Published:Updated:

அக்கி வந்தால் அம்மை வருமா?

அக்கி வந்தால் அம்மை வருமா?

##~##

பெயரே சொல்லக் கூடாது; நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வந்துவிடும் என்பார்கள் கிராமத்து மக்கள். அப்படி ஒரு பயம் அக்கி மீது மக்களுக்கு. ஆனால், சரியாகக் கவனித்தால், அக்கி ஒன்றும் அவ்வளவு அபாயகரமான நோய் அல்ல. ''எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வைரஸ் தொற்று; அவ்வளவுதான்'' என்கிறார் பிரபல தோல் சிகிச்சை நிபுணர் முரளிதர் ராஜகோபால். 

''அக்கி என்பதற்கு 'ஹெர்பிஸ் ஜாஸ்டர்’ (Herpes zoster) என்று பெயர். குறிப்பிட்ட ஒரு நரம்பை VZ எனும் வைரஸ் கிருமி பாதிக்கும்போது அந்த நரம்பின் கிளைகள் பரப்பியுள்ள தோல் பிரதேசத்தில் மட்டும் கொப்புளங்கள் உண்டாகும். இதற்கு பெயர்தான் அக்கி.    

இந்த VZ வைரஸ் கிருமி யாரிடம் எல்லாம் இருக்கிறது என்று சொல்லவே முடியாது.

ஒருவருக்கு இந்த வைரஸ் கிருமி உடலில் இருக்கும்போது, அவருக்குத் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டாலோ, மனப் பதற்றம், வயோதிகத் தள்ளாமை, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, உடலில் அதிக உஷ்ணம் போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த வைரஸ் கிருமி வேகமாகச் செயல்பட ஆரம்பித்துவிடும்.

அக்கி வந்தால் அம்மை வருமா?

முதுகுத்தண்டுவடத்தில் ஒரு மரம்போல் இருந்து இரண்டு பக்கமும் கிளை மாதிரி பிரியும் வேர்

அக்கி வந்தால் அம்மை வருமா?

பகுதியை 'காங்கிலியா’ (Ganglia) என்போம். இங்கிருந்து VZ வைரஸ் கிருமி நரம்பு மூலமாக பரவ ஆரம்பிக்கும். நரம்புக்கு      உள்ளிருந்து வைரஸ் ஊடுருவுவதால் உடலில் அதீத வலி ஏற்படும்.  சிலருக்குத் தோலில் கொப்பளம் வராமல் இந்த வைரஸ் பரவும்போதே வலியை உணர முடியும். ஆனால், சிலருக்கு வைரஸ் பரவ ஆரம்பித்து கொப்பளம் வந்த பிறகு வலி தெரியும். நரம்பு மூலமாக இந்த வலி வருவதால் இதை நரம்பியல் வலி (Neurological pain) என்று சொல்லுவோம்.  

தோலில் வரும் அக்கி, வைத்தியம் இல்லாமல் தானாகவே சீக்கிரத்தில் குணமாகிவிடும். ஆனால், அக்கியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போனாலோ அல்லது எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவை இருந்தாலோ, கொப்பளங்கள் பெரிதாக வரும். அதனால் பாதிப்பின் வீரியம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு ஒரு நரம்பு மட்டும் இல்லாமல் நாலைந்து நரம்புகள் வரை பாதிக்கப்படும். பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி இருந்து, இந்தப் பாதிப்பும் சேரும்போது, நரம்புகள் பாதிக்கப்படும்'' என்கிற டாக்டர், அக்கியின் அறிகுறிகளையும் சிகிச்சை முறைகளையும் தெளிவாகச் சொன்னார்.  

''அக்கி வந்தால் காய்ச்சல், சோர்வு, தலைவலி இருக்கும். இந்தப் பாதிப்பு இருந்தால், கண் மருத்துவரையும் பார்க்க வேண்டியது அவசியம். காரணம், சிலருக்குக் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வையை இழக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.  

அக்கி வந்தால் அம்மை வருமா?

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நிச்சயம் பரவாது. ஆனால், கைக் குழந்தைகளுக்கு இது பரவும். அதுவும் அக்கியாக இல்லாமல், அம்மை வடிவில் பாதிப்பை ஏற்படுத்தும். வயோதிகர்கள், புற்றுநோய், ஹெச்.ஐ.வி., நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள் இடையேயும் இது சுலபமாகப் பரவும். கிராமப்புறங்களில் சிலர், செங்க£விக் குழம்பால் அக்கி வந்த இடத்தில் வரைவார்கள். இதற்கு அக்கி எழுதுதல் என்று சொல்வார்கள். மண் மருத்துவம் என்று இதைச் சொல்லலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி வைத்திய முறையில் ஆன்டி வைரல் மருந்துகள் கொடுப்போம். நரம்பு தொடர்பானது என்பதால், வலியைப் போக்க மருந்து தரப்படும். இந்த மருந்து வைரஸைக் கொன்றுவிடும். இதற்கு ஒரு வாரக் கால சிகிச்சை தேவைப்படும். ஹெச்.ஐ.வி, கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ள 14 நாட்களுக்கு மேல் தேவையாக இருக்கும். அதாவது ஒரு படை வந்தால் 5 முதல் 7 நாட்களும், நிறையப் படைகள் வந்திருந்தால் 14 நாட்களும் தேவைப்படும். வலிக்கு ஏற்ப மாத்திரை தருவோம். மருந்துகள் மூலமாகத் தோலில் இருக்கும் கொப்பளங்களை ஆற்றிவிடலாம்.  

அக்கி வந்தால் அம்மை வருமா?

நரம்புகள் மூலமாகப் பாதிப்பு இருக்கும்போது, சீக்கிரத்தில் குணப்படுத்த முடியாது. அதற்கு 4, 5 மாதங்கள் தேவைப்படும். காங்க்லியானுக்குள் ஒரு ஊசியைப் போட்டு வலியைப் போக்கலாம். தோலில் தடவுவதற்கு ஆன்டி பயாடிக் க்ரீம் பயன்படுத்தலாம். உள்ளுக்குள் ஆன்டி வைரல் மாத்திரைகள் கொடுக்கலாம்.      

அக்கியால் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்கப் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும். எங்கும் அலையக் கூடாது. சில்க், பாலியஸ்டர் ஆடைகளைத் தவிர்த்து, மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அடிக்கடி நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். கார உணவுகளைத் தவிர்த்து சத்தான, சமச்சீர் உணவுகளைச் சாப்பிட்டாலே போதும். உணவில் பெரிய அளவில் கட்டுப்பாடும் இல்லை.    

பொதுவாக, சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களும்தான் அக்கியால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அக்கி வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், 60 வயதைக் கடந்தவர்களுக்கு வந்தால், சீக்கிரத்தில் குணமாகாது. ஒரு சிலருக்கு மட்டுமே திரும்பவும் வர வாய்ப்பு உண்டு.  ஆனால், பயப்படும் அளவுக்கு அக்கி ஆபத்தானது இல்லை!''

அக்கி வந்தால் அம்மை வருமா?