Published:Updated:

கவனக் குறைவால் 'குவா குவா'

கவனக் குறைவால் 'குவா குவா'

கவனக் குறைவால் 'குவா குவா'
##~##

''ஏன் அனு... நான் எதுலயாவது கேர்லஸா இருந்திருக்கேனா... சொல்லு பார்க்கலாம். எதுலயாவது நான் கேர்லஸா இருந்திருக்கேனா?''

 ''ஏ... நான் இப்போ கன்சீவா இருக்கேன்!''

''ஐயோ, ரெண்டு பேருமே கேர்லஸா இருந்திட்டோமே...''

-சமீபத்தில் வெளியான 'பீட்சா’ படத்தில் 'க்ளாப்ஸ்’ வாங்கிய டயலாக் இது. முன்னெச்சரிக்கை இல்லாமல் கரு உருவாகிவிட, என்ன செய்வது எனத் தெரியாமல் விஜய் சேதுபதியும் ரம்யா நம்பீசனும் திண்டாடுவதும், 'ஆணுறை கம்பெனி மேல் கேஸ் போடலாம்’ என நண்பர்கள் அட்வைஸ் செய்வதும் படத்தில் பக்கா காமெடிகளாக நீளும். ஆணுறை மாதிரியான முழுப் பாதுகாப்பு இல்லாத கருத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதால் பல குடும்பங்களிலும் நிஜமாகவே நடக்கிற ஒன்றுதான் எச்சரிக்கை தாண்டிய இந்தக் குவா குவா!

இப்படி கவன குறைவாக இருந்துவிட்டால் கரு உருவாகாமல் தடுக்கும் வழிதான் ஈ.சி.பி.

ஈ.சி.பி. என்றால் என்ன? எத்தனை சதவீதம் அது பாதுகாப்பானது? கோயமுத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான டி.சிலம்புச்செல்வி விளக்கமாகப் பேசுகிறார்.

கவனக் குறைவால் 'குவா குவா'

'ஈ.சி.பி. என்பது எமர்ஜென்சி கான்ட்ராசெப்டிவ் பில்ஸ் (Emergency Contraceptive Pills) என்பதன் சுருக்கம். பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பின்னர் கர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரை இது.   ஒரே ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டால் போதும். கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கலாம். விலை சுமார் 100 ரூபாய்'

''எப்போது பயன்படுத்தலாம்?''

''பாதுகாப்பற்ற உடல் உறவு கொண்ட பிறகோ அல்லது உடல் உறவின்போது ஆணுறை கிழிந்துவிட்டாலோ அல்லது வன்புணர்வு நிகழ்ந்துவிட்டாலோ அல்லது குடும்பக் கட்டுப்பாடு முறைகளைச் சரிவரப் பின்பற்ற தவறும் சந்தர்ப்பங்களிலோ 'கர்ப்பம் ஏற்பட்டுவிடக் கூடும்’ என்ற அச்சம் ஏற்படும்போது பயன்படுத்தலாம்.''

''இதற்கும் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கும் என்ன வித்தியாசம்?'

''இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை. கருத்தரித்த பிறகு அதைக் கலைப்பதற்குக் கருக்கலைப்பு மருந்துகள் பயன்படும். ஆனால், ஈ.சி.பி. கர்ப்பம் உண்டாவதையே தடுத்துவிடும். கருக்கலைப்பு மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வாங்க முடியும். ஆனால், ஈ.சி.பி. மாத்திரை வாங்குவதற்கு மருத்துவரின் பரிந்துரை தேவை இல்லை. ஏற்கெனவே கர்ப்பம் ஆகிவிட்ட பெண்களுக்கு ஈ.சி.பி. உதவாது.'

''பாதுகாப்பற்ற உடல் உறவு கொண்ட எத்தனை நாளைக்குள் ஈ.சி.பி.யைப் பயன்படுத்த வேண்டும்? கர்ப்பம் நிச்சயம் தவிர்க்கப்பட்டுவிடுமா?'

'பாதுகாப்பற்ற உடல் உறவுகொண்ட 72 மணி நேரத்துக்குள் இதைப் பயன்படுத்தவேண்டும். உரிய

கவனக் குறைவால் 'குவா குவா'

சமயத்தில் பயன்படுத்தினால் 97சதவிகிதம் கர்ப்பம் தவிர்க்கப்படக் கூடிய சாத்தியம் உண்டு.'

''இது எப்படிச் செயல்படுகிறது?'

''இதில் புரோஜெஸ்டீரோன் அல்லது ஈஸ்ட்ரொஜென் எனப்படும் ஹார்மோன்கள் உள்ளன. பல்வேறு நிலைகளிலும் இது கரு உண்டாவதைத் தடுக்கும். உதாரணமாக இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டவுடன், கரு முட்டை உற்பத்தியைத் தடுக்கும். / கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளி வருவதைத் தடுக்கும். / கருமுட்டையுடன் விந்தணு சேருவதைத் தடுக்கும். / ஏற்கனவே சேர்ந்திருந்தால் அது கருப்பைச் சுவரில் ஒட்டுவதைத் தடுக்கும்.

''ஈ.சி.பி. தனது வேலையைச் செய்யவில்லை என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?''

''உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாது. அடுத்த மாதவிடாய் சமயத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு மேலாக மாதவிடாய் வரவில்லை என்றால், கருவுற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.'

''தாய்ப் பால் கொடுப்பவர்கள் ஈ.சி.பி.யைப் பயன்படுத்தலாமா?’

''தாராளமாகப் பயன்படுத்தலாம். எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.''

''ஈ.சி.பி. பயன்படுத்திய பிறகும் கர்ப்பம் தரித்துவிட்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?''

''நார்மலாகவே இருக்கும்.  பயப்படத் தேவை இல்லை.  

''இதை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது?''

''உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே கருக்குழாயில் கர்ப்பம் உண்டாகிப் பிரச்னைக்கு ஆளானவர்கள் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.''

''ஈ.சி.பி.யைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா?'

''ஈ.சி.பி.யைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்களே இதைத்தான் சொல்கின்றன. காரணம். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் பெண்களுடைய ஒட்டுமொத்தமான ஹார்மோன் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் கோளாறுகள்கூட ஏற்படலாம். தொடர்ந்து பயன்படுத்தினால் பலன் அளிக்காமலும் போகக்கூடும். ஆணுறை, காப்பர் டி மற்றும் வாய்வழி கருத்தடை மாத்திரைகளுக்கு மாற்றாக இதை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

அதே போலப் பால்வினை நோய்கள் மற்றும் ஹெச்.ஐ.வி. போன்றவற்றில் இருந்து ஈ.சி.பி. காப்பாற்றாது என்பதையும் இவர்கள் மனதில் பதிப்பது நல்லது.''

''ஈ.சி.பி.யைப் பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமா டாக்டர்?''

''எந்தவிதமான கடுமையான பின்விளைவுகளும் ஏற்படாது. அபூர்வமாக ஒரு சிலருக்கு அதிகப்படியான உதிரப்போக்கு, வயிறு மற்றும் நெஞ்சு வலி, அதிகமான கை கால் அசதி, மூச்சிரைப்பு போன்றவை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சாதாரணமாக வாந்தி, தலைசுற்றல், தலைவலி அடிவயிற்றில் லேசான வலி போன்ற பின்விளைவுகள்தான் ஏற்படும். சிலருக்கு மார்பகங்களின் மிருதுத் தன்மை குறைய வாய்ப்பு உண்டு. இன்னும் சிலருக்கு எதிர்பாராமல் உதிரப்போக்கு ஏற்படலாம். அடுத்த மாதவிடாய் உரிய நாளில் இருந்து தள்ளியோ அல்லது முன்னதாகவோ ஏற்படலாம். இவை யாவும் சாதாரணமான பக்க விளைவுகள்தான். தற்காலிகமானவைதான். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். தொடர்ந்து பிரச்னை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.'

ரயில் பெட்டிகளில் அவசரக்காலங்களில் வெளியேற 'எமர்ஜென்ஸி எக்ஸிட்’ என்று வைத்திருப்பார்கள் இல்லையா? எப்போதுமா அதை நாம் பயன்படுத்துகிறோம்? அவசரகாலத்துக்கு மட்டும்தானே பயன்படுத்துவோம்! அதே மாதிரிதான் ஈ.சி.பி.யும்!

அடுத்த கட்டுரைக்கு