Published:Updated:

ஆண்மை நீக்கம் என்றால் என்ன?

ஆண்மை நீக்கம் என்றால் என்ன?

ஆண்மை நீக்கம் என்றால் என்ன?

ஆண்மை நீக்கம் என்றால் என்ன?

Published:Updated:
ஆண்மை நீக்கம் என்றால் என்ன?
##~##

ண்மை நீக்கம்... டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து, விவாதத்தைக் கிளப்பி இருக்கும் வார்த்தை இது. ஆசியாவிலேயே முதன்முறையாக தென் கொரியாவில் ஐந்து பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு ஆண்மை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தியாவிலும் ஆண்மை நீக்கும் தண்டனையைக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசிய மகளிர் ஆணையத் தலைவி மம்தா ஷர்மா என்று பலரும் பேசுகிறார்கள். ஆண்மை நீக்கம் ஒரு சரியான தண்டனைதானா, பாலியல் வன்முறைக்கு அது சரியான தீர்வுதானா என்கிற விவாதங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆண்மை நீக்கம் என்றால் என்ன? சிறுநீரகவியல் மற்றும் இனப்பெருக்க மண்டல நிபுணர் எம்.ஜி.சேகரிடம் பேசினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்மை நீக்கம் என்றால் என்ன?

''பொதுவாக, ஆண் இனப்பெருக்க உறுப்பு முழுவதையும் அகற்றுதல், விந்தணுக்களை உண்டாக்கும் விரையை (டெஸ்டிஸ்) அகற்றுதல் மற்றும் சில ரசாயனங்களை உடலில் செலுத்துவதன் மூலம் ஆண்மை உணர்வை அகற்றுதல் என இரண்டு மூன்று வகைகளில் ஆண்மையை அகற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ரசாயன மருந்து செலுத்தி ஆண்மை அகற்றும் முறையையே மேற்கொள்கிறார்கள். இதில் ஆண் இனப்பெருக்க மண்டல வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க குணாதிசயத்துக்குக் காரணமாக இருக்கும் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனுக்கு எதிராகச் செயல் படும் மருந்து ஊசி மூலம் அளிக்கப்படும். மாதத்திற்கு ஒரு முறை என்ற விதத்தில் மூன்று மாதங்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். இவர்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு என்பது 90 சதவிகிதம் அளவுக்கு குறைந்துவிடும். இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு ஆண்மை குறைவதுடன் பாலியல் உணர்வும் 90 சதவிகிதம் குறைந்துவிடும். 10 சதவிகித உணர்ச்சி இருந்தாலும் விரைப்புத்தன்மை, விந்து வெளியேற்றம் போன்றவை இருக்காது. மேலும் ஜிஎன்ஆர் என்ற ஹார்மோன் அளவு பூஜ்ஜியம் அளவுக்கு குறைந்துவிடும்.

இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்ட நபருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுடன் பாலியல் உணர்வே இருக்காது. இப்படி ரசாயன மருந்து செலுத்தி ஆண்மையை அகற்றுவதில் சில பக்கவிளைவுகளும் உள்ளன. ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு அடர்த்தி குறைவால் பாதிப்பு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெண் தன்மை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்'' என்றார் சேகர்.

பாலியல் வன்முறையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பின்விளைவுகளுக்கு முன் இந்தப் பக்கவிளைவுகள் ஒரு பொருட்டா என்ன?

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism