Published:Updated:

நாய் நோய் ஜாக்கிரதை!

நாய் நோய் ஜாக்கிரதை!

நாய் நோய் ஜாக்கிரதை!

நாய் நோய் ஜாக்கிரதை!

Published:Updated:
நாய் நோய் ஜாக்கிரதை!
##~##

கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், செல்லப் பிராணிகளை... குறிப்பாக நாய்களை வளர்க்கும் மோகம் அதிகரித்துவருகிறது. பாதுகாப்புக்காக மட்டும் அல்ல... பாசம் காட்டவும் இப்போது நாய்களே துணை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். காரணம், 'செல்லப் பிராணிகளை  ஒருவர் வளர்க்கும்போது அவரது உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன் சிந்தனைத் திறனும் மேம்படும்’ என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், இந்த செல்லப் பிராணிகளுக்கு முறையாகத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்காமல் இருந்தால், அவற்றிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுநோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதுபற்றி தமிழ்நாடு கால்நடைச் சிகிச்சைத் துறையின் இயக்குநர் டாக்டர் எஸ்.பிரதாபன் அக்கறையோடு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகளைக் கொடுத்தார்.

நாய் நோய் ஜாக்கிரதை!

'நாய், குட்டியாக இருக்கும்போது இதன் வயிற்றில் உருண்டைப் புழு இருக்கும். நாயைக் கொஞ்சும்போது இந்தப் புழுவின் முட்டை நம் கைகளில் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தப்பித்தவறி இந்த முட்டை நம் வயிற்றுக்குள் சென்றால், உடலில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டிகள் தோன்றும். கண்களைக்கூட இந்தக் கட்டி விட்டுவைக்காது. எனவே, குட்டி பிறந்த 30-வது நாளில் இந்தப் புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். பின்னர், ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் இந்தப் புழுவை நீக்குவதற்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.

சிறுநீர் மற்றும் காலைக் கடன்களை கழிக்க நாயை வீட்டுக்கு வெளியில் அழைத்துச் செல்வதுதான் சிறந்த பழக்கம். ஒருவேளை வெளியில் அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பாவிட்டால், வீட்டின் சுற்றுப்புறத்திலேயே நாய் காலைக் கடன் முடித்ததும் உடனடியாக அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், அதன் கழிவுகளில் தெள்ளுப்பூச்சி என்ற ஒரு வகைப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும். அஜாக்கிரதையின் காரணமாக, இந்த முட்டை மனிதர்களின் வயிற்றுக்குள் செல்லும்போது மூளை, நுரையீரல் போன்ற இடங்களில் கட்டி வளர வாய்ப்பு உள்ளது. தற்போது உருண்டைப் புழு, நாடாப் புழு மற்றும் கொக்கிப் புழு ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க முடியும். ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும் ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கத்துக்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.

நாய் நோய் ஜாக்கிரதை!

பல்வேறு விலங்குகளுக்கு வெறிநோய் (Rabies) ஏற்பட்டாலும், நாயின் மூலம்தான் மனிதனுக்கு இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பெரும்பாலும் வெறிநோயானது தெருநாய்களிடம் இருந்தே வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குப் பரவும். எனவே, தெருநாய்களிடம் வீட்டில் உள்ள நாய்களைப் பழகவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல வெறிநோய்க்கான தடுப்பு ஊசியையும் நாய்க்குப் போட வேண்டும். குட்டி பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் ஊசியும், பின்னர் வருடத்துக்கு ஒரு முறையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போட வேண்டும்.

நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு நாய்களின் உடலில் உண்ணி அதிகமாகப் பெருகும். இந்த உண்ணி மூலம் நாய்க்கும் நாயிடம் இருந்து மனிதனுக்கும் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நாயை சுத்தமாகக் குளிப்பாட்ட வேண்டும். அப்படிக் குளிப்பாட்டும்போது, நாம் பயன்படுத்தும் சோப்பை நாய்க்குப் பயன்படுத்தக் கூடாது.

இப்படி சுகாதாரத்தோடு வளர்க்கப்படும் நாய் கடித்தாலும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை அந்த நாய் வெறிநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரிடம் சென்று தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கானத் தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுகிறது!' என்கிறார் டாக்டர் எஸ்.பிரதாபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism