Published:Updated:

தளர்ச்சி தரலாமா சுழற்சி?

தளர்ச்சி தரலாமா சுழற்சி?

பிரீமியம் ஸ்டோரி
##~##

சுகன்யாவுக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிறது. கணவன் காதலைக் கொட்டினான். நமக்கு இருக்கும் வசதி போதும்; வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்று இருவரும் முடிவு எடுத்துவிட்டதால், வேலையைக்கூட விட்டுவிட்டாள் சுகன்யா. வீட்டில் எல்லாம் இருந்தன. ஆனாலும், நிம்மதி இல்லை. காரணம், மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறைதான் சுகன்யாவுக்கு மாதவிலக்கு வரும். அப்படி வரும்போது ஒரு வாரத்துக்கு மேல் கடும் ரத்தப்போக்கு ஏற்படும். அப்புறம் மீண்டும் மூன்று நான்கு மாதங்களுக்கு மாத விலக்கு வராது. 

சின்ன வயதில் இருந்தே சுகன்யாவுக்கு இந்தப் பிரச்னை உண்டு. அப்போது அவள் அலட்டிக்கொண்டது இல்லை. ஆனால், சமீப காலமாகக் கலங்க ஆரம்பித்தாள். காரணம்... உடல் எடை ஏறிக்கொண்டே

தளர்ச்சி தரலாமா சுழற்சி?

போனது. குழந்தைப்பேறும் சிக்கலாகிவிட்டது. விஷயம் இதுதான்... சுகன்யாவுக்குப் பல ஆண்டு காலமாகவே ஹார்மோன் கோளாறு இருந்து இருக்கிறது. அதன் காரணமாகவே மாதச் சுழற்சியில் பிரச்னை. தொடக்கத்திலேயே சரியான சிகிச்சையை எடுத்திருந்தால், இது ஒரு பிரச்னையே இல்லை. இப்போதோ நீண்ட சிகிச்சையில் இருக்கிறார் சுகன்யா.

உலகெங்கும் பல்லாயிரம் பெண்கள் மாதச் சுழற்சி பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்றாலும், இந்தியாவில் மட்டுமே மாதச் சுழற்சி தவறும் பெண்கள் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். காரணம், கூச்சம். ''ஆனால், கூச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் இது''

தளர்ச்சி தரலாமா சுழற்சி?

என்று சொல்லும் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் பிரேமா ஜெயபிரசாத் விளக்கமாக இது குறித்துப் பேசினார்.

எப்படி உருவாகிறது மாதவிலக்கு?

குழந்தையாகக் கருவில் இருக்கும்போதே பெண்களுக்குச் சினை முட்டைப்பை உருவாகிவிடும். கருப்பைக்கு வலது மற்றும் இடது பக்கத்தில் என இரண்டு சினைப்பைகள் உள்ளன. இதற்குள் ஏராளமான முட்டைகள் வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நேரத்தில், வளர்ச்சியடைந்த முட்டைகள் இவற்றில் இருந்து விடுபட்டு, கருப்பைக்குச் செல்லும். உதிரப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து மாதச் சுழற்சி தொடங்கும்.

சரியான மாதச் சுழற்சிக்கான காலம் எவ்வளவு?

பொதுவாக மாதச் சுழற்சி என்பது 28 நாட்களைக்கொண்டது. ஆனால், உலகில் எட்டு சதவிகிதப் பெண்களுக்குத்தான் 28 நாட்களில் மாதச் சுழற்சி சரியாக வரும். எனவே, 28 முதல் 35 நாட்களுக்குள் மாதவிலக்கு வரலாம்.

நிறையப் பெண்களுக்கு மாதச் சுழற்சியில் சிக்கல் ஏற்படுகிறதே... ஏன்?

தளர்ச்சி தரலாமா சுழற்சி?

மாதச் சுழற்சி என்பது மிகவும் சிக்கலான செயல்பாடு. ஹார்மோன், பாலியல் உறுப்புகள், நரம்பு மண்டலம் எனப் பல விஷயங்கள் இதனுடன் பின்னிப் பிணைந்து உள்ளன. மாதச் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முதல் இடம் பிடிப்பவை ஹார்மோன்கள். ஹார்மோனில் சரிவிகிதம் இல்லை எனில், மாதச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

அப்படி என்றால் ஹார்மோன்கள்தான் காரணமா?

அப்படிச் சொல்ல முடியாது. அதுவும் ஒரு முக்கியமான காரணம். ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும்கூட மாதச் சுழற்சி பாதிக்கப்படலாம். அதிக எடை அல்லது குறைந்த எடைகூட ஒரு முக்கியமான காரணம்.

இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது?

முதலில் உணவுப் பழக்கத்தைச் சீரமைக்க வேண்டும். உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, உடல் பருமன் ஏற்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில் ஹார்மோன் சுரக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இன்றைக்கு 16 வயதில் சர்வசாதாரணமாக 80 கிலோ, 100 கிலோ எடையுடன் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே, சரியான எடையைப் பெண்கள் பராமரிக்க வேண்டும். நொறுக்குத் தீனி, துரித உணவு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக அவசியம். அடுத்து, சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்து சிகிச்சையும் எடுத்துக்கொண்டால், பிரச்னையை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்!

-பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு