Published:Updated:

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

Published:Updated:

ஜோதிடம்... யாரிடம்?

அனுபவம் பேசட்டும்!

என் அக்கா கணவர் ஒரு விபத்தில் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்த நண்பர், சற்று ஜோதிட அறிவு உள்ளவர். என் அக்காவிடம் சென்று, 'நீ ஒண்ணும் கவலைப்படாதே... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுன்னு விடு' என்றார். அத்துடன் அவரும்விட்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால், 'உன் ராசி, நட்சத்திரப்படி உன் கணவருக்கு இப்போ கொஞ்சம் நேரம் சரி இல்லை, உனக்கும்  சுத்தமா நேரம் நல்லாவே இல்லை...' என்று மேலும் பயம் ஏற்படுத்தும் விதமாய் ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார். உடல் நலம் குன்றியவர்களை நாம் நலம் விசாரிக்க செல்வதே, தைரியம் சொல்லத்தான்! ஆனால்,  ஆறுதலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, இந்த மாதிரிப் பேசி நோயாளியையும் அவர் குடும்பத்தினரையும் சங்கடப்படுத்தலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நித்யா பாலாஜி, மணப்பாக்கம்.

பாசம் கலந்த சேவை!

அனுபவம் பேசட்டும்!

நான் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறேன். எங்கள் மருத்துவமனையில் ஒரு சமயம் 9 வயது சிறுவன் ஒருவன் டைஃபாய்டு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்தான். அந்தச் சிறுவன் ஊசி என்றாலே பயப்படுவான். அதனால், அவனிடம் விளையாட்டு காட்டி வலிக்காமல் ஊசியைப் போட்டுவிட்டேன். அவன் மருத்துவமனையில் இருந்த வரை என்னிடம் மட்டும்தான் ஊசிப் போட்டுக்கொள்வான். 'நீங்க ஊசி போட்டாத்தான் வலிக்கவே இல்லை’ என்று சொல்வான். இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், திடீரென்று, அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு, அவனின் பெற்றோர் என்னிடம் வந்தனர். 'காலைல இவனுக்கு ரொம்பக் காய்ச்சலா இருந்தது.  அவசரத்துக்குப் பக்கத்துல இருக்கிற கிளினிக்குக்குப் போனோம். டாக்டர் ஊசி எழுதிக்கொடுத்தா, உங்ககிட்டதான் போட்டுக்குவேன்னு சொல்லி அழுதான். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்’ என்று சொன்னார்கள். ஒரு வேலையைக் கடமையாகக் கருதி செய்யாமல், அர்ப்பணிப்போடு செய்யும்போது, அதற்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்று நான் நெகிழ்ந்துபோன தருணம் அது!

- ஜோஸ்வின் ஹேமலதா, திண்டுக்கல்.

சூடு போட்டால் படிப்பு வருமா?

அனுபவம் பேசட்டும்!

சமீபத்தில் மலேரியா பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். அப்போது ஒரு சிறுமியை ரத்தக் காயத்தோடு சிகிச்சைக்கு அழைத்துவந்தார்கள். மூக்குக்குக் கீழே ரத்தம் கொட்டியபடி இருந்தது. 'ஸ்கூல்விட்டு வந்தவ படிக்கட்டில் விழுந்துட்டா... என்னோட ஒரே பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சே...’ எனக் கதறிக்கொண்டு இருந்தார் அந்தக் குழந்தையின் தாய். நாங்கள் எல்லோரும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லித் தேற்றினோம். உள்ளே, அந்தக் குழந்தைக்கு தையல் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இதற்கிடையில் டெஸ்ட் ரிசல்ட் குறித்துப் பேசுவதற்காக மருத்துவர் அறையில் இருந்து எனக்கு அழைப்பு. உள்ளே போய்க் காத்திருந்தேன். அப்போது தையல் போடும் வலியை மறக்கடிப்பதற்காக டாக்டர் அந்தச் சிறுமியுடன் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார். 'நான் நாலாவது படிக்கிறேன். மிஸ் வெச்ச டெஸ்ட்ல நான் கம்மியா மார்க் வாங்கிட்டேன். அதனால, அம்மா கையில வெச்சிருந்த விறகால மூஞ்சியில அடிச்சிட்டாங்க...’ என அந்தச் சிறுமி சொல்லச் சொல்ல... எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். கூடவே, தன் கை, கால்களில் இருந்த தழும்புகளைக் காட்டிய அந்தச் சிறுமி, 'இதெல்லாமே அம்மா போட்ட சூடுதான். என்னை எல்லா நேரத்துலயும் அம்மா நல்லாப் பாத்துப்பாங்க. ஆனா, படிப்பு சரியில்லைன்னா அம்மாவுக்கு கோபம் வந்திடும். கம்பியக் காயவெச்சு சூடுவெச்சிடு வாங்க’ என்று சொன்னபோது எனக்கு உயிரே உறைந்துவிட்டது. குழந்தைகள் தவறு செய்கிறார்கள் என்பதாலோ, படிக்கவில்லை என்பதாலோ சூடுவைக்கும் பழக்கம் இன்னமும் பல இடங்களில் இருக்கின்றன. இது மிக மோசமான வன்முறை. குழந்தைகளைத் திருத்த நினைப்பதாகச் சொல்லிக்கொண்டு இப்படி எல்லாம் நடந்துகொள்பவர்களை  என்ன சொல்லித் திருத்துவது?

- எம்.சதீஷ்குமார், அரும்பாக்கம்.

வலி போக்கும் வழியாக இருந்தாலும் சரி, உயிர் காக்கும் உபாயமாக இருந்தாலும் சரி... உங்கள் அனுபவங்களை மற்ற வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நீங்கள் பட்டறிவு உள்ள ஒரு நோயாளியாகவோ அல்லது படிப்பறிவுள்ள மருத்துவராகவோதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, வாசகர்களாகிய நீங்கள் உங்களது அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

அனுபவம் பேசட்டும், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல்: doctor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism