Published:Updated:

65 வயதில் காப்பீடு சாத்தியமா?

65 வயதில் காப்பீடு சாத்தியமா?

65 வயதில் காப்பீடு சாத்தியமா?

செ.சம்பத், காரைக்குடி

 ''ஏழெட்டு வருடங்களாக கண்ணாடி போட்டு இருக்கிறேன். கடந்த ஆண்டு ஒரு நாள் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால், கண்ணில் கட்டியாக ஏதோ தூசி போன்று இருந்தது. மருத்துவர்களிடம் காட்டியபோது, 'இது அழற்சி; சரியாகிவிடும்’ என்று சொன்னார்கள். ஆனால், சரியாகவில்லை. அதற்குப் பின் டி.வி., கம்ப்யூட்டர் என எந்தத் திரையையும் பார்க்க முடியவில்லை. லேசான வெளிச்சத்தைப் பார்த்தால்கூட, கண் வலி வருகிறது. தற்போது, கண்களைச் சுற்றிலும் ஊசியால் குத்துவதைப் போன்று வலிக்கிறது.  என் பிரச்னைக்கு தீர்வு என்ன?''  

65 வயதில் காப்பீடு சாத்தியமா?

டாக்டர் ஷிபு வர்கி, கண் மருத்துவ நிபுணர், திருச்சி

##~##

''கண்ணில் உள்ள நீர் வற்றிப்போவதால்தான் இந்தப் பிரச்னை. கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வர அதிக சாத்தியம் உண்டு. பொதுவாக, மனிதன் ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண் சிமிட்ட வேண்டும். ஆனால், டி.வி. பார்க்கும்போது, தியேட்டரில் படம் பார்க்கும்போது, கம்ப்யூட்டரின் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது அதிகபட்சம் நிமிடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண் சிமிட்டுகிறோம். இதுவே கண்ணில் நீர் வற்றிப்போவதற்குக் காரணம். மேலும், இது கண்களின் உள்ளே இருக்கும் சதையை வளரச் செய்யும்.  

கணினியில் வேலை செய்யும்போது குறிப்பிட்ட புள்ளியைத் (FOCUSING POINT) தொடர்ந்து உற்றுக் கவனிப்போம். இது நல்லது அல்ல. இதற்குச் சிறந்த தீர்வு 20:20:20 என்கின்ற முறையாகும். அதாவது 20 நிமிடம் வேலை செய்தால் 20 வினாடிகள் தொலைவில் உள்ள எதாவது ஒரு பொருளின் மீது பார்வையைத் திருப்பி 20 வினாடி உற்றுப் பார்க்க வேண்டும். அதாவது நம் பார்வையை (FOCUSING POINT) மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு நிமிடத்திற்கு 20 முறை கண்களைச் சிமிட்ட வேண்டும். சில நேரங்களில் செயற்கை கண்ணீர் சொட்டு மருந்து உதவியை நாடலாம். நீங்கள் முதலில் ஒரு நல்ல கண் மருத்துவமனையை அணுகுங்கள்.''

கார்த்திக், கோவை

''சமீப காலமாக திடீர் பதற்றம் ஏற்பட்டு, இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. அந்தச் சமயங்களில் என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் நார்மல் என்று வருகிறது. ரத்த அழுத்தமும் நார்மல்தான். மருத்துவரை அணுகினால், 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.  காபி, டீயைத் தவிர்த்துவிடுங்கள்’ என்கிறார்கள். இப்படிப் பதற்றம் ஆகும்போது மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் சகஜ நிலைக்குத் திரும்புகிறேன்.  இதற்கு என்னதான் தீர்வு?'

டாக்டர். வி.ராமனுஜம், மனநல மருத்துவர், மதுரை

''இதுபோன்ற பயம், பதற்றம் வருவதற்குப் பொதுவாக இரண்டு காரணங்கள்.

1.  மூளையில் உள்ள சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும்போதும் குறையும்போதும் இது மாதிரியான பயம் தொற்றிக்கொள்ளும். அப்போது உடலெங்கும் வேர்த்துக் கொட்டி, கை நடுக்கம் ஏற்படும். இதற்கென்று தனி மருத்துவ சிகிச்சை உண்டு. உங்களுக்கு ஈ.சி.ஜி. நார்மலாக இருக்கும்பட்சத்தில் இதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை.

65 வயதில் காப்பீடு சாத்தியமா?

2.  அதிக மனப் பதற்றம் வந்தாலே பயம் வரும். இதை 'ஆன்சைட்டி நியுரோசிஸ்’ (Anxiety Neurosis) என்போம். இந்தப் பயத்துக்கு குறிப்பிட்ட எந்தக் காரணமும் இருக்காது. சிறு வயதில் நடந்த அல்லது மனதைப் பாதித்த எதாவது ஒரு விஷயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்த நேரத்தில்தான் பதற்றம் வரும் என்று குறிப்பிட்டு கூற முடியாது. ஆழ் மனதில் பதிந்த ஏதாவது ஒரு விஷயம் அவ்வப்போது தோன்றுவதாலும் இது மாதிரியான பதற்றம் வரும். 'பேனிக் அட்டாக்ஸ்’ (Panic Attacks) என்போம். அந்த நேரத்திலும் சம்பந்தமே இல்லாமல் இது மாதிரியான மனப் பதற்றம் இருக்கும். தொடர்ந்து நான்கு ஐந்து மணி நேரம் வரைகூட நீடிக்கும்.

இதை மேலும் தூண்டக்கூடிய ஒன்று காபி என்பதால் அதை குடிப்பதை அறவே விட வேண்டும். இது ஒவ்வொவொருவரின் மனநிலை, உடல் நிலையைப் பொருத்தும் மாறுபடும். இது உடல்ரீதியான பிரச்னை இல்லை. மனம் சம்பந்தபட்டது. எனவே, மனதை மாற்றும் வகையில் சில ரிலாக்ஸ்சேஷன் பயிற்சிகள் செய்தாலே போதுமானது. இது நூறு சதவீதம் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினமும் பத்து நிமிடங்கள் யோகா, தியானம் செய்யுங்கள். விரைவில் மாற்றம் தெரியும்.

ஜே.அப்துல் கபூர், சென்னை-13

''எனக்கு வயது 65.  சர்க்கரை நோய் இருக்கிறது. இப்போது மருத்துவக் காப்பீடு எடுக்க முடியுமா?''  

ரவி, துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்

''நீங்கள் மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது மருத்துவச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். மருத்துவ அறிக்கையைப் பொறுத்து பிரீமியம் தொகை வேறுபடலாம். உங்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் உங்கள் பாலிசி தொகை முடியும் வரை சிகிச்சை  பெற்றுக்கொள்ளலாம். பாலிசி எடுத்து இரண்டு ஆண்டுகள் வரை, அறுவைச் சிகிச்சைக்கு இந்தக் காப்பீட்டை நீங்கள் பயன்படுத்த முடியாது. மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலிருந்துதான் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும்.

மேலும் இப்போது சர்க்கரை நோயாளிகளுக்கென்றே தனியாக பாலிசிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாலிசிகளை எடுத்துக்கொள்வதைப் பற்றியும் நீங்கள் பரிசீலனை செய்யலாம். ஆனால், இந்த பாலிசியில் சர்க்கரை நோயால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். மற்ற நோய்களுக்கு பொதுவாக எடுத்திருக்கும் பாலிசிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சியாமளா, புதுக்கோட்டை

''நாற்பதை நெருங்கிவிட்டேன்.  ஒருகாலத்தில் எனக்கு அடர்த்தியான முடி இருந்தது.  ஆனால், இப்போது எல்லாம் கொட்டிப்போய் வெந்தயக்கீரைக்கட்டு மாதிரி இருக்கிறது. இந்த வயதில் தலையில் முடி வளர வாய்ப்பு இருக்கிறதா?''

டாக்டர் அமுதா ஜோதிராஜன், தோல் சிகிச்சை நிபுணர், திருச்சி

''முதலில் 'இந்த வயதில்’ என்கிற வார்த்தைகளையே கைவிடுங்கள். நாற்பது ஒன்றும் பெரிய வயது அல்ல. பாதி வாழ்க்கை இன்னும் இருக்கிறது உங்களுக்கு! பிரச்னைக்கு வருவோம். 'டீலஜன் எப்ளுவியம்’(Telogan Effluvivum) என்று கூறப்படுகின்ற முடி உதிரும் பிரச்னைக்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக சில மாத்திரைகள் உட்கொள்வதாலும், (உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்தை குறைக்கும் மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பின், மன அழுத்தத்திற்கான மாத்திரைகள்) முடி உதிரும். உடலில் தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரப்பதால் ஏற்படும் நோயினாலும் முடி உதிரும்.  இரும்பு, புரதம் மற்றும் சில சத்துக்கள் பற்றாக்குறை இருந்தாலும் முடி உதிரும். மேற்கூறிய 'டிலோகன் எப்ளுவியம்’ பிரச்னை எல்லா வயதினருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. 40 வயதினருக்கு மேல் உள்ள பெண்களுக்கு 'ஆன்ரோஜெனிக் அலபிஸியா’ (Androgenic Alopecia) பிரச்னையாலும் முடி உதிரும். என்ன காரணத்தினால் முடி உதிர்கிறது என்பதை ஹார்மோன் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை முடி வளர்ந்து கொண்டேதான் இருக்கும். வயது ஏற ஏற சத்துக் குறைபாட்டால் முடியின் அடர்வு தன்மை குறையும். முடியைப் பராமரிப்பது மட்டும் போதாது. இரும்பு சத்துள்ள கீரை, பேரீட்சம்பழம் மற்றும் புரத உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த முடியை திரும்பப்பெறலாம். முடி உதிர்வதற்கான காரணத்தை அறிய சிறந்த தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.''  

படம் : தே.தீட்ஷீக்