Published:Updated:

நீங்கள் குடிக்கும் நீர் பாதுகாப்பானதுதானா? - இப்படித் தெரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் குடிக்கும் நீர் பாதுகாப்பானதுதானா? - இப்படித் தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் குடிக்கும் நீர் பாதுகாப்பானதுதானா? - இப்படித் தெரிந்துகொள்ளுங்கள்

ரத்தப் பரிசோதனை எப்படி ஒருவருக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு முக்கியம், நாம் ஒவ்வொருவரும் அருந்தும் குடிநீருக்கான பரிசோதனை. இனிமேலாவது, வீட்டில் இருக்கும் குடிநீரைப் பரிசோதித்து, பாதுகாப்பான குடிநீரைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறோமா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். 

'பாசனத்துக்குப் பயன்படுத்தும் நீர் உப்பு நீரா அல்லது நல்ல நீரா?' என்பதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அவற்றிற்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும். உப்புத் தண்ணீராக இருந்தால், அதற்கு ஏற்ற மாதிரியான பயிர்களையும், நல்ல தண்ணீராக இருந்தால் அனைத்து வகை பயிர்களையும் சாகுபடி செய்யலாம். சொட்டுநீர் பாசன முறை என்றால், இன்னும் தனிக் கவனம் வேண்டும் என்பார்கள். விவசாயத்துக்குப் பாய்ச்சும் நீருக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றிருக்கும்போது, நேரடியாகப் பருகும்  நீர்மீது எடுத்துக் கொள்ளவேண்டிய அக்கறை இன்னும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், 'தவித்த வாய்க்கு தண்ணி கெடச்சா போதும்' என்று மட்டுமே நாம் யோசிக்கிறோம். 

'உலகில், பத்தில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது' என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, பாதுகாப்பான குடிநீருக்கான போராட்டங்கள் இந்தியாவில் வேகம்பெற்று வர, மறுபுறம் குடும்ப வருமானத்தில் கணிசமான தொகையைப் பாதுகாப்பான குடிநீருக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள், உங்களுடைய மாத பட்ஜெட்டில், எவ்வளவு பணத்தை பாதுகாப்பான குடிநீருக்காகச் செலவிடுகிறீர்கள் என சின்ன கணக்குப் போட்டு பார்த்ததுண்டா? இல்லை என்றால், சின்னதாய் ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதற்குமுன், உங்கள் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் பாதுகாப்பானதுதானா, குடிக்கவும் சமைக்கவும் ஏற்றதுதானா என்பதைத் சோதித்து அறிந்து கொள்வது முக்கியம். அப்போதுதான், அதற்கு மாற்றாக என்ன செய்வது என்பதை யோசித்துச் செய்ய முடியும்.

நீங்கள் குடிக்கும் நீர் பாதுகாப்பானதுதானா? - இப்படித் தெரிந்துகொள்ளுங்கள்

பொதுவாக நீரில் 3 வகையான மாசு நிறைந்திருக்கும். முதலாவது, நுண்ணிய மண் துகள் போன்ற கரையாத திடப் பொருள்கள். இரண்டாவது, புளுரைட், கார்பைட் போன்ற கரைந்துள்ள இரசாயனங்கள். கடைசியாக, அமீபா, பாக்டீரியா போன்ற உயிரி கலப்புகள். இவற்றில், உங்கள் பகுதியில் கிடைக்கும் நீரில் எந்த வகையான மாசு உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சுத்திகரிப்பு முறைகளை நீங்கள் நாடினால் போதும். அப்படி இல்லாமல், இன்று சந்தையில் கிடைக்கிறதே எனத் தேவையற்ற சுத்திகரிப்பு முறைகள் அமைந்த சாதனங்களையோ, அல்லது நேரடியாக கேன்களில் சப்ளையாகும் குடிநீரையோ பயன்படுத்தி வந்தால், அது சிறந்த வழியாக இருக்காது. 

முதலில் உங்கள் பகுதியில் கிடைக்கும் நீரை அல்லது உங்களுடைய வீட்டின் நிலத்தடி நீரை, அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்க்க வேண்டும். பரிசோதிக்க வேண்டிய நீரை, சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவிற்கு அடைத்து, ஆய்வகத்தில் கொடுக்க வேண்டும். தண்ணீர் பிடித்ததிலிருந்து 2 மணி நேரத்திற்குள்ளாக ஆய்வகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். 

நீங்கள் குடிக்கும் நீர் பாதுகாப்பானதுதானா? - இப்படித் தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் இருக்கும். அங்கேயே நீங்கள் தண்ணீரை பரிசோதிக்கக் கொடுக்கலாம். அங்கு, இந்திய தரக் கட்டுப்பாடு ஆணையம் குடிநீருக்காக நிர்ணயித்த தர நிலைகளின்படி நீங்கள் கொடுக்கும் தண்ணீர் பரிசோதிக்கப்படும். சென்னையில் இருக்கும் அரசு தண்ணீர்ப் பரிசோதனை நிலையங்களில் ஒன்றான கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டைப் பொறுத்தவரை, ஒரு வீட்டின் குடிநீரை ஒருமுறை பரிசோதனை செய்ய 2,000 - 5,000 ரூபாய் வரையும்,  பிளீச்சிங் பவுடர் சோடியம் ஹைபோ குளோரைடு பரிசோதனைக்கு 800 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. 

இந்தப் பரிசோதனை அறிக்கையில், நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதோடு, அந்த நீரில் எந்த வகையான மாசு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலந்துள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். குடிக்கும் நீராக இருந்தால் pH அளவு 6.5 - 8.5 என்கிற அளவில் இருக்க வேண்டும். அதே போல டி.டி.எஸ் ஒரு லிட்டருக்கு 300 மி.கிராம் என்ற அளவில் இருப்பது அவசியம். இந்தத் தகவல் தெரிந்த பின், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைதான் முக்கியம். இப்போது, அந்த நீர் சோதனை முடிவுகள் குறிப்பிடும், மாசை நீக்கும் குடிநீர் சுத்திகரிப்பு முறையை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும்.

ரத்தப் பரிசோதனை எப்படி ஒருவருக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு முக்கியம், நாம் ஒவ்வொருவரும் அருந்தும் குடிநீருக்கான பரிசோதனை. இனிமேலாவது, வீட்டில் இருக்கும் குடிநீரைப் பரிசோதித்து, பாதுகாப்பான குடிநீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு