Published:Updated:

வலி இல்லா தீபாவளி!

வலி இல்லா தீபாவளி!

வலி இல்லா தீபாவளி!

வலி இல்லா தீபாவளி!

Published:Updated:
##~##

தீபாவளி வந்தாச்சு! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களப்படும். எல்லாமும் இனிதாக நடக்க வேண்டிய நேரத்தில்தான் நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. பண்டிகைக் காலத்தை சந்தோஷம் குறையாமல் எப்படிக் கொண்டாடுவது? வழிகாட்டுகின்றனர்   புதுச்சேரியைச் சேர்ந்த பொது மருத்துவர் ரமேஷ், கடலூர் சித்த மருத்துவர் எஸ்.சந்திரசேகரன், ஆற்காடு சித்த மருத்துவர் எஸ்.மகேஷ்வரன். 

பட்டாசைத் தவிர்க்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

வலி இல்லா தீபாவளி!

பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி?

நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள். பட்டாசு வெடிக்கும் இடம் திறந்தவெளியாக இருக்கட்டும். வெடிகளை வெடிக்கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

வலி இல்லா தீபாவளி!

குழந்தைகள் வெடிப்பதாக இருந்தால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்திருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம். பாட்டில் மற்றும் டின்களில் வைத்துப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிருங்கள். அதேபோல, பந்தாவுக்காக கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள். கம்பி மத்தாப்புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும்.

 தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது?

உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை கழுவிவிட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்தச் சமயங்களில் குளிர்ந்த நீரை உபயோகப்படுத்தினால் ரத்த ஓட்டம் குறைந்து பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால், சாதாரண நீரையே பயன்படுத்துங்கள். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டுவிட்டால், அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்!

 வீட்டுப் பண்டங்களே நல்லது!

தீபாவளி என்றால், பலகாரங்கள் - பட்சணங்களை வெளியில் கடையில் வாங்குவது என்னும் கலாசாரம் சமீபக் காலங்களில் உருவானது. இது நல்லது அல்ல. சாதாரணமான நாட்களைவிட, இத்தகைய பண்டிகைக் காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடக்கும் என்பதாலேயே, முன்கூட்டியே பலகாரங்களைச் செய்வார்கள் கடைக்காரர்கள். இதனால், வழக்கமான தரம் குறைவதோடு, பட்சணம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான ரசாயனக் கலவைகளையும் சேர்ப்பார்கள். எனவே, வெளியில் பலகாரங்கள் வாங்குவதைத் தவிருங்கள். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’ போன்ற ஐட்டங்களை முற்றிலுமாகத் தவிருங்கள். உங்களால் முடிந்த பலகாரங்களை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்!

தீபாவளி நாளில் அசைவம் வேண்டாமே!

தீபாவளி என்றாலே, பலகாரங்கள் சூழ இலையில் தோசையும் தொட்டுக்கொள்ள கறிக் குழம்பும்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரே நாளில் ஓர் ஊரில் உள்ள லட்சக் கணக்கான மக்களுக்கும் கோழியோ, ஆடோ தர வேண்டும் என்றால், இறைச்சிக் கடைக்காரர்களால் முடியுமா என்று! உண்மை என்னவென்றால், தீபாவளிக்கு முதல் நாள் காலையிலேயே ஆடு, கோழிகளை வெட்ட ஆரம்பித்துவிடுவார்கள் கடைக்காரர்கள். ஆக, சுகாதாரம் அற்ற மாமிசம்தான் மறுநாள் காலையில் பெரும்பாலும் கிடைக்கும். தவிர, அது ஆடுதானா; கோழிதானா என்ற உறுதிப்பாடும் அன்றைய தினம் கிடையாது. தேவையா இது? நான்கு நாட்கள் கழித்து நல்லதை வாங்கிச் சாப்பிடுங்கள்!  

எப்படிச் சாப்பிடுவது?

பண்டிகை என்றால், விடுமுறை நாளில் டி.வி. பார்த்துக்கொண்டே வயிற்றுக்குள் எதையாவது தள்ளுவதுதான் கொண்டாட்டம் என்றாகிவிட வேண்டியது இல்லை. பலகாரங்கள், பட்சணங்களில் வழக்கமான உணவு வகைகளைவிட எண்ணெய், சர்க்கரை, காரம் எல்லாமே தூக்கலாக இருக்கும். எனவே, அளவாகச் சாப்பிடுங்கள். பட்சணம் வேறு சாப்பிட்டுவிட்டு உணவு வேறு சாப்பிட வேண்டும் என்ற தேவை இல்லை. பட்சணமே உணவுதான். ஒரே கட்டாகக் கட்டாமல், பிரித்துச் சாப்பிடுங்கள். தண்ணீர் நிறையக் குடியுங்கள். இஞ்சி, சுக்கு கலந்த டீ பருகுங்கள். செரிமானதுக்கு உதவும்!

தீபாவளி மருந்து

மல்லித் தூள் 100 கி., வெல்லம் 100 கி., சீரகத்தூள் 50 கி., சுக்குத் தூள் 25  கி., ஏலக்காய் அரை டீஸ்பூன். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அடுப்பில் வைத்து பாகு பதம் வந்ததும், அதில் மல்லித் தூள், சீரகம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து கிளறுங்கள். இது நன்கு கொதித்து கெட்டியானவுடன் நெய் கொஞ்சம் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். பெரியவர்கள் ஒரு நெல்லிக்காய் அளவுக்கும் சிறுவர்களுக்கு இரண்டரை கிராம் அளவுக்கும் இதை உட்கொள்ளலாம். வாயு தொந்தரவு, அஜீரணம், வயிற்று வலிக்கு நல்ல நிவாரணி!

வலி இல்லா தீபாவளி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism