Published:Updated:

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

Published:Updated:
துளித் துளியாய்...
துளித் துளியாய்...

டற்பயிற்சியால் கிடைக்கும் பலன்களின் பட்டியலில் புது வரவு ஒன்று சேர்ந்து உள்ளது. வயதான பின்னரும் உடற்பயிற்சி செய்வதைத் தொடர்ந்தால், 60 வயதுக்கு மேல் மூளை சுருங்குவதைத் தடுக்க முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்  எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மூளை சுருங்குவதைத் தடுப்பதால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? 'டிமென்ட்ஷியா’ எனப்படும் நினைவிழப்பு நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார்கள். உடற்பயிற்சி என்றால், கையை, காலை உடைத்துக் கொள்ளும் அளவுக்குத் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டியது இல்லை. தினந்தோறும் நல்ல நடைப்பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அப்புறம் என்ன 'நடராஜா’ எக்ஸ்பிரஸைக் கிளப்ப வேண்டியதுதானே?

துளித் துளியாய்...

 ஸ்காட்லாந்தில் புதிய  மருத்துவச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறார்கள். அதன்படி ஒருவருக்கு நோய் தாக்குதல் கண்டறியப்பட்டால், அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச்சையை அவர் பெற வேண்டும். நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் இந்தச் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள். 'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன் எனப்போதும் இல்லாத அளவுக்கு விரைவாகச் சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது’ என்று சந்தோஷமாக அறிவித்திருக்கிறார் ஸ்காட்லாந்து சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல்.

ஓவர் டூ குலாம் நபி!

துளித் துளியாய்...

 ஒரு நாளின் முக்கால்வாசிப் பகுதி மின்வெட்டால் கழியும் நிலையில், எப்போதுமே குளிர் நிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய மருந்துகளை எப்படிப் பாதுகாக்கிறார்கள்? உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து நோயாளியின் உடலைச் சென்றடையும் வரை இப்படிக் குறைந்த வெப்ப நிலையில் மருந்துகளைப் பாதுகாக்கும் முறையை 'குளிர்ச் சங்கிலி முறை’ (GOLD CHAIN) என்கிறார்கள் மருத்துவத் துறையினர். மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு 'வாக் இன் கூலர்’ அமைப்புள்ள வாகனங்களில் புறப்படும் மருந்துகள், மருத்துவமனைகளைச் சென்று அடைந்ததும் அங்கே குளிரூட்டப்பட்ட அறைகளிலும் ஐஸ் லைன் ஃப்ரிட்ஜுகளிலும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வகையான ஃப்ரிட்ஜுகள் மின்சாரம் நின்றாலும் தொடர்ந்து 72 மணி நேரம் செயல்படக் கூடியவை. தவிர, ஜெனெரேட்டர்கள், யூபிஎஸ்கள் உதவியுடன் மின்வெட்டை எதிர்கொள்கிறார்கள். ஒருவேளை இதில் ஏதேனும் கோளாறு ஆனால், வெப்ப மாற்றத்தால் மருந்து கெட்டுப்போகும்.  அதன் மேல் இருக்கும் லேபிளின் வண்ணம் கருப்பு நிறமாக மாறிவிடும். இதை வைத்து மருந்து கெட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்கிறார்கள்.

நம்ம கஷ்டத்தைவிட பெரும் கஷ்டமா இருக்கு மருந்து கஷ்டம்!

துளித் துளியாய்...

 கங்கை இந்தியாவின் புனித நதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிவந்த கதையை இனி நிறுத்திக்கொள்ளுங்கள். கங்கை கழிவுகளின் வடிகால் ஆகிவிட்டது.  கங்கையில் ஒவ்வொரு நாளும் கொட்டப்படும் டன் கணக்கிலான கன உலோகங்கள் மற்றும் ரசாயனக் கழிவுகள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக கங்கை நீரை மாற்றிவிட்டன என்கிறது தேசியப் புற்றுநோய்ப் பதிவகம் நடத்திய சமீபத்திய ஆய்வு.   இன்னமும் கங்கை நீரைக் குடிநீராகக் குடிக்கும் லட்சக் கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்கிற பின்னணியில், இந்தச் செய்தியைப் படியுங்கள்.

என்ன மாதிரி நாட்டில் நாம் வாழ்கிறோம்?

துளித் துளியாய்...

 ஒரு குட் நியூஸ்! தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்கு டாட்டா காட்டலாம். 'ரத்தத்தில் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் குறைவாக இருப்பவர்கள்தான் அதிகம் வாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணியில் இருக்கும் 'லைகோபீன்' என்கிற வேதிப்பொருள் வாதநோயைத் தடுக்கிறது. எவ்வளவு அதிகமாக தக்காளி சாப்பிடுகிறோமோ, அங்கே வாதம் பாதம் வைக்காது!’ என்று கண்டுபிடித்திருக்கிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.

பங்காளிக்கு ஒரு கிலோ தக்காளி பார்சேல்!

துளித் துளியாய்...

 காருக்குள் உட்கார்ந்து ஹாயாக தம் அடிக்கும் பார்ட்டியா நீங்கள்? விட்டுடுங்க சார். வெளியே சிகரெட் இழுப்பதைவிட, காருக்குள் அமர்ந்து புகையை இழுக்கும்போது அதிக அளவு நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார் அபர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள். ஷானின் ஆய்வு சொல்லும் இன்னோர் அபாயகரமான செய்தி, இப்படி ஒருவர் சிகரெட் அடிக்கும்போது காரில் கூட உட்கார்ந்து இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது. குறிப்பாக, குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்; ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள். மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பும் முழுமையாக வளர்ச்சிய டைந்திருக்காது'' என்கிறார் ஷான்.

கார்ல வேணாமே சார்!

 முதுகுத் தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து 'ஸ்பைனல் கேர் இந்தியா’ என்ற அமைப்பினைத் தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. முதுகுத் தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தரமான மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சி ஆலோசனைகளைப் பெற 18004251210 என்ற எண்ணில் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்.                                நல்லா செய்ங்கப்பா!

துளித் துளியாய்...

 அசைவம் சாப்பிடுபவர்களைவிட சைவம் சாப்பிடுபவர்கள் கூடுதலாக 10 வருடங்கள் வாழ்கிறார்களாம். அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்லும் முடிவு இது. அசைவத்தில் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும்கூட அசைவப் பிரியர்கள் கன்னாபின்னாவெனச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சைவர்களோ ஒருகட்டத்தில் கண்ணும் கருத்துமாக உடம்பைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.  மேலும், அசைவம் சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு உண்பவர்களின் உடல் எடை சுமார் 17 கிலோ வரை குறைவாக இருப்பதாகவும் சொல்கிறது இந்த ஆய்வு.

உஷார் ராஜ்கிரண்ஸ் உஷார்!

 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஒரு சாபக்கேடு என்றால், ஆண்களுக்கு  புராஸ்டேட் புற்றுநோய் ஒரு சாபக்கேடு. ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயில் பல வகைகள் உண்டு. இவற்றை, தீவிரத்தன்மை கொண்டவை, தீவிரத்தன்மையற்றவை என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துவார்கள் மருத்துவர்கள். இதில் தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சையின் உதவியோடு பல ஆண்டுகள் வாழ முடியும்.

ஆனால், தீவிரத்தன்மை உடைய புராஸ்டேட் புற்றுநோய் தாக்கியவர்கள் சில மாதங்களிலேயே இறந்துவிடுவார்கள். இப்படியான தீவிரத்தன்மை கொண்ட புராஸ்டேட் புற்றுநோயை தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோயிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கான ரத்த பரிசோதனை முறையை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புராஸ்டேட் புற்றுநோயை எதிர்கொள்வதில் இந்தப் புதிய ரத்தப் பரிசோதனை ஒரு மைல் கல்லாக அமையும் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

நல்லது நடக்கட்டும்!

துளித் துளியாய்...

 காதல் மற்றும் கல்யாணம் குறித்த மனநிலை அறிய நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே தங்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், சுபகாரியங்களுக்கும் செல்ல ஆர்வம் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். 23 சதவீதம் பேர் தங்களுடைய 'ஆளுக்கு’ பொறாமை ஏற்படவேண்டும் என்றே வேறு சிலருடன் நட்பு வைத்துக்கொண்டு கடுப்படிக்கிறார்களாம். குறைந்தபட்சம் அப்படிக் காட்டிக்கொள்ளவாவது செய்கிறார்களாம். 15 சதவீதப் பெண்கள் தாங்கள் ஏற்கெனவே ஒரு நட்பில் இருந்து மனம் நொந்து இருப்பதுபோல காட்டிக்கொள்கிறார்களாம். இது தங்களது மனம் கவர்ந்தவரின் அனுதாபத்தைச் சம்பாதிக்கவாம். 89 சதவீதம் பேர் முதன்முதலில் தோன்றும் காதல்தான் உண்மையானது என்று நம்புகிறார்களாம். இவர்களில் 63 சதவீதம் பேர் தங்களின் முதல் காதலுக்கு முக்கியத்துவம் தரவும் செய்கிறார்களாம். இப்படி எல்லாம் உப்பு பெறாத இந்தப் புள்ளிவிவரப் புயலில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. அது, குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையில் நம்முடைய ஆண்கள் காட்டும் கரிசனம். இந்தியாவில் 100-க்கு 1 என்ற விகித்தில்கூட குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன்வருவது இல்லையாம்.

காதலை வெறும் வார்த்தையில் சொல்லாதீங்க பாஸ்!

 காச நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமியை கண்டறிந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இந்தக் கிருமி வராமல் தடுக்க இதுவரை தடுப்பூசி இல்லை. இந்நிலையில், இந்த நூற்றாண்டு ஆராய்ச்சியில் கடந்த வாரம் முக்கியமான கட்டத்தை எட்டி இருப்பதாகச் சொல்லி இருக் கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆற்றல்மிக்க காசநோய் தடுப்பு மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பதாகவும் இதற்கான முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும்  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் பல கட்டச் சோதனைகள் இருக்கின்றன. 2020 வாக்கில் இந்த மருந்து சந்தைக்கு வரலாமாம். இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீக்கிரமே காச நோய்க்கு முற்றுப்புள்ளி வைங்கப்பா!

 படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism