Published:Updated:

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
விரல் சூப்புவதை விடுவது எப்படி?

ராஜேந்திரன், திருச்சி.

 என் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. பற்கள் முளைக்கும் இந்த வயதில், அவனிடம் இருக்கும் விரல் சூப்பும் பழக்கத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது. எத்தனை முறை சொல்லிப் பார்த்தும் அந்தப் பழக்கத்தை அவனால் நிறுத்த முடியவில்லை. இதனால், அவனுடைய பற்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை நிறுத்த வழி இருக்கிறதா?

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

ஜானகிராம், பல் மருத்துவர், சென்னை.

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

குழந்தைகள் விரல் சூப்புவதால், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நீங்கள் நினைப்பது உண்மைதான். ஆனால், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. குழந்தை தொடர்ந்து 5 வயதுக்கு மேலும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால்தான், விரல் வைத்துக்கொண்டு இருக்கும் தாடைப் பகுதியில் காய்ப்பு காய்த்ததுபோல் ஆகி, நிரந்தரப் பற்கள் முளைத்து வெளியில் வருவது கடினமாகும். பற்கள் முளைத்தாலும் முன்னால் இருக்கும் நான்கு பற்கள் தூக்கினாற்போல் ஆகிவிடும். இன்றைய நவீன மருத்துவ உலகில் இதுபோன்ற பாதிப்புகளைக் குணமாக்க நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது என்று தெரிவித்திருக்கிறீர்கள்.  ஏழு வயது வரை குழந்தைக்குப் பால் பற்கள்தான் இருக்கும். ஏழு வயதுக்குப் பிறகே, பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும். நிரந்தரப் பற்கள் முளைக்கும் ஐந்து வயதுக்கு மேலும் குழந்தை இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால், இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கென்றே  உருவாக்கப்பட்டுள்ள  உபகரணத்தைக் கையாளலாம். இரண்டு வயதுக் குழந்தைக்கு இந்த மாதிரியான முறைகள் எதுவும் தேவை இல்லை. விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்கு கிராமங்களில் வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை விரலில் தடவிவிடுவார்கள். இதன் மூலம் ஏற்படும் கசப்பின் காரணமாக, தானாகவே குழந்தை விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடும். இதுபோன்ற வழிமுறைகளைக் கையாளலாம். விரல் சூப்புவதைத் தடுக்க குழந்தையை அடிப்பதோ, மிரட்டுவதோ தவறு. அது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகள் தூக்கம் வருகிற வரைக்கும் விரல் சூப்பும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அதனால் நன்றாகத் தூங்கவும் செய்வார்கள். குழந்தை நன்றாகத் தூங்கியவுடன் விரலை எடுத்துவிட்டால் போதும். குழந்தையின் கவனத்தைத் திசை திருப்புவதுதான் இதில் முக்கியம். உங்கள் குழந்தை எதன் மேல் ஆர்வமாக இருக்கிறதோ, அதைக் குழந்தைக்குக் கொடுத்து விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த முடியும்!

ஜெ. சந்திரசேகரன், தஞ்சாவூர்.

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

என் நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன்.

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

கே.பிரியா, சரும நோய் மற்றும் அழகியல் மருத்துவர், சென்னை.

தலையில் பொடுகு இருந்தால், நெற்றியில் பொரிப்பொரியாக வரக் கூடும். நாளாக நாளாக முகத்தின் மற்றப் பகுதிகளிலும் இது பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பொடுகைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். பொடுகு என்பது ஒரு வகையான பூஞ்சைதான். தலையில் எண்ணெய்ப் பசை அதிகம் சுரக்கும்போது காற்றில் உள்ள தூசு தலையில் படிந்து பொடுகு உண்டாகிறது. எனவே, இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் தலைக்குக் குளித்துவிட்டுப் படுப்பது நல்லது. அவ்வப்போது மைல்டு ஷாம்பூ பயன்படுத்தித் தலைமுடியை அலசலாம். இதனால், தலையில் உள்ள அழுக்கு குறையும். பொதுவாக, பொடுகைக் கட்டுக்குள் வைத்திருக்கலாமே தவிர, முழுவதுமாக நீக்கிவிட முடியாது. 15 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு வகையான முகப் பருவாகவும் இது இருக்கலாம். அதைத் தவிர்க்க ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், நீர்ச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், வேர்க்கடலை, கடலை எண்ணெய், சாக்லேட், நெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும். தலையையும் முகத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே இதுபோன்ற சருமப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியும். இவை பொதுவான வழிமுறையே தவிர, ஆளுக்கு ஆள் வேறுபடலாம். எனவே, சரும சிகிச்சை நிபுணரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.  

த. நவீன்குமார், சிட்லபாக்கம்.

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

வேலை விஷயமாக பல ஊர்களுக்கு அலைய வேண்டி இருக்கிறது. பெரும்பாலும் உணவகங்களில்தான் சாப்பிடுகிறேன். சமயங்களில் உணவகச் சாப்பாட்டை உடம்பு ஏற்றுக்கொள்ளாமல், வாந்தி, வயிற்றுப்போக்கு என உபாதைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. வெளியூர் செல்கிறபோது என்ன மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிடலாம்?

அனிதா தங்கதுரை,  ஊட்டச் சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு  ஆலோசகர், வேலூர்.

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

சுகாதாரக் குறைபாடுகள் உடைய சாலையோரக் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பயணம் செய்வதால், உங்களுக்கு அதிகமான கலோரிகள் தேவைப்படும். எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். சோர்வு அதிகமாக இருந்தால், செரிமானத்தன்மை குறைந்துவிடும். எனவே, காரம் நிறைந்த உணவுகளையும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். ஆவியில் வேகவைத்த இட்லி போன்ற உணவு வகைகள் எளிதில் ஜீரணிக்கும். தொடர்ந்த பயணத்தினால் உடலில் உள்ள நீர் ஆவியாகி உடம்பில் சூடு அதிகமாகும். இதனால், மலச்சிக்கல், மயக்கம் உள்ளிட்டப் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். சுத்தமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்த்து, நார்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் வராது. பழங்களை நன்றாகக் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். ஃபாஸ்ட் புட், அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளிலும் வறுவல், பொரியல்களைத் தவிர்த்து கூட்டாக எடுத்துக்கொள்வது நல்லது. நல்ல உணவகம் கிடைக்காத சமயத்தில் பிரட், காய்கறி, பழங்கள் வாங்கி நீங்களே சாண்ட்விச் செய்து நிலைமையைச் சமாளிக்கலாம். அதற்கு நேரம் இல்லை என்றால் இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிட்டால் பசியும் தணிந்து, உடலுக்குத் தேவையான சத்தும் கிடைக்கும். ஆனால், எல்லா நேரமும் வாழைப் பழமே சாப்பிட முடியாது. எனவே, அதற்குத் தகுந்தாற்போல் எளிதாகக் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடலாம்.    

சத்யஷீலா, திருவண்ணாமலை.

சமீபத்தில் காய்கறி நறுக்கும்போது கையில் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு ரத்தம் உறையாமல் வந்துகொண்டே இருந்தது. ரத்தம் உறைதலில் பிரச்னை ஏதேனும் இருக்குமா?

விரல் சூப்புவதை விடுவது எப்படி?

சாரதா கிருஷ்ணமூர்த்தி, ரத்தம் மற்றும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர், கோயம்புத்தூர்.

##~##

பொதுவாக ரத்தம் உறைதல் என்பது ஐந்து நிமிடங்களுக்குள் நடக்க வேண்டும். ரத்தம் உறைய அதைத் தாண்டியும் நேரம் எடுத்துக்கொண்டால், ரத்தத் தட்டுகளில் (Platelets) பிரச்னை இருக்கலாம். ரத்தத்தில் வெள்ளை அணு, சிவப்பு அணுக்களுக்கு அடுத்தபடியாக ரத்தத்தட்டுகள்தான் உள்ளன. இவைதான் ரத்தம் உறைதலுக்குக் காரணம். இந்த ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலோ, வீரியம் இல்லாமல் இருந்தாலோ, ரத்தம் உறைவதில் பிரச்னை வரும். தவிர, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பே ரத்தத் தட்டுக்களை அழிக்கும் அல்லது ரத்தத்தட்டு உற்பத்தியைத் தடுக்கக் கூடும். இந்தப் பிரச்னை பெண்களிடம் அதிகமாகக் காணப்படும். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு லிட்டருக்கு 30 ஆயிரத்துக்கும் கீழாகக் குறையும்போது, தொடர் ரத்தக் கசிவுக்கு வழிவகுத்துவிடும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலைத் தொடர்ந்து இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நோய் சற்றுக் குழப்பமானது. அறிகுறிகளை வைத்து மட்டுமே தீர்மானித்துவிட முடியாது. இருப்பினும் இதற்குச் சிகிச்சைகள் உள்ளன. எனவே, பயப்பட வேண்டாம். பொது மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். சாதாரண ரத்தப் பரிசோதனையில் ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுப் பார்ப்பார்கள். அதிலேயே உங்களுக்கு பிரச்னை உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். பிரச்னை இருந்தால், மாத்திரை மருந்துகள் மூலமே இதைச் சரிப்படுத்திவிட முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு