Published:Updated:

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

ஐந்தே ரூபாய்... 'அடடே’ தீர்வு!

அனுபவம் பேசட்டும்!

எனக்குத் தலைமுடி மிகவும் அடர்த்தி. சமீபத்தில் லேசாக அரிப்பு. சீப்பினால் நன்றாக வாரும்போது சுகமாக இருக்கும். ஆனால், அரித்த இடத்தில் லேசாக நீர்க் கசிவு ஏற்பட்டது. அது அப்படியே உலர்ந்து பொருக்குபோல் தலையில் படிந்துவிட்டது. அடுத்த நாள் தலையைச் சீவும்போது சீப்பில் தலைமுடியுடன் பொருக்கும் சேர்ந்து வரும்.  இதனால், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கியது. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருமுறை என் சொந்த ஊருக்குச் சென்றபோது என் தலையின் நிலையைப் பார்த்த ஒருவர், 'நாட்டு மருந்துக் கடையில், நீராடி முத்தும் பருப்புக் கந்தகமும் கிடைக்கும். வாங்கி அம்மியில் பொடித்து நல்லெண்ணெயில் கலந்து தலையில் பரவலாகத் தடவி நன்றாக ஊறவைத்து, தலைக்குக் குளித்தால் சரியாகிவிடும்’ என்றார். அவர் சொன்னதைக் கடைப்பிடித்தேன். ஒரே வாரத்தில் அரிப்பும் பொருக்கும் அறவே போய்விட்டது. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் குணமாகாத 'தலை’யாய பிரச்னையை ஐந்தே ரூபாயில் கை வைத்தியம் குணமாக்கிவிட்டது!

- சங்கரி வெங்கட், பெருங்களத்தூர்

பொடி தந்த இடி!

அனுபவம் பேசட்டும்!

ஒரு முறை என் ஆறு மாதக் கைக்குழந்தையோடு இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்தேன். நன்றாகத் தூங்கிய என் குழந்தை திடீரென வீறிட்டு அழுதது. எவ்வளவோ முயன்றும் அழுகை நிற்கவில்லை. குழந்தையைக் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது... குழந்தையின் கண்கள் செக்கச் செவேல் என சிவந்துபோய் இருந்தன. கண் ஓரத்தில் பழுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டு இருந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். மூக்குப்பொடி. எங்களுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக்கொண்டு இருந்தார். அப்படி அவர் பயன்படுத்தும்போது காற்றில் பறந்து வந்து மூக்குப்பொடிதான் குழந்தைக்கு இவ்வளவு இன்னலைத் தந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். மூக்குப்பொடி, சிகரெட், மது எனக் கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகிக்கிடப்பவர்களே... உங்களுடைய தீயப் பழக்கத்தால் நீங்கள் அவதிக்குள்ளாவது உங்கள் பிரச்னை. ஆனால், உங்களின் தவறு பிறருக்குத் தொந்தரவாக அமையாமல் பார்த்துக்கொள்ளுங்களேன். ப்ளீஸ்!

- சகாயமேரி, எண்ணூர்

ஆப்பிள்... பிஸ்கெட்... அப்படியே ஒரு புத்தகம்!

பொதுவாக மருத்துவமனையில் இருப்பவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பழம், பிஸ்கெட் வாங்கிக்கொண்டு போவதுதானே வழக்கம். ஆனால், எதிலுமே வித்தியாசம் காட்டும் எனது நண்பர் ஒருவர், இதிலும் சற்று வித்தியாசமாகச் செயல்பட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அனுபவம் பேசட்டும்!

சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரைப் பார்த்துவர அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பழங்கள், ஹார்லிக்ஸ் போன்றவற்றை கை நிறைய வாங்கிக்கொண்டு போனோம். ஆனால், என் நண்பர் மட்டும் கையில் சின்னஞ்சிறிய ஒரு பார்சலோடு வந்தார். நாங்கள் அனைவரும் நண்பரின் மனைவியைப் பார்த்து பேசிவிட்டு கொண்டுவந்த பழங்களைக் கொடுத்தோம். என் நண்பர் தன்னுடைய பார்சலை பிரித்துக் கொடுத்தார். உள்ளே பார்த்தால் இரண்டு புத்தகங்கள். ''ஆஸ்பத்திரியில இருக்கிறவங்களுக்குப் பழம், பிஸ்கெட் வாங்கிட்டு போறது நல்ல விஷயம்தான். ஆனால், நோயாளியோட பொழுதுபோகாமைங்கிற நோயை யாரும் புரிஞ்சுக்கிறது இல்லை. அதனால்தான் நான் புத்தகங்களை வாங்கி வந்தேன்'' என்றார். எவ்வளவு கவனிக்க வேண்டிய விஷயம்!

- ராஜீவன், அம்பத்தூர்

அனுபவம் பேசட்டும்!