பிரீமியம் ஸ்டோரி

வேண்டும்  விழிப்பு உணர்வு!

துளித் துளியாய்...

''இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம்  பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரகத் தானம் கிடைக்கிறது. ஏனையோருக்கு டயாலிசிஸ்தான் வழி. ஆனால், டயாலிசிஸ் செய்துகொள்ள மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் எல்லோருக்கும் இது சாத்தியம் இல்லை. இந்தப் பிரச்னையைத் தடுக்க, அரசே இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்'' என்றார் டாக்டர் சௌந்தர்ராஜன். கடந்த மார்ச் 8-ம் தேதி உலகச் சிறுநீரகத் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார்... ''சிறுநீரகப் பாதிப்புகளை முன்கூட்டியே பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். தொடக்க நிலையிலேயே சுதாரித்தால், சிறுநீரகம் செயல் இழக்கும் அளவுக்குப் போகாது. இந்த விழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதேபோல், எந்தப் பயமும் இன்றி சிறுநீரகத் தானம் அளிக்கலாம் என்ற விழிப்பு உணர்வையும் மக்களிடம் உண்டாக்க வேண்டும். அப்போதுதான் லட்சக்கணக்கான சிறுநீரக நோயாளிகளின் உயிரை நம்மால் காக்க முடியும்'' என்றார் டாக்டர் சௌந்தர்ராஜன்.

சிறப்பான தானம்....

சிறுநீரகத் தானம்!

செவியில் ஏறுமா செவிலியர் கோரிக்கை?

துளித் துளியாய்...

ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை... உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அப்போலோ, ஃபோர்டிஸ் மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதில் தொழிலாளர் நலத் துறையின் தலையீட்டுக்குப் பிறகு, மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை நிர்வாகங்கள் ஊதிய உயர்வுக்குச் சம்மதம் தெரிவித்தன. ஆனால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகமோ, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டிஸ்மிஸ் செய்வது, செவிலியர்கள் தங்கியிருந்த விடுதியில் மின்-குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது, விடுதியில் உணவு அளிக்க மறுத்து முன்னறிவிப்பு இன்றி விடுதியைப் பூட்டுவது என்று போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியது. இதனால், வீதிக்கு வந்த செவிலியர்கள் பேரணி, மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். செவிலியர்கள் போராட்டத்தால் நோயாளிகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். பல அறுவைச் சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. ஒரு வழியாக அரசின் நெருக்கடிக்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்த நிர்வாகம், ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டது. இதனால் செவிலியர்கள் போராட்டத்தை முடித்து பணிக்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பிரச்னை நீறு பூத்த நெருப்பாக மாறி இருக்கிறது!

வலியைப் போக்குகிறவர்களின்

'வலி’யைப் போக்க வேண்டாமா?

துளித் துளியாய்...

குடிநீரில் கொடி நாட்டுவோம்!

உலக மக்களுக்குக் கிடைக்கும் குடிநீர், சுகாதாரம் குறித்து 'நூற்றாண்டு வளர்ச்சி இலக்கு’ என்ற பெயரில் ஐ.நா. சபை ஆய்வு நடத்திவருகிறது. 1990-ல் இருந்து 2010 வரையிலான நூற்றாண்டுக் காலத்தில், 200 கோடிக்கும் அதிகமான மக்கள் போர்வெல் மூலம் சுத்தமான குடிநீர் பெற்றனர் என உலகச் சுகாதார நிறுவனமும் யுனிசெஃப் நிறுவனமும் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டன. 2010 இறுதியில் உலக மக்கள் தொகையில் 88% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் என ஐ.நா. இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், அதைவிடக் கூடுதலாக ஒரு சதவிகிதம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைத்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாம். தற்போது '2015-க்குள் 92% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’ என்று சொல்லி இருக்கிறது ஐ.நா.!

அப்படியே...

சுகாதாரத்திலும் கவனம் கொள்ளுங்கள்!

கங்கிராட்ஸ் கௌதமி!

துளித் துளியாய்...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக் கருத்தரங்கை நடத்தியது அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையம். நடிகை கௌதமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 'மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு முறைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும், மார்பகப் புற்றுநோய் குறித்து தன்னுடையச் சொந்த அனுபவங்களையும் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார். இந்தியாவில் வருடந்தோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாவதாகக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட தகவல்தான் பலரையும் அதிரவைத்தது.

ஆரோக்கியத்திலும்

அக்கறை வேணும் பெண்ணே!

மருத்துவம்... மகத்துவம்!

மருத்துவம், ஹோட்டல், ஐ.டி. துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மாஃபா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவத் துறையில் 2.74 லட்சம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 2.3 லட்சம், தகவல் தொழில்நுட்பத் துறையில் 2.27 லட்சம் எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் மருத்துவத் துறை முன்னணியில் இருப்பதாக 'மாஃபா ரான்ஸ்டாட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிர் காக்க உதவுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு