Published:Updated:

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

Published:Updated:

பாம்புக்கடி  வாங்கியும் பாட்டுப் பாடி வந்த நண்பர்!

அனுபவம் பேசட்டும்!

என் நண்பர் ஒருவர் வயலில் வேலை செய்துகொண்டு இருந்தபோது அவரைப் பாம்பு கடித்துவிட்டது. கடித்த பாம்பை அடிக்கப்போன எங்களை அவரே தடுத்து நிறுத்தியதோடு மட்டும் அல்லாமல், தனது இடுப்பில் இருந்த அரைஞாண்கயிற்றை அவிழ்த்து, பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமாகக் கட்டிக்கொண்டார். பிறகு, கடித்த இடத்தில் லேசாகக் கீறிவிட்டு ரத்தம் கசியும்படி செய்துகொண்டார். உடனே, சினிமாவில் வருவதுபோல் கடித்த இடத்தை வாயால் உறிஞ்சப்போன என்னைத் திட்டி, மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொன்னார். 20 கி.மீ. தொலைவில் மருத்துவமனை. பதற்றத்துடன் நான் வண்டியை ஓட்ட, என் பின்னால் உட்கார்ந்து வந்த நண்பர் எந்தப் பதற்றமும் இல்லாமல் பிடித்த பாடல்களைப் பாடியபடியே வந்தது, கூடவே வண்டியில் வந்த நண்பர்களுக்கு வியப்பைத் தந்தது.  மருத்துவமனை அருகில் வந்ததும், பாட்டை நிறுத்திய நண்பர்,  மயங்கி விழுந்துவிட்டார். டாக்டர் அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுபோய் விஷத்தை முறியடித்து நலமாக இருக்கிறார் என்று சொன்ன பிறகுதான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். வெளியே வந்த டாக்டர், 'அவருக்கு யார் முதலுதவி செஞ்சாங்களோ, அவங்களுக்குத்தான் முதல்ல நன்றி சொல்லணும். விஷம் ஏறாமல், கடித்த இடத்துக்கு மேல் அரைஞாண் கயிறால கட்டி இருக்கிறாங்க...' என்றவுடன் டாக்டரிடம் 'அவர் தானாகவே கட்டிக்கிட்டாரு, பாட்டு பாடிக்கிட்டே வந்தாரு' எனச் சொன்னபோது டாக்டர் சிரித்தேவிட்டார். 'ஞாபகம் தப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடிக்கொண்டே வந்திருக்கிறார். அவருக்கு அவரே முதல் சிகிச்சை அளித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டதால்தான் உயிருடன் இருக்கிறார்' என்றார். ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சக்திவேல், திருச்சி.

கிருமிநாசினி... ஷாக்கிரதை!

அனுபவம் பேசட்டும்!

எங்கள் பக்கத்து வீட்டில் பிறந்து மூன்று மாதங்களே ஆன குட்டிப் பாப்பா இருக்கிறது. தினமும் பாப்பாவின் மல, ஜலத் துணிகளை, பாப்பாவின் அம்மா சோப்பு போட்டுத் துவைத்து, கிருமிநாசினி கலந்த நீரில் அலசிய பிறகே காயவைப்பார். திடீரென்று ஒருநாள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் தொடை, இடுப்பு மற்றும் பின்புறங்களில் வெள்ளை வெள்ளையாகத் தோல் உரிந்திருந்தது. உடனடியாக மருத்துவரிடம் கொண்டுபோய்க் காட்டினோம். அவர், 'குழந்தைக்கு எந்த மாதிரி துணி பயன்படுத்துகிறீர்கள்? சுத்தமான தண்ணீர்தானா?'' என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 'குழந்தையின் துணிகளைத் தனியாகத் துவைத்து, சுத்தமான தண்ணீரில் அலசிவிட்டு, கிருமிநாசினி தண்ணீரிலும் முக்கி எடுக்கிறேன்’ என்றதும் 'குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. தண்ணீர், சோப்பு, துணி என்று எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் சுத்தமான தண்ணீரில் துணிகளை அலசி, வெயிலில் உலர்த்தி எடுத்துவைத்தாலே போதும். கிருமிநாசினியைத் தினமும் பயன்படுத்தியதால்தான் குழந்தையின் தோல் உரிய ஆரம்பித்திருக்கிறது. வாரம் ஓரிரு நாள் மட்டும் கிருமிநாசினியைப் பயன்படுத்தினால் போதும்'' என்றார்.

கிருமிநாசினிகளே பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதை அன்றைக்குத்தான் அறிந்துகொண்டேன். அளவுக்கு மீறினால்?

- ஆர்.விஜயாரவி, ஈரோடு.

நெஞ்சு அடைக்கவைத்த காது அடைப்பு!

அனுபவம் பேசட்டும்!

கோடை விடுமுறையில் வீட்டில் உள்ள எல்லா அறைகளையும் சுத்தப்படுத்தி, சாமான்களை ஒழுங்குபடுத்தியதில் தூசி மூக்கில் ஏறி எனக்குச் சளி பிடித்துக்கொண்டது.  அடிக்கடி மூக்கைச் சிந்தியும் தொண்டையைக் கமறியும் சளியை வெளியேற்றினேன். இரண்டு நாட்கள் கழித்துச் சளியுடன் சேர்ந்து ரத்தம் வரத் தொடங்கியது. இரு காதுகளும் அடைத்துக்கொண்டன. காது வலியுடன் கேட்கும் திறனும் பாதியாகக் குறைந்தது.பதறிப்போய் ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்ட்டை அணுகினேன். என்னைப் பரிசோதித்த டாக்டர், ''அடிக்கடி மூக்கைச் சிந்தியதால் மூக்கில் இருந்து காதுக்குப் போகும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மூக்கை வேகமாகச் சிந்தும்போது, மூக்கில் உள்ள ரத்தக்குழாயில் ஏதேனும் ஒன்று வெடித்து, அதனால் ரத்தம் வந்திருக்கும். ஒருபோதும் மூக்கை அழுத்திச் சிந்தக் கூடாது. ஒழுகும் சளியை மட்டும் துடைக்க வேண்டும். வீடு சுத்தம் செய்யும்போது கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். ரத்தம் வருவது ஓரிரு நாட்களில் நின்றுவிடும். காது அடைப்பு மெதுவாகத்தான் சரியாகும்...'' எனச் சொல்லி மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். தூசி பட்டால் தும்மல் வரும் பிரச்னை ரொம்பக் காலமாகவே எனக்கு இருக்கிறது. அவரவருக்கு உள்ள பிரச்னைகளுக்கு அவரவர்தான் பாதுகாப்பான முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாததன் விளைவு? ஒரு மாத அவஸ்தை.  1,500 ரூபாய் மருத்துவச் செலவு செய்த பின்புதான் காது அடைப்பு விலகியது. இப்போதெல்லாம் சளி பிடித்தால் டாக்டர் கூறிய ஆலோசனைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறேன்.

- விஜயலட்சுமி ரவீந்திரன், ஈரோடு.

வலி போக்கும் வழியாக இருந்தாலும் சரி, உயிர் காக்கும் உபாயமாக இருந்தாலும் சரி... உங்கள் அனுபவங்களை மற்ற வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நீங்கள் பட்டறிவு உள்ள ஒரு நோயாளியாகவோ அல்லது படிப்பறிவுள்ள மருத்துவராகவோதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, வாசகர்களாகிய நீங்கள் உங்களது அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவம் பேசட்டும்,

டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: doctor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism