Published:Updated:

விக்கலா சிக்கலா?

விக்கலா சிக்கலா?

விக்கலா சிக்கலா?
##~##

மெரிக்காவின் ஐயோவா பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ஆஸ்போர்ன். ஒருநாள் 136 கிலோ எடை உள்ள பன்றி ஒன்று சார்லஸ் மீது விழுந்தது. அவ்வளவுதான். மனிதருக்கு ஆரம்பித்தது வினை. 68 வருடங்களாக 10 நொடிகளுக்கு ஒருமுறை இவர் விக்கிக்கொண்டே இருந்தார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் சார்லஸைப் பற்றி எழுதின. கின்னஸ் புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றது. மற்றவர்களுக்கு இது சுவாரஸ்யமான தகவல். ஆனால், சார்லஸின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். என்னதான், விக்கல், தும்மல் போன்றவை எல்லாம் தவிர்க்கவே முடியாதவை என்று நாம் சொன்னாலும், பொது இடங்களில்  வேண்டாத விருந்தாளியாக அவை வரும்போது ஏற்படும் அவஸ்தை பெரும் தொல்லை. விக்கல் ஏன் ஏற்படுகிறது? விக்கல் வராமல் தடுக்க முடியுமா? வந்துவிட்டால் நிறுத்த பாதுகாப்பான வழி என்ன? கோவை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்  வி.யுவராஜ் முருகானந்தத்திடம் பேசினோம். 

'நமது உடலில் உதரவிதானம் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதயம் நுரையீரல் மற்றும் விலா எலும்புகளுக்கும் வயிற்றுப் பகுதிக்கும் இடையில் இருக்கும் தசைச் சுவர் இது. இது சுருங்கும்போது குரல் நாண்களைத் தாண்டிக்கொண்டு சுவாசக் குழல் வழியாக ஆக்ஸிஜன் நிரம்பிய காற்று

விக்கலா சிக்கலா?

நுரையீரல்களில் நிரம்பும். உதரவிதானம் விரியும்போது அசுத்தக் காற்று வெளியேறும். இதைத்தான் சுவாசம் என்கிறோம். சில சமயம் உதரவிதானம் சரிவர இயங்காமல் போய்விடும். அப்போது அரைகுறையாகத் திறந்திருக்கும் குரல் நாண்களுக்குள் காற்று நுழைய முயற்சிக்கும். அப்போது ஏற்படும் ஒலிதான் விக்கல்.

கழுத்தில் இருந்து நெஞ்சுக்குச் செல்லும் நரம்பான ஃப்ரினிக் நரம்பு  (phrenic nerve) அழற்சிக்கு ஆளாகும்போது விக்கல் வரும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்குச் சில சமயம் வயிற்றில் துடிப்பதுபோல ஓர் உணர்வு ஏற்படும். கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு ஏற்படும் விக்கலே இதற்குக் காரணம். நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கும்கூட விக்கல் வரும்.

அதிகமான உணவை வேகமாக விழுங்குவது, காரமான மசாலா நிரம்பிய உணவைச் சாப்பிடுவது, அதிக அளவில் மது அருந்துவது, அதிக அளவில் காற்றை உள்ளே இழுப்பது, தொடர்ந்து புகை பிடிப்பது, அதிக சூடான பானங்களையும் குளிர்ந்த பானங்களையும் அடுத்தடுத்துக் குடிப்பது, அதிகமாக உணர்ச்சிவசப்படுவது போன்றவையும் விக்கலுக்குக் காரணங்கள். வயிற்றில் செய்துகொண்ட அறுவைசிகிச்சை, உதரவிதானத் தசைகளைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் கோளாறு, தீமை செய்யக்கூடிய புகையை சுவாசிப்பது, பக்கவாதம் அல்லது மூளையில் கட்டி இருப்பது, தொடர்ந்து வாய்விட்டுச் சிரிப்பது, காது வலி, சில மருந்துகளை உட்கொண்டதன் பக்கவிளைவுகள் போன்றவையும் விக்கல் ஏற்படக் காரணங்களாகக் கூடும். மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் விக்கலை 'ஹிஸ்டீரிகல் ஹிக்கப்’ (hysterical hiccup) என்பார்கள். எதையாவது நினைத்துப் பயப்படும் ஒரு சிலருக்கு அந்த நினைவு வந்தாலே கூடவே விக்கலும் வந்துவிடும். ஈரல் தொடர்பான வியாதிகள், வயிற்றுப் புண், சிறுநீரகக் கோளாறு, ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரித்தல் போன்றவற்றின் அறிகுறிகளாகக்கூட விக்கல் இருக்க வாய்ப்பு உண்டு' என்கிறார் யுவராஜ் முருகானந்தம்.

  'விக்கல் ஆபத்தானதா?''

'சற்றே சங்கடத்தைக் கொடுத்தாலும் பொதுவாக விக்கல்கள் ஆபத்து இல்லாதவைதான். ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டுப் போய்விடும். 48 மணி நேரத்துக்கு மேல் நீடித்தாலோ அல்லது 48 மணி நேரத்துக்குள் பல முறை தொடர்ந்து விக்கல் இருந்தாலோ மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.நீடித்த விக்கல்கள், சில வகையான புற்றுநோய்கள், வளர்சிதை மாற்ற வேறுபாடுகள் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும்.'

விக்கலா சிக்கலா?

'சாதாரணமாக வரும் விக்கல்களைக் குணப்படுத்த என்ன செய்யலாம்?'

'சற்று நேரம் மூச்சை இழுத்து, நிறுத்திப் பிறகு மெதுவாக வெளியேற்றலாம்; உடனடியாக ஒரு சொம்பு தண்ணீரைக் குடிக்கலாம்; தண்ணீரை மடக்மடக் என்று குடிக்காமல் சீராகக் குடித்தால் விக்கல் நின்றுவிடும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையை நாக்கில் வைத்து அது தானாகக் கரையவைக்கலாம்; நாக்கை லேசாக வெளியில் இழுத்துவிடலாம்; தண்ணீரால் வாய் கொப்பளிக்கலாம். சில சமயம் அதிர்ச்சியான எதையாவது சொன்னால், கவனம் அதில் திரும்பி விக்கல் நிற்பது நடக்கும்!''

விக்கலா சிக்கலா?