Published:Updated:

நீங்க சாப்பிடுவது சத்தானதுதானா?

குழந்தைகளிடம் 'கொஞ்சல்' ஆராய்ச்சி!

நீங்க சாப்பிடுவது சத்தானதுதானா?
##~##

'உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுத்து அனுப்பும் மதிய உணவு சத்தானதா? குழந்தையின் உடல் - மன வளர்ச்சிக்கு இந்த உணவு ஏற்றதா?’ - குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரிடமும் கேட்க வேண்டிய கேள்விகள் இவை. குழந்தைகளின் மதிய உணவுக்காகப் பெற்றோர்கள் பள்ளிக்கு என்னதான் கொடுத்து அனுப்புகிறார்கள்? வளரும் குழந்தைப் பருவத்தினருக்கு அந்த உணவில் இருக்கும் சத்துக்கள் போதுமானதா என்பதைத் தெரிந்துகொள்ள, 'ஆபரேஷன் டிபன் பாக்ஸ்’ திட்டத்தில் இறங்கினோம். சென்னை  அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள லியோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிதான் நமது இலக்கு. வளர் இளம்பருவத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் உணவுகளைப் பரிசோதிப்பதுதான் திட்டம். 

டயட்டீஷியன் ஷீலா ஸ்வர்ணகுமாரியுடன் மதிய உணவு நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்தபோது, மாணவர்கள் தனித் தனிக் குழுக்களாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். ''என்ன சாப்பாடு கொண்டுவந்திருக்கீங்க? காட்டுங்க பார்க்கலாம்'' என டயட்டீஷியன் கேட்டதுதான் தாமதம், ஒவ்வொருவராகத் தங்களுடைய டிபன் பாக்ஸை அவர் முன் நீட்டினர். யுவஸ்ரீயின் டிபன் பாக்ஸில் இட்லி, சாம்பார்; தரணீஸ்வரியின் டிபன் பாக்ஸில் புளி சாதம்; அபிநாயகியின் டிபன் பாக்ஸில் வெஜிடபிள் பிரியாணி எனக் குழந்தைகள் அங்கே ஒரு சாப்பாட்டுக் கடையையே விரித்திருந்தார்கள்.

நீங்க சாப்பிடுவது சத்தானதுதானா?

'நீங்க எல்லாருமே வளர்ற பருவத்துல இருக்கீங்க. சத்தான உணவுகளைச் சாப்பிட்டாத்தான் பெரிய ஆளா, ஆரோக்கியமா வளர முடியும். உங்களோட தினசரி உணவுல காய்கறி, பழங்கள், கீரைகள் கட்டாயமா இருக்கணும். எதையுமே ஒதுக்கக் கூடாது' என்று டயட்டீஷியன் சொல்ல, ஆமோதிப்பதுபோல் தலையாட்டினார்கள் குழந்தைகள்.

'இட்லியில அரிசியும் உளுந்தும் இருக்குறதால கார்போஹைட்ரேட், ஓரளவு புரதம் கிடைக்கும். ஆனா, தேவையான அளவுக்குப் புரதச் சத்து கிடைக்காது. அதை ஈடுகட்ட பருப்பு சாம்பார் நல்லது. அதேசமயம் வைட்டமின், தாது உப்புக்கள் இதுல இல்லை. புளிசாதத்துக்கு தொட்டுக்க எதுவுமே கொண்டுவரல. அதுல இருந்து கார்போஹைட்ரேட் மட்டும்தான் கிடைக்கும். வெஜிடபிள் பிரியாணி. பேருதான் வெஜிடபிள் பிரியாணியே தவிர, அதுல கொஞ்சம்கூட காய்கறியே இல்ல.

என்னைக்காவது ஒருநாள்னா இட்லி ஓ.கே. ஆனா, டெய்லி இட்லியே கொடுத்து அனுப்பக் கூடாது. கலந்த சாதத்துக்கு ரைத்தா அல்லது புதினா சட்னி கொடுத்து அனுப்பலாம். காய்கறிகளும், பழங்களும் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா தேவை. அதுவும் வளர்ற குழந்தைகள் தினமும் ஏதாவது ஒரு காய்கறியைக் கண்டிப்பா சேர்த்துக்கணும்.

குழந்தைங்களுக்கு நொறுக்குத் தீனி ரொம்ப முக்கியம். ஆனா பாக்கெட்ல அடைச்ச சிப்ஸ், கேக், பிஸ்கட் போன்ற உணவுகளை அறவே தவிர்க்கணும். இன்னைக்கு சின்னக் குழந்தைகள் அதிகக் குண்டா இருக்குறதுக்குக் காரணமே இந்த வகை உணவுகள்தான். அதுக்குப் பதிலா பழங்களையும் வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளையும் கொடுத்து அனுப்பலாம்'' என்று சொல்லி முடிக்க, குழந்தைகளும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

''பரவாயில்லையே... யாருமே மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே. வெரிகுட், இப்படித்தான் இருக்கணும்'' என்று டயட்டீஷியன் ஷொட்ட, ''தேங்க்ஸ் ஆன்ட்டி' என்று கோரஸ் பாடினர் குழந்தைகள்.

 பின்டோ பாக்ஸ்

குழந்தைகளுக்கான டிபன் பாக்சில் மதிய உணவை அழகுபடுத்திக் கொடுத்து அனுப்புவது ஜப்பானியர்களின் வழக்கம். பிறந்தநாள் வாழ்த்து, திருவிழா, தேர்வுக்கு வாழ்த்து.... என எல்லாத் தகவல்களும் லஞ்ச் பாக்ஸ் மூலம் தினமும் குழந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும். அதனால், 'இன்று அம்மா என்ன டிசைனில் மதிய உணவு கொடுத்திருக்கிறார்கள். என்ன வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்’ என்று பிரித்துப்பார்ப்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். 'இந்த முறையைப் பின்பற்றிப் புதுப்புது அலங்காரத்தோடு லஞ்ச் பாக்ஸில் உணவைக் கொடுத்தனுப்பும் போது, குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுவர்’ என்கின்றனர் குழந்தைகள் மனநல மருத்துவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு