுக்கும். பின்னர் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்டு சிகிச்சை அளித்துப் பூரண குணமாக்கலாம்!'' என்கிறார் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு