Published:Updated:

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
##~##

ரும்முன் காப்பதன் முக்கியத்துவம்பற்றி சொல்லாத மருத்துவ முறைகள் இல்லை. ஆனால்,  நோய்கள் நம்மை நெருங்கிவிடாதபடி வாழ்வது அவ்வளவு சுலபமானதா? ''சாத்தியம்தான்'' என்கிறார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உதவி விரிவுரையாளரும் சித்த மருத்துவருமான எஸ்.சுஜாதா ஜோசப். 

'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ குறிப்பிட்ட நோய் ஏன் வருகிறது? அதை எப்படித் தடுப்பது என்பதை அறிந்தால் திருமூலரின் உபாயம் நமக்கும் தெரியவரும். உணவே மருந்து என்ற அடிப்படையில் நல்ல பல சிகிச்சை முறைகளையும் தீர்வுகளையும் இந்தத் தொடர் உங்களுக்கு அளிக்க இருக்கிறது.

 சர்க்கரையை வெல்வோம் சமத்தாக!

உலக அளவில் சர்க்கரை நோயில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது இந்தியாவுக்குத்தான் இரண்டாம் இடம்.  

எப்படி ஏற்படுகிறது சர்க்கரை பாதிப்பு? நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் நடக்கும் ரசாயன மாறுதல்களால் குளுகோஸாக மாறுகிறது. குளுகோஸ் ரத்தத்தின் வழியாகச் செல்களை அடைந்து உடலை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.

குளுகோஸை நமது செல்கள் உபயோகிப்பதற்கு உதவியாக இருப்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின்.  மேலும் உபரியாக உள்ள குளுகோஸை, கிளைகோஜனாக மாற்றி உடலில் சேமித்துவைப்பதும் இந்த இன்சுலின்தான். இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது குளுக்கோஸ் ரத்தத்தில் அதிகரித்து சிறுநீர் மூலம் வெளிப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோய்.

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் இன்சுலின் குறைவாக சுரக்கும் அல்லது முற்றிலுமே சுரப்பது இல்லை.

இரண்டாம் வகையிலும் மற்றும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயின்போதும் உற்பத்தியாகும் இன்சுலினை உடலின் செல்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

மரபுரீதியிலான காரணங்கள், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை முதலியவை சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணங்கள்.  

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நமது ரத்தக் குழாய்கள் இதயம், சிறுநீரகம்,

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

கண்விழித்திரை உட்பட உடலின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. அதிகரித்த சர்க்கரையினால் கிருமிகளும் உற்சாகமாக உடலைத் தாக்குகின்றன. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.  

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:

''ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றை ஒரே அளவில் சேர்த்து அத்துடன் எட்டுப் பங்கு நீரையும் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு ஆகும்படி காய்ச்சி அருந்த சர்க்கரை நோய் நீங்கும்; ரத்தத்தில் உள்ள உப்பும் குறையும் என்பது சித்தர்கள் வாக்கு.

ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது.

வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். இதில் உள்ள ஹைட்ராக்ஸிலூஸின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

ஆலமரத்தின் அனைத்துப் பாகங்களும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீரில் ஊறவைத்து, வடித்து, அருந்த சர்க்கரைநோய் கட்டுப்படும்.

கருங்காலி மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக ஆகும் வரை காய்ச்சி அருந்தலாம்.

 சிறுகுறிஞ்சான் இலைப் பொடியை 500 மி.கி. இரு வேளையும் எடுத்துக்கொள்ள  வேண்டும். இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் சிறுகுடலில் உறிஞ்சப்படும் குளுகோஸின் அளவைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.

என்ன சாப்பிடலாம்?

இஞ்சி, வெங்காயம், பூண்டு, அவரைப் பிஞ்சு, பீன்ஸ், சோயாபீன்ஸ், சிவப்பு பீன்ஸ், வாழைத் தண்டு, வாழைப் பிஞ்சு, முழுத் தானியங்கள், ஓட்ஸ், சிகப்பரிசி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆரஞ்சு, கொய்யா, பசலைக் கீரை, பாதாம், பூசணி விதை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன தவிர்க்கலாம்?

 வெள்ளை அரிசி, ரொட்டி, கிழங்கு வகைகள், வாழைப் பழம், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

சிகரெட் மற்றும்  மதுவை அறவே விட்டொழிக்க வேண்டும்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்,

செ.நாகராஜன்

அடுத்த கட்டுரைக்கு