Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்டிங் ரூம்

காயத்ரி, சென்னை. '

''என் அக்கா பல் மருத்துவரிடம் சென்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பற்களைச் சுத்தப்படுத்திக்கொள்கிறாள். இப்படிச் செய்வதால் பற்கள் வலுவிழக்காதா? தினமும் இரண்டு முறை பல் தேய்ப்பதுடன் இப்படிச் செய்வது எந்த அளவுக்கு நல்லது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்டிங் ரூம்

டாக்டர் ஆர். முரளி, பல் மருத்துவர், சென்னை.

''அசைவ உணவு, கீரை, காய்கறிகள் எனச் சாப்பிடும்போது உணவுத் துகள்கள் பற்களின் இடுக்குகளில் போய் ஒட்டிக்கொள்ளும். பாக்டீரியா தொற்று ஏற்பட்டு,  துர்நாற்றம் வீசுதல், பற்களின் நிறம் மாறுதல் போன்றவை ஏற்படும். பல், ஈறுகளின் இடுக்கில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண் பொருட்களைப் பல் துலக்குவதால் மட்டுமே சுத்தம் செய்துவிட முடியாது. ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரின் உதவியுடன் சுத்தம் செய்வதால், நிச்சயம் பற்கள் வலுவிழக்காது. வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்குப் பல்லில் ஏற்படும் பழுப்பு நிறத்தை மாற்றவும் க்ளீனிங் முறை பயன் தரும்.  மேலும், 'டென்டல் கேரீஸ்’ (Dental Caries) எனப்படும் பல் சொத்தையையும், 'பெரியோ டான்டல் டிசீஸ்’ (Perio Dontal Disease) எனப்படும் ஈறு

கன்சல்டிங் ரூம்

சம்பந்தப்பட்ட வியாதியையும் க்ளீனிங் முறை மூலமாக வராமல் தவிர்க்கலாம்.''

மாணிக்கம், ராஜபாளையம்

''எனக்கு 50 வயதாகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடையின் மேல் பகுதியில் திடீரென்று டென்னிஸ் பந்து அளவுக்கு கட்டி வந்தது. கடினமாக இல்லாமல் அந்தக் கட்டி மிகவும் மென்மையாக இருக்கிறது. கொழுப்புக் கட்டியாக இருக்கும் என்கின்றனர் சிலர். இதை மருந்துகள் மூலம் கரையவைக்க முடியுமா; அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டுமா?''

டாக்டர் வின்னரசன், தோல் நோய் சிகிச்சை நிபுணர், தஞ்சாவூர்.

''கட்டி தோன்றி ஒரு வாரத்துக்குள் இருந்தால், அதை மருந்து மூலம் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக இருக்கும்பட்சத்தில், அதை (EXEISION) அறுவைசிகிச்சை மூலமாகதான் சரிசெய்ய முடியும். அது சாதாரணக் கொழுப்பு கட்டியாகவும் இருக்கலாம் அறுவை சிகிச்சை மூலம் எடுத்த கட்டியை சதைப் பரிசோதனை செய்வதன் மூலம், அதில் என்ன கிருமிகள் இருக்கின்றன என்று கண்டறியலாம். ஒருவேளை புற்றுபோய்க் கட்டியாக இருக்கும்பட்சத்தில், அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புக் கட்டிகள் உடலில் தோன்றுவதற்கு, உடலில் அதிகக் கொழுப்புகள் இருப்பது,  அதிக கொழுப்பு உள்ள உணவுகள் சேர்த்துக்கொள்வதுதான் காரணம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. மரபுரீதியாகவும் வரலாம். ஒருவேளை அது நரம்புக் கட்டியாகவும்கூட அது இருக்கலாம். முதலில் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.''

ஹேமமாலினி, புத்தூர்

''எதிரில் யாராவது கொட்டாவி விட்டால் உடனே, சுற்றி இருப்பவர்களுக்கு அது தொற்றிக்கொள்ளும். ஆனால், கடந்த மூன்று நாட்களாக வெளியூரில் படிக்கும் என் மகளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவளும் நானும் சேர்ந்து பலமுறை கொட்டாவிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. இது எதனால் ஏற்படுகிறது?''

டாக்டர் இக்பால், மனநல மருத்துவர், பட்டுக்கோட்டை

''பொதுவாக நம்மைச் சுற்றி உள்ள பகுதியில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவில் குறைவு ஏற்படும். இதனால், அடிக்கடி கொட்டாவி வரலாம். மேலும், ஆழ்ந்த தூக்கம் இல்லாதபோதும் கொட்டாவி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் 'ஹைபோக்சியா’ (Hypoxia) என்பார்கள். ஒருவர் கொட்டாவி விடும்போது அதைப் பார்த்தவுடன் அருகில் இருப்பவருக்கும் அந்த உணர்வு தூண்டப்பட்டுக் கொட்டாவி வரலாம். நீங்கள் சொல்வதுபோல் போனில் பேசும்போது இருவருமே தூக்கக் கலக்கத்தில் இருந்தாலோ, தூங்கும் அறையில் போதிய காற்றோட்டம் இல்லாமல் இருந்தாலோ, இருவருக்கும் கொட்டாவி வரும். மேலும், எந்த வேலையும் இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கும்போது மூளைக்கு வேலை இல்லாமல், சோம்பேறித்தனமே சில சமயங்களில் தூக்கத்தை வரவழைத்துவிடும். தூக்கம் கொட்டாவிக்கு வழிவகுக்கும்.''

ராமராஜன், மடிப்பாக்கம்

கன்சல்டிங் ரூம்

''என் மனைவி, 2 மகள்கள் மூவருமே அதிக சத்தத்துடன் பேசுகின்றனர். அமைதியை விரும்பும் என்னால், அதிக சத்தத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை; காது ஜவ்வே கிழிந்துவிடும்போல் இருக்கிறது. இதனால் என் காது பாதிக்கப்படுமா? விரிவாகச் சொல்லுங்களேன்!''

டாக்டர் ரஞ்சித் குமார், காது,மூக்கு,தொண்டை நிபுணர், தேனி.

''ஒருவருக்குக் கேட்புத் திறன் குறைவாக இருந்தால் அவர்கள் அதிக சத்தத்துடன் பேசுவார்கள். உங்கள் மனைவி மற்றும் மகள்களுக்குக் கேட்புத் திறன் குறைவாக இருக்கலாம். பெற்றோருக்குக் கேட்புத் திறன் குறைவாக இருந்தால், குழந்தைகளுக்கும் இந்தக் குறை வரலாம். தொடர்ந்து வெடிச் சத்தம், மெஷின் சத்தம், வண்டிச் சத்தம், ஹியர் ஃபோனில் பாட்டு கேட்பது போன்ற அதிக சத்தத்தைக் கேட்கும்போது, காது நரம்புகள் வலுவிழந்து போக அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அதிக ஓசையால் கழுத்து,  தலைவலி வரலாம். மனரீதியான பாதிப்பும் ஏற்படலாம். நாளடைவில் நிரந்தரமாகக் காது கேட்கும் திறனை இழக்கவும் நேரிடலாம்.  

அதனால் முதலில் உங்கள் மனைவி, மகள்களின் காதைப் பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை எனில், உங்கள் காதைப் பரிசோதிக்க வேண்டும். உங்களுக்கும் பிரச்னை இருக்கலாம். அவர்கள் சாதாரணமாகப் பேசுவதுகூட அதிக சப்தமாக உங்களுக்குக் கேட்கலாம். இரு தரப்பினருமே காதைப் பரிசோதித்துக்கொள்வதன் மூலம்தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.''

  வந்தனா ரவி, காரைக்குடி

''எனக்கு வயது  50. தற்போது நான்கு அடிகள்கூட நடக்க முடியவில்லை. கால் மடங்கி உட்கார்ந்துவிடுகிறேன். வாதமாக இருக்கும் என்கின்றனர் சிலர். நானும் பல வலி நிவாரணிகள், களிம்புகளைப் பயன்படுத்திவிட்டேன்.  ஆனால், இன்னமும் என்னால் நடக்க முடியவில்லை. இந்த நிலைமையில் இருந்து நான் மீள வழி கூறுங்கள்.''

டாக்டர் ஜெய்கிஷ், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர், திருச்சி

''ரத்த அழுத்தம் அதிகரித்தால் மட்டுமே வாதம் வரும். தற்போது 50 வயதைக் கடந்தாலே, மூட்டுப் பிரச்னை வந்துவிடுகிறது. இரண்டு எலும்புகளின் நுனிப் பகுதிகள் நார்த் திசு உறையால் இணைக்கப்பட்டு மூட்டு உருவாகிறது. நார்த் திசுக்களின் உள்பரப்பில் ஒரு சவ்வு உறையும் உள்ளது. இதில் இருந்து சுரக்கும் உராய்வு நீர் மூட்டுப் பகுதி இயக்கத்தை உராய்வில்லாமல் செய்கின்றது. வயது ஏற ஏற, மூட்டு அழற்சி மற்றும் பெருமுடக்குவாத ருமட்டாய்டு மூட்டழற்சி ஆகியவற்றால் மூட்டுகளில் நார்த்திசுச் சிதைவு ஏற்பட்டு உட்புறம் உள்ள எலும்பு மஜ்ஜைகள் வெளியே தெரிய ஆரம்பிப்பதால், மூட்டுப் பகுதியில் திடீர் என வலி ஏற்படும்.  இந்த நார்த் திசுக்கள் மற்றும் குருத்தெலும்புப் பாதுகாப்பின்மையாலும் மூட்டு வலுவிழக்கும்போது நேரடியாக ஏற்படும் உராய்வினால் மூட்டில் வலியும் அரிப்பும் ஏற்படும். இதுதான் தேய்மான மூட்டு அழற்சி.

இந்தத் தேய்மானத்தின் காரணமாக கீழே உள்ள எலும்பு தசையில் விரிசல்கள் ஏற்படுகின்றன. வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளும்போது வலி குறையும். நிறுத்தும்போதும் மீண்டும் வலி ஏற்படும். எனவே நீங்கள் எலும்பு மருத்துவரை அணுகி நுண்கதிர் படங்கள் மற்றும் இதர பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால்,  மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளவும் நேரிடலாம். பரிசோதனைக்குப் பிறகு, ஆரம்ப கட்ட நிலை மூட்டு வலியாக இருக்கும்பட்சத்தில், எலும்பு மூட்டுச் சிறப்பு மருத்துவரிடம் சென்று ஆரம்ப கட்ட சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கத்தை மாற்றுதல் போன்றவற்றின் மூலமாக மூட்டு வலி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.''

படம்: வீ.சக்திஅருணகிரி