Published:Updated:

கன்சல்டிங் ரூம்

காதுக்குக் காதுகொடுப்போம்!

கன்சல்டிங் ரூம்

காதுக்குக் காதுகொடுப்போம்!

Published:Updated:
கன்சல்டிங் ரூம்

கே.ஷர்மிளா, மதுரை 

''நான் அடிக்கடி பட்ஸ் உதவியோடு காதுகளைச் சுத்தம் செய்கிறேன். இப்படிச் செய்வதால் விரைவிலேயே காது தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இது உண்மையா? அப்படி என்றால் காதுகளை எப்படித்தான் சுத்தம் செய்வது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்டிங் ரூம்

டாக்டர் குமரேசன், காது, மூக்கு, தொண்டை நிபுணர், சென்னை.

கன்சல்டிங் ரூம்

'' 'சுத்தம் செய்கிறேன்’ என்று ஹேர் பின், சேஃப்டி பின் முனை, பட்ஸ் போன்ற கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து பலர் காதுகளைச் சுத்தம் செய்கிறார்கள். சுத்தம் என்பதைக் காட்டிலும், சுகத்துக்காக செய்பவர்கள்தான் அதிகம். காதுகள் மட்டும் அல்ல; உடலில் துவாரம் உள்ள பகுதிகள் எல்லாவற்றிலுமே உணர்வுகளைத் தூண்டக்கூடிய வேகஸ் என்ற நரம்பு இருக்கிறது. காதுக்குள் நுழைக்கும் சாதனம் இதன் மீது படும்போது ஒருவிதமான கிளர்ச்சி ஏற்படும். பலர் காது குடையும் பழக்கத்துக்கு அடிமையாவது இந்தச் சுகத்துக்காகத்தான். ஆனால், இந்தப் பழக்கம் மோசமான விளைவுகளை உருவாக்கும்.

##~##

காதுகளின் உட்புறம் தோல் பகுதியில் இருக்கும் மிகவும் சென்சிடிவான நரம்புக்கு அல்டெர்மன்ஸ் நரம்பு(Alderman’s Nerve) என்று பெயர். இந்தப் பகுதியில் தேவையற்ற பொருள் படும்போது, காதின் உட்புறம் சிவந்து வெள்ளை வெள்ளையாக வர ஆரம்பிக்கும். இதுவே அரிப்பு நோயாக மாறி நீர் வெளியேறும். ஒவ்வாமை ஏற்படும். ஒரு சிலருக்கு பாக்டீரியா தொற்றும் ஏற்படலாம். அழுக்கானது வெளியில் இருந்து காதுக்குள் வந்து சேர்கிறது என்று பலரும் நினைக்கின்றனர். இது தவறு. தன்னுடைய பாதுகாப்புக்காக காது ஒருவிதமான மெழுகை உற்பத்தி செய்கிறது. இந்த மெழுகுக்கு 'குறும்பி’ என்று பெயர். இந்தக் குறும்பிதான் பாக்டீரியா, பூஞ்சை, தண்ணீர், சிறிய பூச்சிகள் ஆகியவற்றில் இருந்து காதுகளைப் பாதுகாக்கிறது. இந்தப் பசை அதிகமாகி, அழுக்காகச் சேர்ந்தால், அதைக் காதே தானாக வெளியில் தள்ளிவிடும். அழுக்கு இருக்கிறது என்று காதைக் குடைய வேண்டிய அவசியமே இல்லை. காது குடைவதைப் பழக்கமாக்கிக்கொண்டால்,  காதினுள் புண் ஏற்படும். தொடர்ந்து, செவிப்பறை பாதிப்படையலாம். ஆகையால், காதுகளைக் குடைவது, எண்ணெய் ஊற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.''

என்.செந்தில்குமார், திண்டுக்கல்

''எனக்கு வயது 29. இன்னும் மீசை, தாடி வளரவில்லை. திருமணத்துக்குப் பெண் பார்க்கப்போன இடத்தில் நிறைய அவமானங்கள் ஏற்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கிறேன். மீசை, தாடி எனக்கு எப்போது வளரும் என ஏக்கமாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பிரச்னை?''

கன்சல்டிங் ரூம்

டாக்டர் முருகன்,   குழந்தை மற்றும் அடலசன்ட் நரம்பியல் நிபுணர், சென்னை

''பொதுவாக, ஆண்கள் 15 வயதை நெருங்கும்போது உடலின் மறைவிடங்களில் முடி வளர ஆரம்பிப்பதுடன் தாடி, மீசையும் வளர ஆரம்பிக்கும். நம் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரான் (Testosterone) மற்றும் ஆன்ட்ரோஜன் (Androgen) எனப்படும் ஹார்மோன்கள்தான் நம் உடலில் ரோமங்கள் வளர்வதற்கும்  இனப்பெருக்க ஆற்றலுக்கும் காரணம். ஆன்ட்ரோஜன் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரானுடன் இணைந்து ஆண்கள் உடலில் ரோமங்கள் வளர்வதற்குத் துணை புரிகின்றது. இந்த ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்தால் ரோமங்களின் வளர்ச்சி தடைபடும். மேலும் உடலில் இயல்பான அளவுக்குச் சுரந்தாலும், உடலியல் சார்ந்த பல்வேறு காரணங்களாலும்கூட உரோமங்கள் வளர்வதில் தடை இருக்கலாம். இதுபோன்ற சமயத்தில், முதலில் பாலியல் ரீதியான உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டியது முக்கியம். மரபு ரீதியான காரணங்களாலும்கூட சிலருக்கு உரோமங்கள் வளராமல் போகும் வாய்ப்புகள் உண்டு. ஹார்மோன் செயல்பாட்டினைச் செயற்கையாகத் தூண்டச் செய்து இந்தக் குறைபாட்டை நீக்கலாம். நாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பு மருத்துவரைச் சந்தித்து, எதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டது என்பதைப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.''

பி.பிரதீப்குமார், ஐதராபாத்

'' எனக்கு 42 வயது. எதிலும் சுத்தம், சுகாதாரம் பார்ப்பவன் நான். கழிப்பறைப் பயன்பாட்டுக்குக்கூட  வீட்டைத் தவிர வெளி இடங்களைத் தவிர்த்துவிடுவேன். ஆனால், இப்போது எனது அலுவலகச் சூழலில் வேலை நேரம் முடியும் வரை சிறுநீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.பழக்கத்தை மாற்றி அலுவலகக் கழிப்பறையைப் பயன்படுத்தவும் முடியவில்லை. வழி தெரியாமல் தவிக்கிறேன். இதற்கு என்ன தீர்வு?''

கன்சல்டிங் ரூம்

டாக்டர் எஸ்.நாராயணசாமி, சிறப்பு பொது மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர், திருச்சி

''சுத்தம் - சுகாதாரம் என்பதெல்லாம் நம் நலன் சார்ந்தும் இருக்க வேண்டும். நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற பழக்கங்களால் எந்தவிதப் பயனும் இல்லை. உங்களுடைய விடாப்பிடியான இந்த இறுக்கம் அடுத்தடுத்து உடல் - மன இயல்பையும் கெடுத்துவிடும். சிறுநீர்க் கழிப்பைத் தவிர்ப்பதற்காக, தண்ணீர் குடிப்பதை பெரும்பாலும் தவிர்த்திருப்பீர்கள். போதிய நீர் அருந்தாமையால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்து உண்டு. சிறுநீரகம், மூத்திரப்பை, மூத்திரக் குழாய் என அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகத்தையும் மூத்திரப் பையையும் இணைக்கும் குழலான யூரிடர் (Ureter) அளவில் பெருத்து ஹைட்ரோ நெப்ரோஸிஸ் (Hydro Nephrosis)  எனப்படும் பிரச்னை தலைதூக்கும். தவிர, மூத்திரப்பாதையும் சிறுநீரகமும் எளிதில் நோய்த் தொற்றுக்கு இலக்காகும் அபாயமும் உண்டு. ரத்தத்தில் வெளியேற்றப்பட வேண்டிய உப்புகளின் அளவு மற்றவர்களைவிட உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். இது வாழ்நாள் முழுமைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதனால், எப்போதும் பதற்றம், கை கால் நடுக்கம் இருக்கும். இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். மூட்டுத் தேய்மானமும் அதிகம் இருக்கும். அவ்வப்போது மயக்க உணர்வு ஏற்படும்.

இதுபோன்ற உடல்ரீதியான பாதிப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள பொது மருத்துவரை அணுகி ஒருமுறை மாஸ்டர் செக்கப் செய்துகொள்ளுங்கள்.  மேற்கொண்டு விபரீதத்தைத் தவிர்க்க வேண்டுமானால், எல்லோரையும்போல், இயல்பாகக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பக்குவத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அலுவலக இடத்தில் தூய்மை போதாது என்று கருதினால் கூடுதல் தூய்மைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.''

எஸ்.கணேசன், விழுப்புரம்

''எனது தாய்மாமனின் மகளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வீட்டில் என்னை வற்புறுத்துகிறார்கள். ரத்த உறவுகளில் திருமணம் முடித்தால், குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதனால், எனக்கு மிகுந்த தயக்கம். நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துகொள்வதால், குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன? விரிவாக விளக்குங்களேன் டாக்டர்?''

கன்சல்டிங் ரூம்

டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர், சென்னை

கன்சல்டிங் ரூம்

''நெருங்கிய உறவுகளில் திருமணம் முடித்தால் பாதிப்புகள் வரலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மைதான். ஆனால், நெருங்கிய உறவுகளில் திருமணம் முடித்தாலே, பாதிப்பு வரும் என்று அர்த்தம் இல்லை.

இதற்கு நடைமுறை உதாரணங்கள் எவ்வளவோ உள்ளன. நெருங்கிய உறவுகளில், திருமணம் முடித்து ஆரோக்கியமானக் குழந்தைகளைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள், சொந்தம் அல்லாத இடத்தில் திருமணம் முடித்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

பெண்ணுக்கோ, பையனுக்கோ வெளியில் தெரிவதுபோல் ஏதேனும் பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் திருமணத்தைத் தவிர்க்கலாம். இதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், வெளியில் தெரிகிற பிரச்னை மரபு ரீதியிலானது என்றால் மட்டுமே குழந்தைகளைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. வெளியில் தெரிகிற பாதிப்புகள் தொற்று நோயாகவோ, போலியோவைப் போல இடையில் வந்ததாகவோ இருந்தால் அது குழந்தைகளை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஒருவேளை மரபுரீதியான குறைபாடு வெளியில் தெரியாமல் இருந்தாலும், குழந்தைகள் பாதிப்படைய நான்கில் ஒரு பங்கு சாத்தியம் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism