Published:Updated:

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

Published:Updated:

குளிர்பானமும் இருமல் மருந்தும்!

அனுபவம் பேசட்டும்!

சின்ன விஷயத்திலும்கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய சம்பவம் இது. என் ஐந்து வயது மகனுக்கு ஜூஸ் என்றால் உயிர். அதனால் பழங்களை வாங்கி ஜூஸ் பிழிந்து வீட்டில் உள்ள சின்ன சின்ன பாட்டில்களில் ஊற்றி வைப்பது என் வழக்கம். ஃப்ரிட்ஜைத் திறந்து அவனே எடுத்து ஜூஸைக் குடிப்பான். ஒரு சமயம் என்னுடைய அப்பா இருமலுக்காக சிரப் ஒன்றை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் மகன் வழக்கம்போல பள்ளியில் இருந்து வந்ததும் குளிர்பானம் என்று நினைத்து ஃப்ரிட்ஜில் இருந்த இருமல் மருந்தை எடுத்து வாயில் வைத்துவிட்டான். ஒரு வாய் குடித்தவன் அதன் சுவை பிடிக்காததால் உடனே துப்பிவிட்டு, ''மம்மி! இந்த ஜூஸ் நல்லாவே இல்ல. இனிமே இதை வாங்காதே!'' என்றான். அவன் கையில் இருந்த மருந்து பாட்டிலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். பிரச்னை ஒன்றும் ஆகவில்லை என்பதில் நிம்மதிதான். ஆனால், இதுவே வேறு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மருந்தாக இருந்து, அவனும் குடித்திருந்தால்? மருந்துகளை மட்டும் அல்ல; காலி மருந்து பாட்டில்களையும்கூட கவனமாகக் கையாள வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

- பி.ரேணுகாதேவி, சிறுமுகை.

நலம் தரும் நாட்டு வைத்தியம்!

அனுபவம் பேசட்டும்!

எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயதிலிருந்து தினமும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில்தான் குளிப்பேன். ஊரே என்னைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தவள், ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். போன வருடம் எங்கள் ஹாஸ்டலில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது, கிணற்றுத் தண்ணீரில்தான் தலைக்குக் குளிக்க வேண்டி இருந்தது. செம்மண் கலந்து வரும் அந்தத் தண்ணீரில் குளித்ததால் முடி உதிர்ந்து தலையில் பொடுகும் பிடித்துவிட்டது. நானும் தோல் சிகிச்சை நிபுணரில் ஆரம்பித்து எல்லாச் சிறப்பு மருத்துவர்களையும் பார்த்தேன்; எந்தப் பலனும் இல்லை. ஆறே மாதத்தில் முடி அரை அடியாகக் குறைந்துவிட்டது. விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது, 'பட்டணத்துப் பொண்ணு மாதிரி முடியை நீயும் குட்டையா வெட்டிக்கிட்டியா?’ என்று எல்லாரும் திட்டினார்கள். என் அம்மா கோபித்தபோது, 'தண்ணீரால்தான் இப்படியானது’ என்று விவரத்தைச் சொன்னேன்.

ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போய் என் தலையைக் காட்டினார்கள். அந்த வைத்தியர், 'சின்ன வெங்காயத்தைச் சின்னதாக அரிந்து, அதில் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அந்தக் கலவையை மிக்ஸியில் நன்றாக அடித்து ஷாம்பு மாதிரியாக்கி, தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து, சீயக்காயைத் தலையில தேய்த்து, வெந்நீரில் முடியை அலச வேண்டும். வாரம் இரு நாட்கள் இப்படிச் செய்தால், பொடுகு, பேன் கிட்டே நெருங்காது. முடியும் நன்றாக வளரும்’ என்றார். நானும் அப்படியே செய்தேன். இப்போது, பொடுகு சுத்தமாக இல்லை. முடியும் நன்றாக வளர்ந்துவிட்டது. நாட்டு வைத்தியத்தின் நன்மையைப் புரிந்து வியந்துபோனேன் நான்!

- பெ.ஸ்டெல்லா மேரி, சென்னை - 60.

வாழ்த்து பெற்ற கையெழுத்து!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு நான் போயிருந்தபோது நடந்த சம்பவம் இது. மனநலப் பிரிவில் மன நோயாளி ஒருவர் சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தார். அவரைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அங்கிருந்த பலரும் அவரைக் கெட்டியாகப் பிடித்தபடி படாத பாடுபட்டனர். அப்போது மனநல மருத்துவர், 'இவரைச் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்றால், யாராவது ஒருவர் சேர்க்கை மனுவில் கையெழுத்து போட வேண்டும்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துவந்தவர்கள்கூட கையெழுத்து என்றவுடன் நைசாக நகர்ந்துவிட்டனர். கையெழுத்து போட யாரும் முன்வராத நிலையில், நான் தைரியமாக சேர்க்கை விண்ணப்பத்தில் கையப்பமிட்டேன்.

அனுபவம் பேசட்டும்!

சமீபத்தில், ஒரு நபர் தன் குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்து, காலில் விழுந்து வணங்கிவிட்டு, 'உறவுகள்கூட ஒதுங்கிவிட்ட நிலையில் இருந்த என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்க முன்பின் தெரியாத நீங்கள்தான் கையெழுத்து போட்டீர்கள். அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்’ என்றார். அன்று நான் போட்ட ஒரு கையெழுத்து... இன்று என் குடும்பத்துக்கே பெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தந்து இருக்கிறது. நோயாளி ஒருவர் துயரத்தில் இருக்கும்போது, வேடிக்கை பார்க்காமல், நம்மால் இயன்ற அளவு உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது என்பதை உணர்ந்தேன்!

- சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

அனுபவம் பேசட்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism