Published:Updated:

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay
குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

உலகளாவிய அளவில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பை சகித்துக் கொள்ளும் அதிகாரவர்க்கம், குழந்தை உழைப்பு என்பது வறுமையின் தவிர்க்கமுடியாத அங்கம் என்று நம்புகிறது.

சினிமா ஆசையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் டைரக்டராகும் ஆசையில் எங்கள் அறைக்கு வந்திருந்தார். எங்களது நீண்ட நெடிய பேச்சு ஒரு கட்டத்தில் திருப்பூர் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றித் திரும்பியது. அப்போது அந்தத் திருப்பூர் நண்பர், `சார்.. குழந்தைத் தொழிலாளர்னு சொல்றீங்க. அங்கே, ஒரு சிறுவன் சம்பாதிக்கற காசை பெரியவங்களாலகூட சம்பாதிக்க முடியாது, தெரியுமா?' என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவர் அவரைப் பார்த்து, `நண்பரே.. நீங்க சினிமா டைரக்டாகுற ஆசைய விட்ருங்க. ஏன்னா... உங்களால எப்ப குழந்தைத் தொழிலாளிகள் பத்தி கவலைப்படாம இருக்க முடியுதோ, அப்பவே உங்ககிட்ட இருந்து நல்ல படம் வராதுனு தெரிஞ்சுடுச்சு. வேணும்னா நீங்களே சொந்தமா படம் பண்ணிக்கோங்க' என்று வருத்தத்துடன் சொல்லியபடியே எழுந்து வெளியே போய்விட்டார்.

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

ஆம்... உலகளாவிய அளவில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பை சகித்துக் கொள்ளும் அதிகாரவர்க்கம், குழந்தை உழைப்பு என்பது வறுமையின் தவிர்க்கமுடியாத அங்கம் என்று நம்புகிறது. வைரம் பட்டை தீட்டுவது, தீப்பெட்டி மற்றும் பட்டாசு செய்வது, பீடி சுற்றுவது, செங்கல் சூளைகள், முந்திரி ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதேபோல் உணவகங்கள், சாலைகள், வீடுகள் என அன்றாடம் தொடர்பில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்பும் பல லட்சம் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. 

இவை அனைத்துக்கும் மேலாக, பல நூறு ஆண்டுகளாக உலகிலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பை மொத்தமாக வாங்கும் இரக்கமேயில்லாத பொருளாக சாக்லேட் இருக்கிறது. ஆம். அது அன்பு மற்றும் காதலைப் பகிர்ந்துகொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இந்த இனிப்பான சாக்லேட்டுக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை.

நாம் வாங்கும் சாக்லேட்டில் சில கவர்களில் `கோகோ லைஃப்... ஃபேர் டிரேட்' (Cocoa Life.. Fair Trade) என்ற முத்திரை காணப்படும். அதிலுள்ள `ஃபேர் டிரேட்' என்ற வார்த்தைக்கும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

சாக்லேட்டின் தனித்துவமான சுவை, மணம், நிறத்துக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது `கோகோ' (Cocoa) என்ற 'Theobrama cacoa'. சாக்லேட்டின் மூலப்பொருளான கோகோ கறுப்பு நிற விதைகள் ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா, கேமரூன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.  உலகளவில் 70 சதவிகிதம் கோகோவை இந்தநாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. இவற்றுள் முக்கியமானது, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான ஐவரி கோஸ்ட். இந்தநாடு. தங்கள் உற்பத்தியைத் தாண்டி, ஆண்டுதோறும் சுமார் அரை மில்லியன் மெட்ரிக் டன்களை வரவழைத்து பல்வேறு கம்பெனிகளுக்கு சப்ளை செய்கின்றன. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் வருமானத்தையும், 20 மடங்கு அதிக லாபத்தையும் சாக்லேட் மூலம் உலக நாடுகளுக்கு இந்த ஐவரி கோஸ்ட் வழங்கும். ஆண்டுதோறும், 12 முதல் 14 பில்லியன் டாலர்களை கோகோ மூலம் இந்தநாடு சம்பாதிக்கிறது.

ஐவரி கோஸ்ட்டின் 50 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கோகோதான், ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களை கோகோ தொழிலுக்கு வர வற்புறுத்துகிறது. மிகவும் குறைந்த வருமானம், வறுமை போன்ற காரணங்களால் குழந்தைகள் கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களது பிஞ்சுக்கரங்கள் கோகோ பறிக்கவும், விதைகளைப் பதனிடவும் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

ஐவரி கோஸ்ட்டில் வாழும், இரண்டு மில்லியனுக்கும் மேலான குழந்தைகளுக்கு உணவு, கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் நியாயமாக கிடைக்கவேண்டிய குழந்தைப் பருவம்கூட கிட்டுவதில்லை. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இந்தக் குழந்தைகளுக்கு கோகோவில் இருந்துதான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பதுகூட தெரியாது. முதன்முதலாக சாக்லேட்டைச் சுவைத்த ஐவரி கோஸ்ட் குழந்தை ஒன்று `இந்தக் கசப்பு விதை இவ்வளவு இனிக்குமா..?' என்று ஆச்சர்யத்துடன் கேட்டதாம். 

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

`த டார்க் சைட் ஆப் சாக்லேட்' (The Dark Side of Chocolate) என்ற புத்தகத்தில் `வொர்ஸ்ட் கைண்ட் ஆப் சைல்ட் லேபர் அண்ட் சிலேவரி' (Worst kind of Child Labour and Slavery) என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பவை, ஐவரி கோஸ்ட், கேமரூன், நைஜீரியா நாடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. `கோகோ' (Cocoa) என்றால் 'இறைவனது உணவு' என்று பொருள் உண்டாம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் இந்த உலகம்தான், அதே உணவின் பெயரால் அந்தக் குழந்தைகளை இந்த அளவு பாடுபடுத்திக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கப் போராடும் யுனெஸ்கோ போன்ற நிறுவனங்களால்கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. `கோகோ அவர்களது வாழ்வாதாரமாக விளங்குவதால் குழந்தைத் தொழிலாளர்களை தடுக்க நாங்கள் மேற்கொண்ட வழிமுறைகள் வெற்றி பெறவில்லை' என்று தெரிவித்த யுனெஸ்கோ, அந்தக் குழந்தைகளுக்கு உதவ `இன்டர்நேஷனல் கோகோ இனிஷியேட்டிவ்' (International Cocoa Initiative) மற்றும் `ஃபேர் டிரேட்' (Fair Trade) ஆகிய அமைப்புகளை உருவாக்கியது. 

1946-ம் ஆண்டு, `எட்னா ரூத் பைலெர்' (Edna Ruth Byler) என்ற அமெரிக்கப் பெண் தொடங்கிய நியாயவிலை `ஃபேர் டிரேட்', தற்போது சில சாக்லேட் நிறுவனங்கள் மூலம் இப்போது பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு உதவிபுரிகிறது. 'இலவசக் கல்வி, மருத்துவ உதவி, புதிய தொழில்நுட்ப சேவை போன்றவற்றை  வழங்கும் `கோகோ லைஃப்... ஃபேர் டிரேட்', கோகோ உற்பத்தி செய்யும் நாடுகளில் தொழில் மேம்படவும், வாழ்க்கைமுறை மேம்படவும் உதவுகிறது. அடுத்தமுறை ஒரு சாக்லேட் வில்லையை எடுத்து வாயில் போடுவதற்குமுன், அதன் அட்டையில் உள்ள `ஃபேர் டிரேட்' சான்றிதழை சற்று கவனியுங்கள்' என்று அழைக்கிறது சர்வதேச கோகோ நிறுவனம்.  

'ஃபேர் டிரேடி'ல் கூட, சில சந்தேகங்கள் வரலாம். 'ஃபேர் டிரேடி'ல் நீங்கள் கொடுக்கும் இந்தப் பணம் உண்மையிலேயே குழந்தைகளை அந்தக் கொடுமைகளிலிருந்து வெளியே கொண்டு வருகிறதா, அல்லது அந்தக் குழந்தைகளைத் தெம்பாக்கி அதே நிறுவனத்துக்கு ஆரோக்கியமான தொழிலாளர்களாக நீடிக்க வைக்க உதவுகிறதா என்று பார்க்கவேண்டும். அந்த நிறுவனத்தின் இணையதளம், குழந்தைத் தொழிலாளர்களை 51 சதவிகிதத்துக்கும் மேலாகக் குறைத்திருப்பதாகச் சொல்கிறது. மேலும் இந்தக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பால் சாக்லேட் விலையில் 3 சதவிகிதம்கூட உயரவில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

இன்று ஜூன் 12.  சர்வதேச குழந்தை ஒழிப்பாளர் தினத்தில், இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட கணக்கு, மொத்தக் குழந்தைகளில் 12 சதவிகிதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகச் சொல்கிறது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் குழந்தைகள்.  ஐக்கிய நாடுகளின் கணக்குப்படி 18 வயதுக்கு உட்பட்டவர்களையும், முறைப்படி கணக்கில் வராதவர்களையும் சேர்த்தால் இது நான்கு மடங்கு அதிகம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இங்கிலாந்தின் மொத்த ஜனத் தொகைக்கு இணையானதாகும்.

வறுமைதான் குழந்தைகளின் உழைப்புக்குக் காரணம் என்றும், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதுதான் அந்தக் குடும்பங்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி என்றும் சிலர் சொல்லலாம். வறுமையை ஒரு காரணமாகச் சொல்லும் நிபுணர்கள், வறுமையிலிருந்து தப்பிக்க நிரந்தரத் தீர்வாகச் சொல்வது அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத்தான். 

குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி! #WorldChildLabourDay

ஒரு குழந்தை முறையான உழைக்கும் வயதை எட்டும்போது, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறுவதற்குக் கல்வி மட்டுமே புதிய வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும். கூடவே  குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்போது, ஆண், பெண் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பும் ஊதியமும் கணிசமாக உயர்ந்து சுரண்டல் குறையும் என்பதே உண்மை. குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்றாலும் வேலை செய்யும் எல்லாக் குழந்தைகளும் குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல என்பதையும் உணர வேண்டும்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓவின்படி, அவர்களது சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்காத அல்லது தங்கள் கல்வியில் தலையிடாத வேலையில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், குழந்தைத் தொழிலாளர் அல்ல; மாறாக இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் திறமை மற்றும் அனுபவம் பெற்று அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாகத் தயார்படுத்தி கொள்ள உதவும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்! 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு