Published:Updated:

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

Published:Updated:
##~##

மீபத்தில் சிவகாசியில் ஏற்பட்ட தீ விபத்து 38 பேரைக் காவு வாங்கிய துயரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. எத்தனையோ பேரின் கனவுகளை நிமிட நேரத்துக்குள் கருக்கிப் போட்டுவிடுகிறது நெருப்பு. 

நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்கிற கனவுடன் பத்து வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தவர் அம்பத்தூரைச் சேர்ந்த கல்பனா. இரவிலும் தூங்காமல் கண்விழித்துப் படிப்பார். தினமும் டீ தயார் செய்துதரும் அம்மா, ஒரு நாள் இரவு  சோர்ந்து படுத்திருக்க.... அவரை எழுப்ப மனம் இன்றி, அடுக்களை சென்று டீ தயாரிக்க ஆரம்பித்தார் கல்பனா. ஆனால், தூக்கக் கலக்கத்தில் இருந்த கல்பனாவின் கவனக் குறைவு தீயின் கொடூரத் தாக்குதலுக்கு அவரை ஆளாக்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எரிச்சல், வலி, காயங்களைக் கண்டு கலங்காமல், மன தைரியத்துடன் குணமடைந்த கல்பனா இன்றும் உரிய சிகிச்சைகளைத் தொடர்ந்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்றுவருகிறார். கெல்லீஸில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கல்பனாவை நேரில் சந்தித்தோம். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், முகத்தில் இருந்த பழைய சோகத்தை புதிய வாழ்க்கை மாற்றி இருக்கிறது.

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

''நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். அம்மா, அப்பா, அக்கா, தங்கை இவங்கதான் என் உலகம். நான் ஆசைப்பட்டபடி பி.ஃபார்ம் படிப்பில் சேர்ந்தேன். 2002-ல் ஒருநாள் ராத்திரி, டீ போட்டுக் குடிக்க, பம்ப் ஸ்டவ்வை மூட்டினப்ப, திடீர்னு தீ கொழுந்துவிட்டு எரிஞ்சு, தீப்பொறி என்மேல் பட்டு உடல் முழுக்க எரிச்சலை ஏற்படுத்திச்சு. அன்னைக்குப் பார்த்து நான் பாலிஸ்டர் சுடிதார் போட்டிருந்ததால, என் டிரெஸ்ஸே உருகி தோலோடு ஒட்டிக்கிச்சு. என் வலது கை, முகம், தாடை, கழுத்துப் பகுதிகள் எல்லாம் பத்தி எரிய, என்னோட அலறல் சத்தத்தைக் கேட்டு, குளிர்ந்த தண்ணீரை என் மேல கொட்டித் தீயை அணைச்சு, ஆஸ்பத்திரில கொண்டு«பாய்ச் சேர்த்தாங்க.  

தாளிக்கிறப்ப எண்ணெய் தெறிச்சாலே வலி உயிர் போயிடும். ஆனா, ஒட்டுமொத்த தீயும் என் உடல்ல பட்டு எரிஞ்சப்ப, என்னால வலி தாங்கவே முடியல. ஆஸ்பத்திரியில ஒரு மாசம் இருந்தேன். மருந்து போடறப்பல்லாம், காயத்தோட எரிச்சல்ல வலி உயிர்போகும். ஒருகட்டத்துல வாழ்க்கை மீதே எனக்கு விரக்தி வந்துடுச்சு. கொஞ்சம் கொஞ்சமாப் புண் ஆற ஆரம்பிச்சதும், காலேஜுக்குப் போய் படிப்பை முடிச்சேன். நல்ல வேலையிலும் சேர்ந்தேன். வலது கையில் மூணாவது அடுக்குத் தோல் வரை தீக்காயம் உள் ஊடுருவிப்போனதால, இதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே தீர்வுன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க'' என்று நடுக்கம் குறையாத குரலில் விவரித்த கல்பனா சிறிதுநேரம் கண்கள் மூடி மௌனிக்கிறார்.

லண்டனில் இருந்து சென்னைக்கு மாதம் ஒருமுறை வருகைதரும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் வயது மேலாண்மை ஆலோசகர் ஜெய பிரகாஷ்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறார் கல்பனா. உடனடியாக டாக்டர் ஜெய பிரகாஷை நேரில் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொண்டி ருக்கிறார். அதன்பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் நினைவுகூர்ந்தார்.

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

''என் கூடவே வேலை பார்த்திட்டிருந்த நிர்மல் குமாருக்கு எனக்கு ஏற்பட்ட நிலைமை அத்தனையும் தெரியும். எந்த டாக்டரிடம் நல்ல சிகிச்சை கிடைக்கும்னு அவரே எனக்கு உதவினார்.  'என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?’ன்னு அவர் என்னைக் கேட்டப்ப, நெகிழ்ந்துபோயிட்டேன். உன் வலது கை நல்லா செயல்பட்டதுக்கப்புறம்தான், கல்யாணம்னு சொன்னார். கையையே மடக்க முடியாம இருந்தேன். எனக்கு அவரே வலது கையா இருந்தார்.

டாக்டர் ஜெயபிரகாஷைப் போய் பார்த்தேன். லேசர் சிகிச்சையோடு, வலியைக் குறைப்பதற்கான அட்கார்டைல் இஞ்ஜெக்ஷன் (Adcortyl Injection) போட்டார். இதனால் உடல் எடை கொஞ்சம் கூடிப் போச்சு. பாதிக்கப்பட்ட இடத்திலிருந்த தோலையெல்லாம் சரி செஞ்சார். இப்ப கையை ஓரளவு அசைக்க முடியுது. வண்டி ஓட்டறேன். ஸ்டெம் செல் சிகிச்சை செய்தால்தான், கைக்கு நல்ல நெகிழ்வுத் தன்மை கிடைக்குங்கிறதால, குழந்தை பிறந்ததுக்கப்புறம் ஸ்டெம் செல் சிகிச்சை செய்யலாம்னு சொல்லிட்டார்.

சந்தோஷ நேரத்துல மட்டுமல்லாமல், என்னோட துக்கத்துலயும் பங்கெடுத்துக்கிட்டு, என் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருந்த நிர்மல் குமாரை ரெண்டு மாசத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணிக்கிட்டேன்'' என்றவர் நிர்மல்குமாரின் தோள் சாய்ந்து சிரிக்கிறார்.

கல்பனாவுக்கு சிகிச்சை அளித்த பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெடிக் சர்ஜன் டாக்டர் ஜெயபிரகாஷை சென்னையில் உள்ள டைசல் பயோ பார்க்கில் சந்தித்தோம்.

''மனிதனின் தோல் பகுதி ஆரோக்கியத்தின் கண்ணாடி. உடலின் மொத்த எடையில் 7 சதவிகித எடையைக் கொண்டது தோல். உடலின் உள் உறுப்புகளைப் பாதுகாக்க, உடல் நீர் ஆவியாதலைத் தடுக்க, உடலில் வெப்பத்தைப் பாதுகாக்க, உடலுக்கு வைட்டமின் டி சத்தை தயாரிக்க எனத் தோலின் பயன்பாடுகள் ரொம்பவே அதிகம். மேலும் தொடுதல், வலியை உணருதல், வெப்பத்தை அறிதல் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துவதும் தோல்தான்.  

மேல், கீழ் என இரண்டு பாகங்களைக் கொண்டது தோல். மேல் பாகத்தில் நான்கு அடுக்கும், கீழ் பாகத்தில் மூன்று அடுக்கும் இருக்கும். உள்ளங்கை மற்றும் பாதங்களின் மேல் பாகத்தில் கூடுதலாக ஒரு அடுக்கு இருக்கும். அதுதான் கடின வேலைகளின்போது நம்மைப் பாதுகாக்கிறது'' என்று சருமத்தைப் பற்றி சுருக்கமாகச் சொன்ன ஜெயபிரகாஷ், தீக்காயத்துக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!

''பொதுவாகவே உடலில் எங்கேனும் தழும்பு மற்றும் உடல் உறுப்புகளின் வடிவமைப்பு மாறி இருந்தால், அவற்றை அழகுபடுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் காலம் இது.  தீக்காயம் என்பது, மாறாத வடுவை ஏற்படுத்திவிடும். தழும்புகளால், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். மனரீதியான உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயம் சாதாரணத் தீக்காயமாக கொள்ளப்படுகிறது. க்ரீம் வகை மருந்துகள் மற்றும் ஊசி மூலம் செலுத்தக்கூடிய மருந்து வகைகளால் இதனைச் சரிசெய்துவிடலாம். மிகத் தீவிரமான தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.  

பொதுவாக, உடலின் வேறு பாகத்தில் உள்ள நல்ல தோலினை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து தீயினால் பாதிப்புக்கு உள்ளான பாகத்தில் பொருத்துவது வழக்கம். மேலும், எந்த இடத்தில் எல்லாம் தோல் குறைவாக இருந்ததோ அங்கெல்லாம் வேறு இடத்தில் இருந்து தோலை எடுத்து 'பலூன் டெக்னிக்’ மூலம் சிகிச்சை செய்யப்படும். இந்த மாதிரியான சிகிச்சை எல்லாம் பழைய முறை. இப்படி செய்யப்படும் சிகிச்சையால், ஆஸ்பத்திரியில் அதிக நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.  ரத்தம் அதிகம் தேவைப்படும். வலி அதிகமாக இருக்கும். தழும்புகள் மறையவும் தாமதமாகும்'' என்கிற டாக்டர், கல்பனாவுக்கு தந்த நவீன சிகிச்சை முறையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.  

''2009-ல் சிகிச்சைக்கு வந்த கல்பனாவுக்கு முகத் தாடை, கழுத்து, வலது கை என உடலின் ஒரு பகுதி தோல் முழுவதுமே தீயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. கை, தோள்பட்டையை நகர்த்தவே முடியாமல் இருந்தார். தோலின் அடர் தன்மை குறைந்திருந்தது. மூன்று அடுக்கு வரை தீயின் பாதிப்பு இருந்தது. இதனால், தோலில் ஈரப்பதம் இல்லாமல் தோலால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், தோலில் வியர்வை இல்லாமல் அதீத அரிப்புக்கும் ஆளாகி இருந்தார்.

தற்போதைய நவீன மருத்துவத்தில், 'கார்பன் டை ஆக்ஸைடு லேசர் (Carbon dioxide Lazer Treatment)  என்ற நவீன சிகிச்சை முறை கண், மூக்கு, வாய் தாடை பகுதிகளில் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்கிறது. தழும்புகளைப் போக்கி, தோலை ஒரே சீராக மாற்றி அந்தப் பகுதியையே மென்மையாக்கிவிடும் இந்தச் சிகிச்சை.

தீக்காயத் தழும்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறோம். அகலமான தழும்பாக இருந்தால் கெலாய்ட்ஸ் ஸ்கார் (Keloids Scar) என்றும் நீளமான தழும்பு என்றால் ஹைபர்டிராஃபிக் ஸ்கார் (Hypertrophic scar) என்றும் அழைக்கப்படும். இந்த இரண்டு வகை தழும்புகளையும் மேற்படி லேசர் சிகிச்சை மூலம் நீக்கி, ஊசி மூலமாகவும், இயற்கை வேதிப் பொருட்கள் மூலமாகவும் தோலின் சுருக்கத்தையும், இறுக்கத்தையும் சரி செய்து, பழைய தோலின் நிறத்துக்கு மாற்றினோம். கடைசியாக செல் தெரபி சிகிச்சையை மேற்கொண்டோம். கல்பனாவின் பழைய தோல் நிறத்தையும் மீட்டெடுத்தோம்.

பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் நான்கு முதல் ஆறு வார இடைவெளியில் ஒவ்வொரு பிரிவாய் சிகிச்சை தரப்படுகிறது. ஒரு பிரிவு சிகிச்சைக்கு அரை மணி நேரம்தான் ஆகும். 0.2 மி.மீ. அளவுள்ள லேசர் கதிர் தோலின் உள் ஊடுருவிச் சென்று சேதமடைந்த தோலின் பாகங்களைச் சீரமைக்கிறது. இந்தச் சிகிச்சை முறையால் நிறைய நன்மைகள் உண்டு. காலையில் சிகிச்சை மேற்கொண்டு மாலையில் வீட்டுக்குப் போய்விடலாம்.  அன்றாட வேலைகளைச் செய்யலாம். வலி இருக்காது. பத்தே நாளில் காயங்கள் ஆறி, தழும்புகள் மறைந்துவிடும். செலவுகள் குறைவு'' என்கிற டாக்டர் ஜெயபிரகாஷ், சமீபத்தில் தீக்காயத்தால் ஐந்து அடுக்கு வரை (5 டிகிரி) பாதிக்கப்பட்ட, 20 வயதே ஆன, ஜோயல் என்கிற நைஜீரிய மாணவருக்கு சிகிச்சை அளித்துக் குணப்படுத்தி இருக்கிறார்.  

''தீயானது ஐந்தாவது அடுக்கு தோலை தாக்கியிருக்கிறது என்றால், அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். தோல், சதை, ரத்த நாளங்கள், திசுக்கள் எனத் தோலின் உள் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு ஒரு பக்க எலும்பே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்தார் ஜோயல். கார்பன் டை ஆக்ஸைடு லேசர் சிகிச்சை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பிலிருந்து ஸ்டெம் செல் எடுத்து ஐந்து முறையாக சிகிச்சை கொடுத்தோம். நடுநடுவே அவர் கல்லூரிக்கும் போய் வருகிறார்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் விளாம்பழம், பைனாப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளோடு புரதம் நிறைந்த உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எல்லாவிதமான பருப்பு, கொட்டை வகைகளிலும் தலா ஒன்று சேர்த்துக் கலவையாகச் சாப்பிட வேண்டும். நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. சூரியக் கதிர் நேரடியாக சருமத்தைத் தாக்காமல் இருக்க, சன் ஸ்க்ரீன் லோஷன் மற்றும் கையுறை அணிந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டியது அவசியம்.  சர்ஜரிக்குப் பிறகு, ஃபிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்யும்போது தோல் சீக்கிரமே பழைய நிலைக்கு வந்துவிடும்.  

தழும்புகள் இல்லாமல், தன்னம்பிக்கையோடு,  வாழ்நாள் முழுவதும் அவர்கள் சோர்ந்து போகாமல் மிடுக்குடன் வாழ முடியும்'' என்று நம்பிக்கையோடு சொல்லி முடித்தார் டாக்டர் ஜெய பிரகாஷ்.

தீக்காயத்துக்கும் தீர்வு உண்டு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism