Published:Updated:

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

Published:Updated:
துளித் துளியாய்..

அடைப்பை நீக்கும்  ஆஞ்சியோ பிளாஸ்டி!

சென்னையைச் சேர்ந்த ரகுவீர் சோனி என்ற 17 வயது மாணவனுக்கு, கடந்த ஆறு மாதங்களாக நெஞ்சு வலி.  படிகளில் ஏறவோ, ஓடவோ, விளையாடவோ முடியவில்லை. நடப்பதற்கே சிரமம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்தபோதுதான் அவருக்கு கொழுப்பின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, ஒருவருக்கு கொழுப்பின் அளவானது 160 மில்லி கிராம்/டெசி லிட்டர்   இருக்கலாம். 180-ஐத்  தாண்டினால் சிகிச்சை அவசியம். ஆனால், ரகுவீர் சோனிக்கு இருந்த கொழுப்பின்  அளவோ 497 மில்லி கிராம்/டெசி லிட்டர். அதைவிட ஆபத்தாக, இதயத்தின் மூன்று ரத்த நாளங்களையும் கொழுப்பு அடைத்திருந்தது. உடனடியாக, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில், ரகுவீருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து குணமாக்கியிருக்கிறார் 'ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை’யின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சீவ் அகர்வால். ''ஆசியாவிலேயே மிகக் குறைந்த வயதுள்ள ஒருவருக்கு ஆஞ்சியோ செய்யப்படுவது இதுவே முதல் முறை'' என்று சொல்லும் சஞ்சீவ் அகர்வால், ''இது மிகவும் அரிதாக வரும் பாதிப்பு. அதுவும் சின்ன வயதில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அடைப்பு ஏற்படுவது இன்னும் அரிதானது. அதனால், உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது'' என்கிறார். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் குணமாகி, இப்போது பள்ளிக்குச் சென்றுகொண்டு இருக்கிறான் ரகுவீர்!

நோ ட்ரிங்க்ஸ் நோ ட்ரைவ்!

துளித் துளியாய்..

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒருவர் மரணத்துக்கு காரணமாகும் அளவுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டினால், கிரிமினல் வழக்குகள் பாயும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஏற்றம் காணும் ஏற்றுமதி!

துளித் துளியாய்..

அடிப்படை மருந்துப் பொருட்கள், விற்பனைக்கான மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் போன்றவற்றை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் நம் நாடு ஏற்றுமதி செய்கிறது. நடப்பு நிதி ஆண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ரூ. 24,661 கோடிக்கு மருந்துசார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியைவிட 30 சதவிகிதம் (ரூ. 18,967 கோடி) அதிகம். இந்தியாவின் மொத்த மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் 23.2 சதவிகிதப் பங்களிப்புடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதாவது நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ. 5,025 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  

துளித் துளியாய்..

உறுப்பு தான விழிப்பு உணர்வு

இந்தியாவில், ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், உறுப்புகள் தானமாகக் கிடைப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால், வெறும் 4,500 பேர்தான் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையால் பயன்பெறுகின்றனர் என்கிறார்கள் வல்லுநர்கள். நிலைமை இப்படி இருக்க, ''இந்தியாவில் 1.8 நிமிடத்துக்கு ஒருவர் என்கிற ரீதியில் விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களால் மூளைச் சாவு அடைகிறார் அல்லது உயிரிழக்கிறார். மூன்று நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. சமூகத்தில் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட்டால், பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். மக்கள் மத்தியில் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி.

நூற்றுக்கு நூறு

துளித் துளியாய்..

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்துக்கு செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 25 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு. இதில் மாற்றுத் திறனாளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பும்பட்சத்தில் செய்முறைத் தேர்வுக்கு விலக்களித்து தேர்வு மதிப்பெண்ணை 75-ல் இருந்து 100-க்கு கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா தெரிவித்துள்ளார்.

கத்தியின்றி ரத்தமின்றி...

துளித் துளியாய்..

ஐந்தில் ஒருவரைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் நோய்களில் ஒன்று கருப்பை நார் திசுக்கட்டிகள் (Uterine fibroids). சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 'கான்செப்ட் மெடிகேர்’ நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் பாவ்னா இதுபற்றி விரிவாகப் பேசினார். ''கருப்பைச் சுவர்களில் ஏற்படும் தேவையற்ற திசுக்களின் வளர்ச்சிதான் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் என்றழைக்கப்படுகின்றன (இது புற்றுநோய்க் கட்டி அல்ல). இந்த ஃபைப்ராய்டு திசுக்கள் வளர்வதைத் தொடக்கத்தில் தெரிந்துகொள்வது கடினம். தொடர் வயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகள். முறையற்ற உணவுப் பழக்கம், ஹார்மோனில் சமநிலை இல்லாதது மற்றும் மரபுரீதியான தொடர்ச்சி போன்ற காரணங்களால் இந்த நோய் பெண்களுக்கு வருகிறது. குழந்தை பெறும் வாய்ப்புள்ள பெண்கள் (மெனோபாஸ் ஏற்படும் முன்) இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட 50 சதவிகிதம் வரை வாய்ப்பு உண்டு. இந்தத் திசுக்களை அறுவைச்சிகிச்சை செய்து அகற்றும்போது, முன்பெல்லாம் கருப்பையையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். ஆனால், பெண்கள் வயிற்றில் பால்வார்ப்பதுபோல் இப்போது வந்திருக்கிறது 'எக்ஸப்ளேட்-2100’ (Exablate 2100) என்கிற அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம். ''அறுவைச்சிகிச்சை இல்லாமல், கருப்பையை அகற்றாமல் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமே எளிதாகக் குணப்படுத்திவிடலாம். அதோடு, பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கலாம். கருப்பை நார்த்திசுக் கட்டிகளை நீக்கும் சிகிச்சை மட்டுமில்லாமல், நுரையீரல் கட்டிகள், எலும்பு இடம் மாறுவது, பக்கவாதம் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளையும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் செய்ய முடியும்'' என்கிறார் டாக்டர் பாவ்னா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism