Published:Updated:

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!
டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் டாட்டூ பல உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

ச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என அனைத்துப் பிரலங்களும் தங்களுக்கு விரும்பிய உருவங்களை, டிசைன்களை டாட்டூவாக வரைந்துகொள்கின்றனர்.

அந்தக் காலத்தில் பச்சை குத்துவதற்கு இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைத்து, ஒரு துணியில் கட்டி, எரித்துக் கரியாக்குவார்கள், அதோடு தண்ணீர் கலந்து பசையாக்கி, கூர்மையான ஊசியால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்தி உருவங்களை வரைந்தனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்தால் பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றமளிக்கும். இது எக்காலத்திலும் அழியாது. இதனால் பாதிப்புகளும் அதிகமில்லை.

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

ஆனால் தற்போது, கரித்துண்டு (கார்பன்), சைனா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் டாட்டூ தீட்டுகிறார்கள். பச்சை நிறத்துக்கு குரோமிக் ஆக்சைடு பயன்படுத்துகிறார்கள். மெர்குரி (பாதரசம்), காட்மியம், இரும்பு ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன. 

ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் டாட்டூ பல உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

இதுதொடர்பாக சரும மருத்துவர் மஞ்சுளா நாகராஜன் விரிவாகப் பேசினார்.

"முன்பு, ஓர் அடையாளத்திற்காகப் பச்சைக் குத்திக் கொண்டனர். இன்று நாகரிகம் என்னும் பெயரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் டாட்டூ போட்டுக்கொள்கின்றனர். இதில் பல நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சில சீக்கிரம் மறைந்துவிடும்; சில நிறமிகள் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. 

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

இதைக் குத்தியதும் சிலருக்கு  உடனடியாகவோ அல்லது வெகுநாள்கள் கடந்தோ ஒவ்வாமை ஏற்படலாம். பல நாள்கள் கழித்து ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் அது டாட்டூவால்தான் ஏற்பட்டது என்பதை உணரமாட்டார்கள். 

டாட்டூவில் இருக்கும் சாயம் உடலில் ஊறி நோயெதிர்ப்பு அமைப்பையே மாற்றிவிடும். சிலருக்குச் சாயங்களில் 'ஸ்ட்ரெப்டோமைசெஸ்' (streptomyces) என்ற கிருமி உருவாகும். நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களை அது மேலும் அதிகமாகப் பாதிக்கும். அதனால் டாட்டூ வைரவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தங்கள் உடலின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப வண்ணங்களைத் தேர்வு செய்வது நல்லது. 

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

டாட்டூ வரைவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசி சுகாதாரமாக இருக்கவேண்டும். ஒரே ஊசியை பலருக்குப் பயன்படுத்துவதால் ஹெச்.ஐ.வி, ஹெப்படைட்டிஸ் பி, சி போன்ற ரத்தத்தின் மூலம் பரவும் கொடிய நோய்கள் ஏற்படலாம். எனவே, டாட்டூ குத்தும்போது ஊசி விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சிலருக்குத் தழும்புகள் உருவாக வாய்ப்புண்டு.  அரிதாகச் சிலருக்கு நார்த்திசுக்கட்டி உருவாகி, அவை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புண்டு. 

வரைவதற்கு முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்

* டாட்டூ வரைந்துகொள்ள விரும்புவோர்,  வரைவதற்கான உரிமம் பெற்ற கடைகள் அல்லது நிறுவனங்களிடம் மட்டுமே போட்டுக்கொள்ளவேண்டும். 

* ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசியை மட்டுமே உபயோகிக்க வேண்டும். உங்கள் கண்ணெதிரில் பிரிக்கப்பட்ட டியூப் மற்றும் ஊசியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் 

* நிக்கல், குரோமைட் போன்ற உலோக ஒவ்வாமை உள்ளவர்கள் டாட்டூ  போட்டுக்கொள்ளக் கூடாது.

* வரையும் நபர் கையுறை அணிந்துள்ளாரா என்பதைக் கவனிக்க வேண்டும். 

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

வரைந்த பின் கவனிக்க வேண்டியவை:

* டாட்டூ வரைவதால் ஏற்படும் புண் ஆறக் குறைந்தது 15 நாள்கள் ஆகும். 

* டாட்டூ வரைந்த 24 மணி நேரத்திற்கு அதைச் சுற்றி ஒரு பேன்டேஜ்  அணிவது அவசியம். 

* பேன்டேஜ் அணிவதற்கு முன்பு டாட்டூவின் மீது ஆன்டிபயாடிக் மருந்தைத் தடவவேண்டும். 

* டாட்டூ வரைந்த பிறகு தொடர்ந்து வலி இருந்தால் உடனே தோல்நோய் நிபுணரை அணுக வேண்டும். 

* சில நாள்களுக்கு டாட்டூவின் மேல் அழுத்தம் கொடுக்காத வகையில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது.

டாட்டூ வரைந்தவர்கள் பிற்காலத்தில் அது பிடிக்காமல் போனால் அழிக்க முற்படுவார்கள். அவர்களுக்கு டாட்டூ வரைந்த இடம் மரத்துப் போவதற்கான மருந்து தடவப்பட்டு, லேசர் மூலம் டாட்டூ அழிக்கப்படும். ஆனால் ஒரே அமர்வில் நீக்க முடியாது. நான்கு முதல் ஆறு அமர்வுகள் தேவைப்படும்"என்கிறார் டாக்டர் மஞ்சுளா.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு