Election bannerElection banner
Published:Updated:

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?

##~##

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக், 'பிரபுதேவாவின் நினைவாக தனது கையில் பச்சை குத்திக்கொண்ட பெயரை நயன்தாரா அழிப்பாரா? இல்லை... அப்படியே வைத்துக் கொள்வாரா?’ 

கையில் குத்திக்கொண்ட டாட்டூஸை நினைத்த நேரத்தில், அழிக்க முடியுமா? முடியும் என்றால் எப்படி அழிப்பது? அதனால் சருமத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்படாதா?

டாட்டூஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கிறார் சென்னை 'மியாட்’ மருத்துவமனையின் தோல் நோய்ச் சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.சுகந்தன்.

'டாட்டூவில் இரு வகை உண்டு. நிரந்தரம் மற்றும் தற்காலிகம். எளிதில் அழிக்க முடியாத வகையில் தோலின் மேல்பகுதியில், நிரந்தர அடையாளமாகப் பதிந்து கொள்பவை நிரந்தர டாட்டூஸ். இவற்றை அறுவைச் சிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சை மூலமாக மட்டுமே மாற்றி அமைக்க முடியும். ஆனால், தற்காலிக டாட்டூஸ் அழகுக்காக வண்ணக் கலவைகளால் வரையப்படுபவை அல்லது ஸ்டிக்கர் வடிவில் தோலின் மேற்பகுதியில் ஒட்டப்படுபவை. இந்த வகை டாட்டூஸ்கள் 15 நாட்களானால் அழியத் தொடங்கிவிடும்.

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?

பரம்பரை பரம்பரையாகப் பச்சை குத்துபவர்கள், இதற்கெனத் தனியாகப் பயிற்சி பெற்றவர்கள் எனப்

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?

பலரும் இந்தத் துறையில் இருக்கிறார்கள். இவர்களில் யாரிடம் டாட்டூஸ் குத்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை அடுத்தவருக்கும் பயன்படுத்துவதாலும், அசுத்தமான ஊசிகளைப் பயன்படுத்துவதாலும் தொற்றுநோய்கள் ஏற்படும். குறிப்பாக, பாக்டீரியா, வைரஸ், டெட்டனஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். சிலசமயங்களில், ஹெச்.ஐ.வி., ஹெபடைடிஸ்-பி, சி போன்றவைகூட தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது.

சிலர் இந்த இடம்தான் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் சகட்டுமேனிக்கு சரமாரியாக டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். இப்படிக் குத்திக்கொள்ளும்போது கண் மற்றும் மெல்லிய ரத்தக்குழாய்கள், நரம்புகள் இருக்கும் இடங்களில் ஊசி படுவதால், ரத்தக்கசிவு ஏற்பட்டு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இவை தவிர, வண்ணங்களினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, சிவப்பு வண்ண டாட்டூவில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் சருமப் பாதிப்பு உண்டாகலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், டாட்டூ இருக்கும் இடத்தில் ஸ்கேன் தெளிவாகத் தெரியாமல் போக வாய்ப்புண்டு. இதனால், நோயினைக் கண்டறிவது சிரமமாக இருக்கும். மிக அரிதாக சிலருக்கு தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.

இந்தச் சிரமங்களை எல்லாம் தவிர்க்கும் பொருட்டு, தற்போது பலரும் தற்காலிகமான டாட்டூக்களைக் குத்திக்கொள்வதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், இதிலும் பெயின்ட்டில் உள்ள

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?

ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாமல் சருமப் பாதிப்பு ஏற்படலாம். அதேபோல, டாட்டூ ஸ்டிக்கரில் உள்ள பசையும் ஒவ்வாமையை உண்டாக்கலாம். மருதாணி வைத்துக்கொள்வதுகூட தற்காலிக டாட்டூ வகையைச் சேர்ந்ததுதான். வண்ணம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் மருதாணியில் பி.பி.டி. என்ற ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். இதனாலும் கடுமையான ஒவ்வாமை ஏற்படலாம்.

காதலிக்கும்போது காதலன் அல்லது காதலி பெயரை டாட்டுவாகக் குத்திக்கொள்வார்கள். ஏதாவது சில காரணங்களால் அந்தக் காதல் கைகூடாமல், வேறு யாருடனோ திருமணம் நிச்சயம் ஆகிவிடும். அதுபோன்ற சமயங்களில் டாட்டூவை அழிக்கச்சொல்லி பலரும் வருகிறார்கள்.

லேசர் சிகிச்சை மூலம் டாட்டூவை அகற்றலாம். ஆனால், முழுமையாக அகற்ற முடியும் எனச் சொல்ல முடியாது. நீலம், கருப்பு வண்ணங்களில் உள்ள பாரம்பரிய டாட்டூவை நீக்குவதற்கு நான்கு முதல் எட்டு முறை லேசர் செய்தால் போதும். ஆனால், தொழில்முறையிலான பல்வேறு வண்ண டாட்டூவை நீக்குவது கொஞ்சம் சிரமமான காரியம். ஏனெனில், இந்த வண்ணக் கலவையில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், இதனை அழிப்பதற்கு 20 முறைகூட லேசர் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கலாம். சில நேரங்களில் வண்ண டாட்டூவில் லேசர் செய்யும்போது டாட்டூவானது வேறு வண்ணமாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வெள்ளை மற்றும் ப்ரௌன் வண்ணங்களின் மேல் லேசர் சிகிச்சை செய்யும்போது அவை கருப்பாக மாறிவிடும்.

டாட்டூ குத்தும்போது செலவாகும் நேரம் - பணம், உண்டாகும் வலியைவிடவும் அதை நீக்கும்போது ஏற்படும் வலி, செலவாகும் நேரம் - பணம் எல்லாமே பன்மடங்காக இருக்கும்!' என்று எச்சரிக்கும் டாக்டர் சுகந்தன் இறுதியாக இப்படிக் கேட்கிறார்.

''பிறர் கவனத்தைத் திருப்பத்தான் டாட்டூ குத்திக்கொள்கிறோம். மகத்தான நமது உடலை வருத்தி பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டியது அவசியமா என்ன?''

நியாயமான கேள்விதானே!

டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு