Published:Updated:

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

Published:Updated:
நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!
##~##

'காலராவினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம்’ - அடிக்கடி தினசரிகளில் எதிர்ப்படும் செய்தி இது. காலராவின்போது ஏற்படும் வாந்தி மற்றும் பேதியின்போது உடலில் உள்ள நீர்ச்சத்து பெரும் அளவு வெளியேறுகிறது அல்லவா? இந்த அதிகப்படியான நீர்ச்சத்து ஈடுகட்டப்படாவிட்டால் நிகழ்வதுதான் காலரா மரணம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது சரி... இந்த நீர் இழப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்தால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படுமே என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை மருத்துவரும், சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான கி.ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினோம்.

''நீர் இழப்பு என்றால் என்ன டாக்டர்?''

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

''தேவையான அளவுக்கு உடம்பில் நீர் இல்லாமல் போகும் நிலையை நீர் இழப்பு (Dehydration) என்கிறோம். சிறுநீர்,  வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, சுவாசிக்கும்போது நுரையீரலில் இருந்தும் நம் உடலில் உள்ள நீர் வெளியேறுகிறது. இப்படி வெளியேறும் நீரின் அளவை ஈடுகட்டுவதுபோல நீர் உட்கொள்ளப்படாத நிலையை நீர் இழப்பு என்கிறோம். உடல் உறுப்புகள் சரியான முறையில் செயல்பட மனித உடலில் குறிப்பிட்ட அளவு நீர் இருக்க வேண்டும். நீர் இழப்பின்போது உடலில் உள்ள நீரும் தாது உப்புக்களும் இயல்பான அளவைவிடக் குறைந்துவிடும்.''

''நீர் இழப்புக்கு என்ன காரணம்?''

''வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், சர்க்கரை நோய், பசியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் நீர் இழப்பு ஏற்படக்கூடும். கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் காய்ச்சலின்போதும் நீர் அருந்தாமல் இருப்பதும் நீர் இழப்புக்குக் காரணமாய் அமைந்துவிடும். வறண்ட சூழலில் நெடுநேரம் இருப்பது, காயங்களினால் அதிக அளவு ரத்த இழப்பு ஏற்படுவது, குறிப்பிட்ட சில வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றாலும் உடலின் நீர் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடாமல் கடுமையான விரதங்களை அனுசரிப்பது, போன்றவையும் நீர் இழப்புக்கான காரணங்கள்தான்.''

''நீர் இழப்புக்கான அறிகுறிகள் என்ன?''

''நீர் இழப்பின் ஆரம்பக் கட்டத்தில் அதைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமம். வாய் உலர்ந்து போவது, தோல் வறண்டு நெகிழும் தன்மை குறைவது, அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் போவது, தலைவலி, கிறுகிறுப்பு, வியர்வை நின்று போவது, இதயத் துடிப்பு அதிகரிப்பது, ரத்த அழுத்தம் குறைவது, காய்ச்சல், தெளிவற்ற மனநிலை போன்றவை நீர் இழப்புக்கான அறிகுறிகள். மயக்கம், சிறுநீர் கழிக்க முடியாதது அல்லது குறைவாகக் கழிப்பது, பலவீனமாக உணர்வது, அதிகபடியான தாகம், அடர்த்தியான உமிழ்நீர், குழந்தைகளின் தலை உச்சியில் குழி விழுவது போன்றவை கடுமையான நீர் இழப்பின் அறிகுறிகள். உடலின் வெப்பநிலை மிக அதிகமாகும். மூளையின் செல்கள் உலர்வதால் வலிப்பு ஏற்படும். மூக்கின் உட்பகுதி வறண்டு ரத்தக் கசிவு ஏற்படலாம்.  பெரியவர்களுக்கு ஏற்படும் நீர் இழப்பை அவர்களின் தோல் நெகிழ்வுத் தன்மையை இழப்பதில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.''

''நீர் இழப்புக்கான முதல் உதவிகள் என்ன?''

''தண்ணீரை மெல்ல அருந்தச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவு உப்புடன் மூன்று மடங்கு சர்க்கரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். முதலில் கொடுத்த தண்ணீர் பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் தடை இல்லாமல் இறங்குகிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே மேலும் தண்ணீர் தர வேண்டும். சிறுநீர் நிறமற்று வெளியேறும் வரை தொடர்ந்து இதை அளிக்கலாம். சோடா, டீ, காபி போன்ற பானங்களைத் தருவதைவிடத் தண்ணீர் அல்லது இளநீர் ஆகியவற்றைக் கொடுப்பதே நல்லது. குழந்தைகளின் நீர் இழப்பை ஈடுகட்ட வெறும் தண்ணீரைத் தருவதைவிட எலக்ட்ரோலைட் மிக்ஸரைக் கலந்து கொடுக்கலாம். கடுமையான நீர் இழப்பை ஈடுகட்ட பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று ஊசி மூலம் தேவையான நீர்ச்சத்தை உடலில் ஏற்ற வேண்டும்.''

''நீர் இழப்பைத் தவிர்க்க முடியுமா?''

''தினசரி போதுமான தண்ணீரைக் குடித்தாலே போதும். அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் சமயத்தில் கூடுதலாகக் குடிப்பது அவசியம். வெயில் காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்கலாம். நீர் இழப்பைத் தவிர்க்கப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அனாவசியமாக வியர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடையைப் பயன்படுத்தலாம். தாகம் ஏற்படாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை ஒரு வழக்கமாகவே கொள்ள வேண்டும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism