Published:Updated:

இதயம் காப்போம் இனிதாக!

இதயம் காப்போம் இனிதாக!

இதயம் காப்போம் இனிதாக!
##~##

சென்னையைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணி ராஜி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). மூச்சுவிடுவதில் சிரமம், நடந்தால் அதிகம் மூச்சுவாங்குதல் போன்ற பிரச்னைகள் ராஜிக்கு உண்டு. 'கர்ப்ப காலத்தில் இப்படித்தான் இருக்கும்போல’ என அவரும் அஜாக்கிரதையாக இருந்துவிட்டார். பிரச்னை நாளுக்குநாள் தீவிரமாகவே, ராஜியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் அவரது கணவர். அவரைச் சோதித்துப் பார்த்தபோது, இதயத்தின் வால்வு ஒன்றில் பிரச்னை இருப்பதை டாக்டர் கண்டறிந்தார். ராஜி கர்ப்பிணியாக இல்லாதிருந்தால், எளிதாக அவருக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து இருப்பார். ஆனால், கர்ப்பிணியாக இருந்ததால் இப்போது செய்ய முடியாத சூழல். அப்படியே செய்தாலும் அதன் பிறகு ராஜி சாப்பிட வேண்டிய மருந்துகள் அவரது வயிற்றில் வளரும் சிசுவின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, வால்வை மாற்றுவதற்குப் பதிலாக அதனைச் சரி செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்த டாக்டர்கள் உடனடியாக ராஜிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மிகுந்த கவனத்துடன் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக இதய வால்வைச் சரிசெய்துவிட்டனர். இப்போது தாய், சிசு இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

இதயம் காப்போம் இனிதாக!

பொதுவாக வீட்டில் உள்ள எல்லோரது உடல்நிலையையும் அக்கறையோடு கவனித்துப் பணிவிடை செய்யும் பெண்கள், தங்கள் உடல் நலனில் போதிய அக்கறை காட்டுவது இல்லை. தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே சொல்லாமல் அப்படியே இருந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட

இதயம் காப்போம் இனிதாக!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய் தொடர்பான விழிப்பு உணர்வினை ஊக்குவிக்கும் மையக்கருவுடன் இந்த ஆண்டு 'உலக இதய தினம்’ செப்டம்பர் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இதய அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் செரியனிடம் பேசினோம்.

'சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், புகைப் பழக்கம், மரபியல் ரீதியாக வருவது என்பன போன்றவையே இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள். இந்தக் காலத்தில் இளம் வயதினரும்கூட இதயம் தொடர்பான பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வருவது வேதனை. நாளின் பெரும்பகுதி நேரமும் அலுவலக வேலையாகவே இருப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கார்பனேட்டட் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது, உடற்பயிற்சிகள் செய்யாமலேயே இருப்பது போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் தாங்களாகவே இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்கின்றனர்.

இளம்வயதில் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அவர்களுக்கு இயற்கையாகவே ஹார்மோன் பாதுகாப்பு உள்ளது. பெண்மைக்கான ஹார்மோன்கள் சுரப்பு, மாதவிலக்கு போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகின்றன. மெனோபாஸுக்குப் பிறகு ஆண் - பெண் இருவருக்குமே வருவதற்கான வாய்ப்பு சம அளவில் இருக்கிறது. இதனாலேயே அந்தக் காலத்தில் பெண்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. அப்படியே வந்தாலும் 60 - 70 வயதில்தான் வரும். ஆனால், தற்போது வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மெனோபாஸ் காலம் நெருங்கும் நேரத்திலேயே நிறையப் பெண்களுக்கு மாரடைப்புப் பிரச்னையும் வந்துவிடுகிறது.

இதுதவிர, இதய வால்வு பிரச்னைகளாலும் அதிக அளவில் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு இதய வால்வு பிரச்னை ஏற்பட ருமாடிக் காய்ச்சலும் ஒரு காரணம். சுகாதாரம் இல்லாத சூழ்நிலையில் பரவும் ஒருவகை பாக்டீரியாவால் தொண்டை வலியுடன் இந்தக் காய்ச்சல் ஏற்படும். இந்த பாக்டீரியா இதய வால்வுகளைப் பழுதடையச் செய்துவிடும். ஆண், பெண் என இருவருக்கும் இந்த காய்ச்சல் வரலாம். இருப்பினும் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் வந்த பெண்களுக்கு,  நடந்தால் மூச்சுவாங்குதல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அப்போதே என்ன பிரச்னை என்று கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு நம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர்'' என்றவர் இளம் வயதில் இதய நோய்கள் வராமல் தடுப்பதுபற்றியும் கூறினார்.

'எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம். புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது. ஏனெனில், ஆண்களைவிட பெண்களுக்குப் புகையால் ஏற்படும் பாதிப்பு அதிகம். நடக்கும்போது மூச்சு வாங்கினாலோ அல்லது நெஞ்சு படபடப்பு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். வருடத்துக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நிறையப் பேருக்கு மாரடைப்புக்கான அறிகுறியே தெரியாது. சாதாரண கை வலி, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி போலவே இருக்கும். வாயுத் தொந்தரவு என்று அசட்டை செய்யாமல் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்' என்று அக்கறையோடு கூறினார் டாக்டர் சஞ்சய் செரியன்.

அடுத்த கட்டுரைக்கு