Published:Updated:

ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?

ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?

பிரீமியம் ஸ்டோரி
ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?
##~##

''கண்ணாடி பார்க்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கும். அதை வெளிப்படுத்த வார்த்தைகள்தான் இருக்காது!'' - இது சமீபத்தில் கண்ணில்பட்ட 'ட்வீட்டுவம்’. மேக்கப் போட்டதே தெரியாத அளவுக்குப் பொலிவையும், பளபளப்பையும் கொடுக்கிற அழகு சாதனங்கள் இன்று எக்கச்சக்கம். இதில் பவர்ஃபுல்லான ஃபவுண்டேஷன் கிரீம்தான் சருமச் சுருக்கங்களை மறைத்து முகத்தைப் பளீரெனக் காட்டுகிறது. இந்த ரசாயன அழகுப் பொருள் உண்மையிலேயே சருமத்தைப் பாதுகாக்குமா? ஸ்ரீரங்கம் அரசுத் தலைமை மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ நிபுணரான ஜே.லதா விரிவாகப் பேசுகிறார். 

''ஃபவுண்டேஷன் கிரீம் என்பது மேக்கப் போடுவதற்காகப் பயன்படுத்தும் ஓர் அடித்தள (பேஸ்) கிரீம். நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவதால் தோலின் நிறம், மற்றும் பொலிவு அந்த நேரத்துக்கு மட்டுமே அதிகரிக்குமே தவிர, நிரந்தரமாக இருக்காது.  

ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?
ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?

விலங்குகளின் கொழுப்பு, துத்தநாகம், வாசனைப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் ஆகியன கலந்த கலவைதான் ஃபவுண்டேஷன் கிரீம். உலர் சருமத்துக்கு ஈரப்பதம் நிறைந்த கிரீம், எண்ணெய்ப் பசை மிகுந்த தோலுக்கு பவுடர் மற்றும் தாது உப்புக்கள் அடங்கிய கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.  இது தெரியாமல் கிரீம்களைப் பயன்படுத்தும்போது தோல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

முகம் சிவந்துபோவது, தோல் உரிதல், கண்களைச் சுற்றி வீக்கம் மற்றும் வலி போன்றவை ஏற்படும். எதனால் இந்த பாதிப்பு என்பதைத் தெரிந்துகொள்ள, சில பரிசோதனைகள் செய்வோம்.

பேட்ச் டெஸ்ட் என்னும் பரிசோதனையில் பேட்டரி போன்ற சாதனத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசலின் வைக்கப்படும். அதனை அவர்களது முதுகில் வைத்து 48 மணி நேரம் கழிந்த பின்னர், எந்தப் பொருளால் அவரது தோல் பாதிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்போம்.

ஆர்.ஓ ஏ.டி பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்களின் கையில் கிரீம்களைத் தடவி சில மணி நேரத்தில் தோலில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைப் பார்த்து, தேவையான சிகிச்சைகளை அளிப்போம்.  இதன் மூலம் கரும்புள்ளிகள் 15 சதவிகிதமும், தழும்புகளில் 25-30 சதவிகிதமும் சரிசெய்ய முடியும்'' - எச்சரிக்கையும் நம்பிக்கையுமாகச் சொல்கிறார் டாக்டர் லதா.

ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா?

''பொதுவாக அழகு சாதனப் பொருட்களில் கூட்டுப் பொருட்களின் விவரங்கள் அச்சிடப்படுவது இல்லை. இதனால், எந்தப் பொருளால் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கணிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. சருமப் பாதிப்பு வந்தால்கூட மக்கள் மறுபடியும் அழகு நிலையங்களுக்குத்தான் போகின்றனரே தவிர, மருத்துவரைச் சந்திப்பது இல்லை. அதுதான் வேதனை!'' என்கிறார் டாக்டர் லதா.

அழகுக் கலை நிபுணர் ராணி இதுகுறித்து என்ன சொல்கிறார்?  

''ஃபவுண்டேஷன் கிரீம் பயன்படுத்தியவர்கள், வெளியில் போய்விட்டுத் திரும்பியதும் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். மேக்கப்பைப் போக்க, டிஷ்யூ பேப்பரால் துடைத்தாலே போதும். இது சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய கிரீம்தான். அதை முறையாகப் பயன்படுத்துவதின் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம்'' என உறுதியாகச் சொல்கிறார் ராணி.

அனைத்து விஷயங்களுமே நல்லது கெட்டதுகளின் கலவைதான். எதை, எப்படிப் பயன்படுத்தி நமக்கு நல்லபடியானதாக மாற்றிக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான சுவாரஸ்யமும் சூட்சுமமும்!

- த.பிரியங்கா  

படங்கள் : தே.தீட்ஷித்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு