Election bannerElection banner
Published:Updated:

பயணம் பாதுகாப்பானதா?

பயணம் பாதுகாப்பானதா?

பயணம் பாதுகாப்பானதா?
##~##

ர்ப்பிணிகளின் மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று...  கர்ப்பமாக இருக்கும்போது, பயணம் செய்யலாமா?

 ஒருகாலம் இருந்தது... பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த காலம். வெளியே போகத் தேவைகள் இல்லாத காலம். அந்தக் காலத்தில் இதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம்... 'கூடாது’ என்று. ஆனால், பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில் அது சாத்தியம் இல்லை. எனில், பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வது எப்படி?

ஆறு வழிகள் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் உமா செல்வம்.

• ஒரு கர்ப்பிணி ரொம்பவே முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலகட்டம் முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்களும். ஆகையால், இந்தத் தருணத்தில் கூடுமானவரை பயணங்களைத் தவிருங்கள். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களைத் தவிருங்கள்.  வேலைக்குச் செல்ல வேண்டும்; மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பது போன்ற தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுங்கள்.

பயணம் பாதுகாப்பானதா?

•  பயணம் செய்ய பாதுகாப்பான வாகனம் எது? 'நட ராஜா சர்வீஸ்’ ஒரு நல்ல வாகனம். அருகாமை பயணம் எனில் நடந்தே செல்லுங்கள். நடக்க முடியாத தூரம் என்று நினைத்தால், நெருக்கடி இல்லாத ரயில், பஸ், காரைத் தேர்ந்தெடுங்கள். காரில் செல்லும்போது, இடுப்புக்குக் கீழும் மார்பகத்தை தழுவினாற்போல் உள்ள 'த்ரீ பின் பெல்ட்’ அணிந்து போவது கூடுதல் பாதுகாப்பு தரும். ஜன்னலோர இருக்கையைத் தேர்ந்தெடுப்பது காற்றோட்டத்துக்கு நல்லது. ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களைக் கூடுமானவரை தவிருங்கள்.

•  பயணத்துக்கு ஒரு மணி நேரம் முன்ன தாகவே சாப்பிட்டுவிடுங்கள். அரை வயிறுக்குச் சாப்பிடுங்கள். அதுவும் வறுவல், பொரியலைத் தவிருங்கள். இடையில் பசித்தால் என்ன செய்வது என்று நினைத்தால், நறுக்கிய பழங்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை கூடவே எடுத்துச் செல்லுங்கள்.

பயணம் பாதுகாப்பானதா?

•  பயணம் செய்யும்போது உடலில் நீர்ச் சத்து குறையும். தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மோர்... இப்படி நீராகாரமாக எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். மசக்கை காரணமாக வாந்தி வரும் என்பதால், கையில் எலுமிச்சை அல்லது நார்த்தங்காய் போன்றவற்றை எடுத்துச் சென்றால், அவற்றின் வாசனையை முகர்வதன் மூலம் பயணத்தின்போது வாந்தி வருவதைத் தவிர்க்கலாம்.

•  பயணங்களின்போது, இறுக்கமான ஆடைகளைத் தவிருங்கள். மூச்சுத் திணறலுக்கு இதுவும் ஒரு காரணம். பருத்தியாலான தளர்வான ஆடைகளே நல்லது. நெடுந்தூரம் பயணம் செய்யும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அடுத்து வரும் நிறுத்தம் வரை காத்திருக்காமல், சுத்தமான கழிப்பறை உள்ள இடமாகப் பார்த்து, வண்டியை நிறுத்தி சிறு கடனை முடியுங்கள்.  

•  போக்குவரத்து நெரிசலால், குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை என்றால், பதற்றம் அடையாதீர்கள். அரை மணி நேரம் தாமதமானால் பர்மிஷன், ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் அரை நாள் விடுப்பு என்று மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள். அதேபோல், துக்கம் உள்ளிட்ட அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருந்தால், அந்த விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே செல்லாதீர்கள். அதிகப் பதற்றம் ஆபத்தாய் முடியலாம். எச்சரிக்கையோடு இருங்கள். பாதுகாப்பாக இருப்பீர்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு