பழமே பலம்!

மாம்பழம்

பழமே பலம்!

இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் - சி ஆகிய சத்துகள் ஓரளவு இருக்கின்றன. மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கந்தகம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. நார்ச் சத்து, சர்க்கரையின் அளவு மிகவும் அதிகம். மலச்சிக்கலைப் போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம். 'கல்’ வைத்துப் பழுக்கவைக்கும் பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

பலாப்பழம்

பழமே பலம்!

புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் மிகவும் குறைவு. சிறிதளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி சத்துகள் இருக்கின்றன. மெக்னீஷியம், சோடியம், கந்தகம், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். மலச் சிக்கலைப் போக்கி, நல்ல சக்தியைக் கொடுக்கும். உடலுக்கு மாவுச் சத்து தேவைப்படுபவர்கள், தினமும் நான்கு சுளைகள் எடுத்துக் கொள்ளலாம்.

வாழைப்பழம்

பழமே பலம்!

இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்து ஆகியவை குறைவாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி ஆகிய சத்துகள் மிகக் குறைவு. மெக்னீஷியம் ஓரளவு இருக்கிறது. சர்க்கரை, மாவுச் சத்து அளவு மிகவும் அதிகம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஜீரண சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் சாப்பிடலாம். அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும்.

கிர்ணிப்பழம்

பழமே பலம்!

சர்க்கரை, இரும்பு, நார்ச் சத்து, மாவுச் சத்து ஆகியவை மிகக் குறைவாக இருக்கின்றன. பொட்டாஷியம், சோடியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும்.  

சாத்துக்குடி

பழமே பலம்!

வைட்டமின் - சி அதிக அளவு இருப்பதால், சருமத்தைப் பொலிவாக்கும். சர்க்கரை, மாவுச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது. இதனால், சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சாப்பிட வேண்டாம். விளையாட்டு வீரர்களுக்குத் தசை வலுப் பெறுவதற்கும் நோயாளிகள் நோயில் இருந்து மீண்டு வருவதற்கும் சாத்துக்குடி மிகவும் நல்லது.

திராட்சை

பழமே பலம்!

உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சர்க்கரை ஆகியவை அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் பி1, பொட்டாசியம், வைட்டமின் - சி குறைந்த அளவும் ஓரளவு நார்ச் சத்தும் இருக்கின்றன. அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவை இருப்பதால், அசிடிட்டி, அல்சர், வாயு பிரச்னை, நெஞ்செரிச்சல் இருந்தால் சாப்பிடக் கூடாது. திராட்சையைக் கொட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச் சத்து உடம்பில் சேரும்.

மாதுளை

பழமே பலம்!

புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை மிகவும் குறைவாக இருக்கின்றன. மாவுச் சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் - சி, ஆக்சாலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம், மெக்னீஷியம், கந்தகம் ஓரளவு இருக்கின்றன. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதயநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம். நாக்கு வறண்டு போகாமல் இருக்கும். சோர்வு என்பதே இருக்காது.

அன்னாசிப் பழம்

பழமே பலம்!

சர்க்கரையின் அளவும் நார்ச் சத்தின் அளவும் மிகவும் அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான சக்தி உடனடியாகக் கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. இரும்பு, வைட்டமின் - சி போன்றவை மிதமான அளவில் இருக்கின்றன.

பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலச் சிக்கல் பிரச்னை வராது. ஜீரணிக்கும் தன்மை அதிகம்.

கொய்யாப் பழம்

பழமே பலம்!

நெல்லிக்காய் சாப்பிட முடியாதவர்கள் செங்காய்ப் பருவத்தில் உள்ள கொய்யாப் பழத்தைச் சாப்பிடலாம். நார்ச் சத்து மிக அதிகமாக இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மிகக் குறைந்த அளவும் வைட்டமின் - சி, பொட்டாசியம், சோடியம், மெக்னீஷியம் மற்றும் சர்க்கரை ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சளி இருந்தால் சாப்பிடக் கூடாது என்பது தவறான கருத்து. பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். சில பழங்களில் சின்ன புழுக்கள் இருக்கும்.  துண்டுகளாக நறுக்கிப் பார்த்து, கவனமாக சாப்பிடவேண்டும்.

பப்பாளி

பழமே பலம்!

சர்க்கரை, பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து இருப்பதால் மலச் சிக்கல் பிரச்னை இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண், தோல் என ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கக் கூடியது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். பழத்தை சாப்பிட்டதும், ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்லது. இதனால், உடம்பில் பீட்டா கரோட்டின் சத்து முழுவதுமாக சேரும். சர்க்கரை நோயாளிகள் ஓரளவு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

சப்போட்டா

பழமே பலம்!

மாவுச் சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி ஆகியவை மிகக் குறைந்த அளவிலும், இரும்பு, பீட்டா கரோட்டின் போன்றவை ஓரளவும் இருக்கின்றன. ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், மெக்னீஷியம் அதிகமாகவும், யூரிக் ஆசிட் சிறிதளவும் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.  

பழமே பலம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு