Published:Updated:

நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்
நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில், கடந்த ஆண்டு 18 பேரை காவு வாங்கிய நிபா வைரஸ் மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் பகுதிகளில் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கு முதன்முதலில் நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்த செவிலியருக்கும், அவரது இரு நண்பர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரின் ரத்த மாதிரிகளும் தற்போது பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞரின் நண்பர்கள், உடன்படிக்கும் மாணவர்கள், உறவினர்கள் என மொத்தம் 311 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களையும் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளது கேரள சுகாதாரத்துறை. பொதுவாக நிபா வைரஸ் ஒருவரைப் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடந்த ஒரு வாரத்தில் அவர் சந்தித்த மனிதர்களைப் பரிசோதனை செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கேரள அரசாங்கம் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. 

நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

`நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதுகுறித்து யாரும் பயப்பட வேண்டாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய மருத்துவக் குழுவும் கேரளாவுக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
மலேசியாவில், `சுங்கை நிபா' என்கிற இடத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸ்க்கு `நிபா' என்று பெயர் வந்தது. 1999-ம் ஆண்டு, மார்ச் மாதம்தான் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில் மேற்குவங்கத்தில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கேரளாவைக் குறிவைத்துத் தாக்குகிறது.

முதன்முதலில் பன்றிப் பண்ணையில் இருந்தே இந்த வைரஸ் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவினாலும், ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கும் பரவக்கூடியது. நாய், ஆடு, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளிடையே இந்த வைரஸ் காணப்பட்டாலும், பழ வவ்வாலில் இருந்துதான் இந்த வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. இந்த வவ்வால்கள் சாப்பிட்ட பொருள்களைச் சாப்பிட்டால் இந்த வைரஸ் பரவ வாய்ப்புண்டு. இதுதவிர விலங்குகளின் கழிவுகளிலிருந்தும் இது பரவுகிறது. மனிதர்களைப் பொறுத்தவரை, இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைத் தொட்டால் பரவும். தும்மல், இருமல் மூலமாகவும் பரவும்.

நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

காய்ச்சல், கழுத்து வலி, தலைச்சுற்றல், வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசப் பிரச்னை, மனக்குழப்பம், உளறல் போன்றவைதான் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி. இந்த பாதிப்பு மூன்று நாள்கள் முதல் ஒரு மாதம் வரை இருக்கும். இது உயிரைக் குடிக்கும் ஓர் அபாயகரமான பாதிப்பாகும். அதனால் அறிகுறிகள் தென்பட்டதும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அறிகுறிகளைப் பொறுத்து பல்வேறுவழிகளில் பாதிப்பை கண்டறியமுடியும். `த்ரோட் ஸ்வாப்' (Throat Swab), `எலிசா ஆர்டி -பிசிஆர்' (Elisa RT-PCR),  'வைரல் நியூட்ராலைசேஷன் டெஸ்ட்' (Viral Neutralisation Test) ஆகிய சோதனைகள்மூலம் இந்நோய் பாதிப்பை உறுதிசெய்துகொள்ளலாம். கோமா, மூளைக்காய்ச்சல் எனத் தீவிரமான அறிகுறிகள் இருந்தால் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யலாம்.

நிபா வைரஸ் பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா சீச்சரிடம் பேசினோம்.

``நிபா வைரஸ் தாக்குதல் இப்போதைக்கு ஒரு மாணவருக்கு உறுதியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என 311 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும். மேலும் நிபா காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் புனே, ஆலப்புழா, மணிபால் ஆகிய இடங்களில் மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். முன்னெச்சரிக்கையுடன், மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாகச் செய்துவருகிறோம். 

இதற்காக அவசர உதவி மையம் அறிவித்துள்ளோம். இதுவரை 110 அழைப்புகள் வந்திருக்கின்றன. மத்திய குழு கேரளா வந்துள்ளது; எங்கிருந்து நிபா பரவுகிறது என்பதைக் கண்டறியும் பணியில் மத்திய குழு ஈடுபட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் கேரள சுகாதாரத் துறை மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. 

நிபா அலர்ட்... ``பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிடாதீர்கள்..!" - கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

பழங்களை நன்றாகக் கழுவிச் சாப்பிடவேண்டும். தரையில் விழுந்து கிடக்கும் பழங்கள், வவ்வால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். நிபா காய்ச்சலைக் கருத்தில்கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை" என்றார் அவர்.

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

``கடந்த முறை கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உண்டானபோதே மருத்துவர்களுக்கு அதுகுறித்து பயிற்சியளித்தோம். தற்போது, நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஆவணங்களை அரசு, தனியார் என அனைத்து மருத்துவர்களுக்கும் அனுப்பியிருக்கிறோம். அறிகுறிகளுடன் வருபவர்களை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தமிழக எல்லைகளிலும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் வந்தால் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே பரிசோதனைகள் நடத்தி கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகளை வழங்குவோம் '' என்றார் அவர்.

அறிகுறிகள் தென்படுபவர்கள், தமிழக சுகாதாரத் துறையின் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட உதவி எண்களுக்கு அழைக்கலாம்.

044 - 24350496,

044 - 24334811

9444340496

8754448477   

104   

Vikatan
அடுத்த கட்டுரைக்கு