Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்டிங் ரூம்

சிவக்குமார், திருப்பத்தூர், வேலூர்.

''எனக்கு 45 வயது. மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்தபோது சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது. ரத்தத்தில் கொழுப்பு அளவும் சற்று அதிகமாக உள்ளது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்திவிடலாம் என்று மருத்துவர் கூறினார். உணவுக் கட்டுப்பாட்டை ஆரம்பித்துவிட்டேன். என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்வது என்று தெரியவில்லை. தினமும் நடைப்பயிற்சி மட்டும் 10 - 15 நிமிடங்கள் செய்துவருகிறேன். இது போதுமா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்டிங் ரூம்

விஸ்வநாதன், பிசியோதெரபிஸ்ட், டெல்லி.

''ஒரு நாளைக்குப் பத்து நிமிட நடைப்பயிற்சி போதாது. குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யுங்கள். வாரத்துக்கு ஆறு நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. மெதுவாக நடக்கத் தொடங்க வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் வேகத்தைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சியை முடிக்கும் முன்பு கொஞ்ச நேரம் நடையின் வேகத்தை மெள்ள மெள்ளக் குறைக்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமோ அல்லது இரைப்போ வராத வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவர் அல்லது உடற்பயிற்சி ஆலோசகரை அணுகிப் பயிற்சிமுறையை மாற்றி அமைத்து அதன் பின்னர் தொடர்வதே நல்லது. மனைவி, ஃபிட்னஸ் ட்ரெய்னர் அல்லது நம் மீது அக்கறை உள்ளவர்களோ சொல்லும்போது பலரும் நடைப்பயிற்சி செய்வது இல்லை. இதுவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அறிகுறிகள் என்று வரும்போது நடைப்பயிற்சியை சிலர் பயத்தோடு செய்வார்கள். நடைப்பயிற்சியை அஞ்சி அஞ்சி செய்ய வேண்டியது இல்லை. நல்ல இசையை ரசித்துக் கேட்பது மாதிரி நடைப்பயிற்சியை அனுபவித்துச் செய்ய முடியும். பொதுவாக மாரடைப்பு என்றால் எல்லோரும் அஞ்சுவதற்குக் காரணம் - இது வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடியது. 'பெட்டர் லேட் தென் நெவர்’ என்றாலும், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவது ஏன் என்று யோசிக்க வேண்டும். சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே மாரடைப்பு வந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி முறையாக உடற்பயிற்சி செய்துவருபவர்களுக்கு, மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு. உடற்பயிற்சி செய்யும்போது ரத்த ஓட்டம் அதிகரித்து அதிக அளவிலான ஆக்சிஜனைத் தசைகளுக்குக் கொண்டுசெல்கிறது. அதனால், யார் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.  இதற்கு முதலில் உடற்பயிற்சி ஆலோசகரை அணுகுவது நல்லது. அவர்தான் உங்கள் உடல்நிலையை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப உங்களுக்கான உடற்பயிற்சியை வடிவமைத்துத் தருவார்.''

பா.வேதவல்லி, கோவை.

கன்சல்டிங் ரூம்

''எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்குத் தலையில் பேன் தொல்லை அதிகமாக உள்ளது. வேப்ப எண்ணெய் தடவியும் குறையவில்லை. 'பேன்களை ஒழிக்கும்’ என்று விளம்பரப்படுத்தப்படும், ஷாம்பு வகை முடிக்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள். எதனால் பேன் வருகிறது? பேன் தொல்லையை ஒழிக்க எந்த முறை சிறந்தது?''

டாக்டர் ராஜா, தோல்நோய் மருத்துவர், கோவை.

''பள்ளி - கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளுக்கான முக்கியப் பிரச்னை பேன். ஒரு பெண் குழந்தைக்குப் பேன் இருந்தால், அவளோடு நெருங்கிப் பழகும் மற்ற குழந்தைகளுக்கும் இது பரவும். எனவே, தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் தலைக்குக் குளிப்பது நல்லதுதான். முடியாதவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்களாவது தலைக்குக் குளிப்பது நலம். சுத்தமான எண்ணெய் தேய்த்து, பேன் எடுக்கும் சீப்புகளை வைத்து சீவி, முறையாகப் பின்னல் இட்டுக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் பேன் வராமல் தடுக்கும் முறைகள்.

ஏற்கெனவே பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் உடனடியாகத் தோல் நோய் மருத்துவரைச் சந்தித்து, உங்கள் மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் ஏதேனும் சிரங்கு, ஈறு, கட்டிகள் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர் பரிந்துரைக்கும் மருந்துகள், ஷாம்புகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் சில மாதங்களுக்குப் பேனைத் தற்காலிகமாக விரட்டலாமே தவிர, முற்றிலுமாக இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டுவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பிற பெண்களுடன் நெருக்கமாக அமரும்போதும் பழகும்போதும், மீண்டும் பேன் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், சீரான இடைவெளியில் மருத்துவர் கொடுத்த ஷாம்புவைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.''

ரேகா, திண்டுக்கல்.

''எனக்கு வயது 42. இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுநீர் வரும் இடத்தில், சதைபோல் தென்பட்டது. தற்போது அந்த சதை வளர்ந்து இருக்கிறது. எந்தவிதமான வலியோ, எரிச்சலோ இல்லை. சதை எதனால் வருகிறது? புற்றுநோயாக இருக்க வாய்ப்பு உண்டா? ப்ளீஸ் சொல்லுங்கள்''

கன்சல்டிங் ரூம்

டாக்டர் என்.புனிதாமணி, மகளிர் மகப்பேறு, குழந்தையின்மை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர், வத்தலக்குண்டு.

''சிலருக்கு திசுக்கள் அதீத வளர்ச்சி அடையலாம் அல்லது ஏதேனும் மச்சம் இருந்து அதுவும்கூட பெரிதாகிக்கொண்டே போகலாம்.

கிருமித்தொற்று ஏற்படுவதாலும் சதை வளர வாய்ப்பு இருக்கிறது. ஒருசில வைரல் தொற்றுக்களாலும் சதை வளரும். புற்றுநோய் காரணமாகவும் அரிதாக சதை வளரலாம். இப்படியாக சதை வளர்வதற்குப் பல காரணங்கள் உண்டு. வெளியூர்களுக்குச் செல்லும்போது, சுகாதாரமற்ற கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. சிலர் சிறுநீர் கழித்ததும் தண்ணீரினால் சரியாகக் கழுவி சுத்தம் செய்யாததாலும் உடனடியாக கிருமித்தொற்று ஏற்படும்.

தங்களுக்கு வந்திருப்பது சாதாரணத் திசு வளர்ச்சியாகக்கூட இருக்கக்கூடும். ஆபரேஷன் மூலம் அந்தச் சதையை வெட்டி எடுத்து பயாப்ஸி (Biopsy) செய்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சதை வந்ததற்கான காரணங்களை முழுமையாக அறிய முடியும். 10 முதல் 15 நிமிடங்களுக்குள் அறுவைசிகிச்சை செய்துவிடலாம். கவலையைத் தூக்கி எறிந்துவிட்டு, பயப்படாமல் மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.''

கன்சல்டிங் ரூம்

ஷர்மிலி, திருவண்ணாமலை.

''எனக்கு 26 வயது. ஆனாலும் உடல் நல்ல சதைப் பற்றோடு இல்லாமல் ஒட்டிப்போய் இருக்கிறது. உடல் எடையும் குறைவுதான். எடையைக் கூட்டி, சதைப் பற்றுடன் இருக்க என்ன சாப்பிட வேண்டும்? என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது?''

கன்சல்டிங் ரூம்

சோபியா, டயட்டீஷியன், சென்னை.    

''உடல் அமைப்புக்கு பரம்பரை உடல்வாகும் ஒரு காரணம். உடம்பில் சதை போடுவதற்கு புரதச் சத்து நிறைந்த உணவுகளை நிறையச் சாப்பிடுங்கள். கொழுப்பு உணவுகளை ஓரளவுக்குத் தவிர்த்து பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் அதிக அளவில் உட்கொண்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதாவது ஒருவர் இருக்க வேண்டிய எடையில் இருந்து பத்து அல்லது இருபது சதவிகிதம் குறைவாக இருந்தால், அவர் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகளில் இருந்து கிட்டத்தட்ட 500 கலோரிகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, காலையில் மூன்று இட்லிகளுக்குப் பதிலாக நான்கு இட்லிகளும் மதிய உணவில் அரிசியின் அளவைச் சற்றுக் கூட்டியும் இரவு நேரத்தில் மூன்று சப்பாத்திகளுக்குப் பதிலாக நான்கு சப்பாத்திகளையும் சாப்பிட்டுவந்தால், உடலில் மாற்றங்களைக் காணலாம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகள் ஆரோக்கியம் காப்பவை என்பதால், உணவில் இவற்றை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். கன்னங்களை மட்டுமே பருமன் அடையவைக்கும் உணவுகள் என்று குறிப்பிட்டு எதுவும் இல்லை.''

கன்சல்டிங் ரூம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism