Published:Updated:

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

Published:Updated:

எஸ்.வெங்கட்நாராயணன், தேவகோட்டை.

 ''சென்ற மாதம் நான் ஷேவ் செய்தபோது முகத்தில் பிளேடால் காயம் ஏற்பட்டுவிட்டது. இப்போது அந்தப் புண் ஆறிவிட்டது. ஆனால், புண் ஏற்பட்ட இடத்தில் பெரிய தழும்பு வந்துவிட்டது. இதனால், முகத்தின் அழகே சிதைந்துவிட்டது. என் முகத்தைப் பழையபடி கொண்டுவர முடியுமா?''

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் கவிதா, தோல்நோய் சிகிச்சை நிபுணர், கரூர்.

##~##

''முகத்தில் ஷேவ் பண்ணும்போது ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் ஆறிவிடும். அப்படி ஆறாதபட்சத்தில் சின்ன அளவிலான தழும்பாக இருந்தால், தழும்புகளை மறைக்கும் சரும கிரீம்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். ஆனால், தழும்புகள் ஆழமாகவோ, பெரிதாகவோ இருந்தால் 'ஃபிராக்ஷனல் கார்பன் டை ஆக்ஸைட் லேசர்’ என்னும் மருத்துவ முறையில் தழும்புகளை முற்றிலும் இல்லாமல் செய்து முகத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம். இந்த சிகிச்சைக்கு ஐந்து நிமிடங்களே போதும். தழும்பு உள்ள இடத்தில் சிகிச்சைக் கருவியை வைத்தால் போதுமானது. ஆனால், தழும்புகளின் ஆழத்தைப் பொருத்து ஒரு முறை முதல் ஐந்து முறை வரை வந்து இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பெரிய அளவில் செலவு ஆகாது. சிகிச்சையின் போது வலியும் இருக்காது.''

 பெயர் வெளியிட விரும்பாத வாசகர், புதுச்சேரி.

''பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். என்னுடைய விதைப் பைகளில் ஒன்றைவிட இன்னொன்று அளவில் சிறுத்தும், சற்றே கீழ் இறங்கியும் இருக்கிறது. இது ஆண்மைக் குறைவின் அடையாளமா? வெளியில் யாரிடமும் சொல்ல முடி யாமல் வேதனைப்படுகிறேன். இதற்கு என்ன சிகிச்சை?''

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!

டாக்டர் எஸ்.நாராயணன், சிறுநீரகவியல் மருத்துவர், திருநெல்வேலி.

''இயல்பாகவே ஒரு விதை மற்றொன்றை விடவும் சற்றுக் கீழே இறங்கி இருக்குமானால் அதனை 'வரிகோசீல்’(Varicocele)  என்பார்கள். உடலின் வெப்ப நிலையைக்காட்டிலும் விதைப்பையின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் குறைவாகவே இருக்கும். இந்த விதைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். பிறவிக் குறைபாடு, விபத்தில் அடிபடுதல் போன்றவற்றால் விதையில் முடிச்சு போன்று தோன்றும். ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால், ரத்தக் குழாய் சுருங்கிவிடும். அதனால் ரத்த ஓட்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது அதனைக் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். இது தவிர, பிறவியிலேயே ஒரு விதை, மற்றதைவிடவும் சிறிதாக இருக்குமானால், அதற்கு சிகிச்சை எதுவும் தேவை இல்லை. ஒரு விதை சிறிதாக இருப்பதனால் மட்டும் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிடாது. ஆனாலும், 'வரிகோசீல்’ பிரச்னை இருக்குமானால் அதனை 'டாப்ளர் ஸ்கேன்’ மூலமாக எளிதல் கண்டுபிடிக்க முடியும். உங்களைப் பரிசோதிக்காமல் உங்களுக்கு என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்று கூறுவது சரியாக இருக்காது. எனவே, இதில் தயக்கம் வேண் டாம். அருகில் உள்ள சிறுநீரகவியல் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.''

 ஜி.விக்னேஷ், வேலூர்.

''17 வயது கல்லூரி மாணவன் நான். எனக்கு இன்னும் சரியாக மீசை- தாடி வளரவில்லை. என்னுடைய நண்பர்கள் ஸ்டைலாக பிரெஞ்ச் தாடி வைத்திருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் மீசை-தாடி வளராமல் இருக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இந்தக் குறைபாடு?''

டாக்டர் சிவக்குமார், பொதுநல மருத்துவர், தர்மபுரி.

''இந்த வயதில் இரண்டாம் நிலை பாலியல் வளர்ச்சி ('செகண்டரி செக்ஷ§வல் க்ரோத்’) ஏற்பட்டு மீசை முளைப்பது உள்ளிட்ட உடல் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ வேண்டும். அப்படி ஆகவில்லை என்றால், உடலில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று பொருள். அதே நேரம் பயப்படும்படி எதுவும் இல்லை. உங்கள் உடலில் ஹார்மோன் சமன்பாட்டில் குறைபாடு இருக்கலாம். எனவே, நீங்கள் நாளமில்லா சுரப்பிகள் நிபுணர் அல்லது பொதுநல மருத்துவர் ஒருவரை அணுக வேண்டும். அவர் உங்கள் உடலை முழுதாக பரிசோதித்து பிரச்னைக்கான காரணங்களைக் கண்டறிவார். சில சமயம் காரணமே இல்லாமல் கூட இந்தக் குறைபாடு ஏற்படும். எந்த காரணமாக இருப்பினும் பெரும்பாலும் அவை சரிசெய்யக் கூடியவைதான். எனவே எதற்கும் பயப்படாமல் முதலில் மருத்துவரைப் பாருங்கள். உங்களைச் சோதித்த பிறகு அவர் தரும் ஆலோசனைகள் படி நடந்தால் நீங்களும் ஸ்டைலாக தாடி, மீசை வளர்க்கலாம்.''

 புஷ்பா, வேலூர்.

''நான் அவ்வப்போது விரதம் இருக்கும் பெண்மணி. தண்ணீர்கூட அருந்தாமல் காலை முதல் மாலை வரை விரதம் இருப்பேன். ஆனால், இப்படிச் செய்வது  உடல்நலத்துக்கு தீங்கு பயக்கும் என்று என் கணவர் சொல்கிறார். யார் யார் எல்லாம் விரதம் இருக்கலாம்? விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன... தீமை என்ன?''

டாக்டர் பூ.வினோத் குடல் நோய் சிகிச்சை நிபுணர், புதுச்சேரி.

''வாரத்துக்கு ஒருநாள் நோன்பு இருப்பவர்கள் அல்லது சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ப வர்கள் மற்றவர்களைக்காட்டிலும் ஆரோக்கியமாக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது, திட உணவைத் தவிர்த்து தண்ணீர், பழரசங்கள் போன்றவற்றை கொஞ்சமாக எடுத்துக்கொண்டு விரதம் இருப்பது என விரதம் இருப்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது சரியானது அல்ல. வாரத்துக்கு ஒருநாள், தண்ணீர், பழரசம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பவர்களின் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடலின் செரிமான மண்டலத்துக்கு ஒருநாள் ஓய்வு அளிப்பதன் மூலம், அதிகப்படியான ஆற்றல் செலவாவது தவிர்க்கப்படுகிறது.

மேலும் உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்கள் சேருவது தவிர்க்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு, வாரத்துக்கு ஒருநாள் விரதம் என்று இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக் குழாய்களில் அடைப்பு, உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. தண்ணீர்கூட அருந்தாமல், தொடர் விரதம் இருப்பவர்களுக்கு உடலில் நீர் அளவு குறைந்து நீரிழப்பு ஏற்படலாம். மேலும் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்னை ஏற்படலாம். ஆரோக்கியமான நபர்கள் யார் வேண்டுமானாலும் வாரத்துக்கு  ஒருநாள் விரதம் இருக்கலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், பயணம் மேற்கொள்வோர் விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.''

மாலதி பழனிவேல், அம்பத்தூர்.

''எனக்கு அடிக்கடி பிடறி, தோள் பட்டை பகுதியில் வலிக்கிறது. ஐடி. கம்பெனியில் நைட் ஷிப்ட் வேலை செய்கிறேன். வீட்டிலும் சில நாட்கள் வேலை தொடரும். இந்தத் தோள் பட்டை வலியுடன் லேசாக நெஞ்சில் வலி எடுக்க மருத்துவரை அணுகினேன். ஈ.சி.ஜி. நார்மல் என்றவர், இரண்டு ஊசிகள் போட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். சில நாட்கள் பிரச்னை இல்லை. ஆனால், மறுபடியும் இப்போது இந்த வலி வந்துவிட்டது. என் தோள் பட்டை வலி போக என்ன வழி?''

டாக்டர் துரைராஜ், நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர், மதுரை.

''முதுகுத் தண்டுவடத்தையும் மூளையையும் இணைக்கும் பகுதிதான் கழுத்து. இப்பகுதியில் பலவகைத்தசைகளின் மூலம் கழுத்தானது தலையையும் உடலையும் இணைத்து நிற்கிறது. இந்தத் தசைப்பகுதியில் இறுக்கம், தண்டுவடத்தில் உள்ள ஜவ்வு விலகுதல், அழுத்துதல் காரணமாக வலி ஏற்படலாம். வலிக்கான காரணத்தை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து தசைகள் இறுக்கம் அடையும். இதனால், கழுத்தோடு தொடர்பு உள்ள தோள்பட்டை, நெஞ்சுப் பகுதி மற்றும் கைகளுக்கு நரம்புகள் மூலம் வலி பரவும். கைகளில் மதமதப்பு ஏற்படும். அதிக மன அழுத்தம். மனப்பதட்டமும் இதற்கு முக்கியக் காரணம். எனவே, வேலை நேரத்துக்கு நடுநடுவே கட்டாயமாக ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் 6-ல் இருந்து 8 மணி நேரமாவது கட்டாயமாக ஆழ்ந்த உறக்கம் தேவை. பிடரி, தோள்பட்டை வலிக்குத் தகுதி பெற்ற பிசியோதெரபிஸ்டின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மன அழுத்தத்தைக் குறைக்க குடும்பத்தினருடன் சிரித்து மகிழ நேரம் ஒதுக்குவது மற்றும் யோகா, தியானம் போன்றவையும் பலன் தரும். இதை எல்லாம் செய்தும் வலி நீடித்தால் நரம்பியல் சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது!''

ஐந்தே நிமிடத்தில் முகத்தழும்புக்கு முடிவு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism