Published:Updated:

முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo
முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

முன்னோர்கள்... தங்கள் பெயர் அல்லது விருப்பமானவர்களின் பெயர்களை உடம்பில் பச்சை குத்திக்கொள்வார்கள். இறந்த பிறகும், தனக்கு விருப்பமானவரின் பெயரோடு மரித்துப் போவோம் என்பது அவர்களுக்குள் இருந்த ஓர் எண்ணம். ஆனால், தற்போது அதுவே `டாட்டூ' என்கிற பெயரில் நவீனமயமாகிவிட்டது. இதில் ஆண், பெண், திருநங்கை எனப் பேதமில்லாமல், எல்லோரும் டாட்டூ குத்திக்கொள்ள விரும்புகிறார். பெண்கள் தங்கள் பெயர் அல்லது ஓரிரு எழுத்துகளை டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள். சிலர், சிறு உருவங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். இப்படியான கலாசாரத்தில் உள்ள கல்லூரிப் பெண்களிடம் பேசினேன்.

முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

``எனக்கு பச்சை குத்திக்கணும்னு ஆசை உண்டு. ஆனா, முதலில் பயந்தேன். பிறகு ஒருமுறை ட்ரைப் பண்ணிப் பார்க்கலாம் என்று கையில் ஒரு டிசைன் போட்டேன். அதற்கப்புறம் அது மீதான ஈர்ப்பு அதிகமாகிவிட்டது. அதனால், அடிக்கடி போய் எந்தவித பயமும் இல்லாமல் உடலில் தோணுமிடத்திலெல்லாம் பிடிச்ச டிசைனை வரைஞ்சுகிட ஆரம்பிச்சேன்" என்கிறார் ஹர்ஷா.

அஸ்வதி கூறும்போது ``மத்தவங்க போட்டிருக்கிற டிசைனைப் பார்த்துதான் எனக்கு அந்த ஆசை வந்தது. ஒருமுறை டிசைன் போடுறப்பதான் வலிச்சது. அதுவே அடுத்தடுத்து போடுற ஆசையைத் தூண்டிவிட்டிருச்சு. அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கை, விரல்கள், காதுமடலின் பின்புறம், கால்கள் போன்ற இடங்களில் போட்டுக்கொண்டேன். இது ஒருவிதமான போதையைப் போன்றது என மற்றவர்கள் சொல்லும்போது நம்பவில்லை. ஆனால், இப்போது நம்புகிறேன்" என்கிறார் சிரித்துக்கொண்டே.

மற்றவர்களின் கவனத்தை, தன் பக்கம் திருப்ப வேண்டும் எனும் நோக்கத்தில் சிலரும், சினிமா மற்றும் விளையாட்டு வீரர்களின் மீதுள்ள ஆர்வத்தில் அவர்களின் டாட்டூ டிசைன்களைத் தாங்களும் போட்டுக்கொள்ளும் ஆசையிலும் இருப்பதை இன்னும் சில மாணவிகளிடம் பேசியபோது புரிந்துகொள்ள முடிந்தது.

முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

டிசைன் போட்டுக்கொள்ளும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிக் கூறுகிறார் தோல் பராமரிப்பு நிபுணர் மருத்துவர் வானதி. ``டாட்டூ போட்டுக்கொள்ளும்போது சிலருக்கு அலர்ஜி, அரிப்பு, தோல் காசநோய் தொடங்கி HIV பரவுதல் வரைக்குமான வாய்ப்புகள் ஏற்படலாம். பயப்பட வேண்டாம். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளே இவை. அதனால், டிசைன் போட்டுக்கொள்ளும்போது பயன்படுத்தும் ஊசியின் சுகாதாரம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். போட்ட டிசைனை அழிக்கும்போது ஏற்படும் விளைவுகள் அதிகம்.

பொருளாதாரத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெண்களே, டாட்டூ போட்டுக்கொண்டிருந்த சூழல் மாறிவிட்டது. அவர்களைப் பார்த்து நடுத்தர மற்றும் அதற்கும் கீழே இருப்பவர்களும் இந்தக் கலாசாரத்தில் இணைந்துவிட்டனர். IAS, IPS உள்ளிட்ட உடற்தகுதித் தேர்வுகளில் இந்த வகையான டிசைன் போட்டுக்கொண்டவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் போட்டுக்கொண்ட டிசைனை அழிக்க வரும் பெண்களே அதிகமாக இருக்கிறார்கள். மேலும், ஆர்வத்தில் தங்கள் விருப்பத்திற்குரியவர்களின் பெயர்களை டாட்டூவாகப் போட்டுக்கொண்ட இளம்பெண்கள், குடும்பச் சூழல் காரணமாக வேறு ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டிய நிலையில், அதை அழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

முதன்முறை டாட்டூ போட்டுக்கொள்ளும் பெண்களின் கவனத்துக்கு! நிபுணர் ஆலோசனை #Tattoo

டிசைனர் செய்யப்பட்ட இடத்தில் உள்ள மையை அழிக்க, அதிகளவில் லேசர் கதிர்வீச்சைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து உடலின் ஓரிடத்தில் செலுத்தும்போது, அந்த இடம் வெண்மையாக மாறிவிடுகிறது. அப்படி மாறியிருப்பதைப் பற்றி மற்றவர்கள் கேட்பார்கள் என்பது ஒருபுறம் என்றாலும், இவருக்கே மனரீதியாகக் குழப்பங்களும் பிரச்னைகளும் உருவாகலாம்.

முதன்முறையாக, டிசைன் போட்டுக்கொள்ளும் பெண்கள் சிறிய அளவிலான டாட்டூக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டாட்டூவால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்று உறுதியானதும் வேண்டுமானால், பெரிய அளவிலான டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளலாம். முக்கியமாக ஊசிகள் புதியதா என்பதைப் பரிசோதிக்கத் தவறாதீர்கள்.

பல வண்ணங்களில் டாட்டூ போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிவப்பு கலர் டாட்டூகளை அழிக்கும்போதும் கடும் பக்கவிளைவுகள் ஏற்படப் பெரிதும் வாய்ப்புகள் உள்ளன. ஆசைக்காகத் தற்காலிக டாட்டூ போட்டுக்கொள்வது நல்லது.

டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளும்முன் இது அவசியம்தானா என்று நன்கு யோசித்து முடிவெடுங்கள். போட்டுக்கொண்ட பிறகு யோசிப்பதால் பலனில்லை."

-- மா.யுவராணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு