Published:Updated:

உடல் ரகசியம் சொல்கிறார் 'கடல்' துளசி

உடல் ரகசியம் சொல்கிறார் 'கடல்' துளசி

பிரீமியம் ஸ்டோரி
##~##
உடல் ரகசியம் சொல்கிறார் 'கடல்' துளசி

''சில மாசங்களுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவ்ளோ குண்டா இருப்பேன். 86 கிலோ. சிரிச்சேன்னா, என் ரெண்டு கன்னங்களும் அப்படியே ரெண்டு கண்ணையும் மறைச்சிடும். ஆனால், ரெண்டே மாசத்துல 20 கிலோ வரைக்கும் வெயிட்டைக் குறைச்சேன்.'' - 'எப்பூடி?’ எனக் கேட்டுச் சிரிக்கிறார் 'கடலில்’ முளைத்திருக்கும் துளசி. ராதாவின் இரண்டாவது மகள். 

''எப்படி உங்க எடையைக் குறைச்சீங்க?''

''அட, அதை ஏன் கேக்குறீங்க? அதுக்கு நான் ரொம்பவே சிரமப்பட்டுட்டேன். மணி சார் என்னைப் பார்க்க வரும் வரை என் உடல்நலம் பத்திக் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல்தான் இருந்தேன். நிறையச் சாப்பிடுவேன். மும்பையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஒண்ணுவிடாமல் தேடித்தேடிப் போய்ச் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் வெளுத்துக்கட்டுவேன். அம்மாவும், 'சின்னப் பொண்ணுதானே சாப்பிட்டுட்டுப் போறா’னு கண்டுக்காம விட்டுட்டாங்க. அதனால பயங்கர வெயிட் போட்டுட்டேன். அப்பதான் மணி சார் 'கடல்’ படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததுமே, 'நீதான் பியா கேரக்டர் பண்ற... அதுக்காக நீ வெயிட் குறைச்சே ஆகணும்’னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னார். மணி சார் படம்னா, மலையில இருந்துகூடக் குதிக்கலாம். கடகடனு மெனக்கெட்டு வெயிட்டைக் குறைச்சேன். சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கன்ட்ரோலா இருந்தேன். ஆனால், அந்த டைம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலை, அதே சமயம் வீட்டுல என்னைத் தவிர மத்தவங்க எல்லாரும் நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாங்க. அதைப் பார்த்துப் பொறாமையாகி நானும் பழையபடி கன்னாபின்னானு சாப்பிட ஆரம்பிச்சுப் பழைய கண்டிஷனுக்கே வந்துட்டேன். அந்த நேரம் பார்த்து மணி சார் திரும்ப வந்து என்னைப் பார்த்து டென்ஷன் ஆகிட்டார். நான் அழுதுட்டேன். அதுக்கு அப்புறம்தான் எனக்குள்ளே ஒரு வெறி வந்து, முன்னைவிட அதிகமா முயற்சிகள் செய்து வெயிட்டைக் குறைச்சேன்.''

உடல் ரகசியம் சொல்கிறார் 'கடல்' துளசி

''அப்படி என்ன முயற்சிகள் செஞ்சீங்க?''

''டயட் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன். கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் பொருட்களைச் சாப்பிடவே மாட்டேன். அதற்குப் பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட ஆரம்பிச்சேன். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். முன்னாடி எல்லாம் காலையில் லேட்டாத்தான் எழுந்திருப்பேன். அதுவே நம்ம உடம்புக்கு நிறையக் கெடுதல் பண்ணும்னு எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சது. அதனால சீக்கிரமாவே எழுந்திரிக்கப் பழகினேன். நாள் தவறாமல் ஜிம் போனேன். ஜிம்முக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ். ஜிம்ல ஒரு மணி நேரம் சின்ஸியரா கார்டியோ ஒர்க் அவுட்ஸ் பண்ணுவேன். ரன்னிங் போவேன். இதை எல்லாம் ரொம்ப விரும்பிப் பண்ணுவேன். கொஞ்சம் போர் அடிச்சாலும் அப்படியே நிறுத்திட்டு பாட்டுக் கேட்டு என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டுத் திரும்பவும் பயிற்சி களை ஆரம்பிப்பேன். காலையில் ஏதாவது பழரசம் ஒரு

உடல் ரகசியம் சொல்கிறார் 'கடல்' துளசி

கப். மதியம், ரெண்டு ரொட்டியும் முட்டையோட வெள்ளைக்கரு ஆறு துண்டுகளும், கோழிக் கறி கொஞ்சமும் சாப்பிடுவேன். சாயந்திரம் எதுவும் சாப்பிட மாட்டேன். ராத்திரி ஒரு கப் பழரசம் மட்டும் குடிப்பேன். இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்சேன். அதுக்கு அப்புறம்தான் 86 கிலோ இருந்த என் வெயிட், 20 கிலோ குறைஞ்சது. அப்புறம்தான் க்யூட் பேபி ஆனேன்.''

''அழகை மேம்படுத்த என்ன பண்ணுனீங்க?''

''ஜூஸ். இதுதான் என் அழகு ரகசியம். எவ்வளவுக்கு எவ்வளவு பழங்களோட ஜூஸ் நம்ம உடம்பில் சேருதோ, அந்த அளவு நம்ம தோல் பளபளப்பாகும். குறிப்பா முகப் பளபளப்பிற்கு ஜூஸ் வகைகள் ரொம்பவே நல்லது. அழகை அதிகரிக்கும் சக்தி சந்தனத்துக்கு இருக்கு. அதனால், அடிக்கடி சந்தன ஃபேஷியல் செஞ்சுக்குவேன். சந்தனம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. தரமான காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன். தலைமுடியில் அயர்னிங், கர்லிங் போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன். அடிக்கடி முட்டையின் வெள்ளைக்கருவை தலைமுடியில் வைத்து அலசுவேன். வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துப்பேன். இது தலைமுடி கருப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.''

''ரிலாக்ஸேஷன்ஸ்?''

''தூக்கம்தான். கூடவே, ஐ லவ் மியூசிக். நிறைய சூப்பர் பவர் ஹீரோ புக்ஸ் படிப்பேன். அதில் வரும் சாகசங்களைப் படிக்கும்போது, தானாகவே நம்ம மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சுடும். அதைத் தொடர்ந்து மனசு பரவசமாகிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண இதுவும் ஒரு நல்ல வழி!''

''துறுதுறுன்னு எப்போதும் செம ஜாலியா இருக்கீங்களே... எப்படி?''

''முன்னாடி எல்லாம் நான் ரொம்ப அமைதியா இருப்பேன். வீட்டுல உள்ளவங்ககிட்டகூட அதிகம் பேச மாட்டேன். எப்போதும் தனியாத்தான் இருப்பேன். ஆனால், இப்போ அப்படி இல்லை. நான் இப்படி சந்தோஷமா மாறினதுக்கு 'கடல்’ படத்தில் நான் பண்ணின கேரக்டரான பியாதான் காரணம். ஏன்னா அவ அப்படிப்பட்டவ. அவளோட ஆக்டிவிட்டீஸ் அவ்வளவு அழகா இருக்கும். அவளாலதான் நான் இப்படி மாறினேன். அவளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். அந்த கேரக்டர்ல நான் நடிச்சதுக்கு அப்புறம் என் லைஃப் இப்போ இன்னும் சந்தோஷமா மாறி இருக்கு. தேங்க்ஸ் பியா!''

நன்றி துளசி!

- உ.அருண்குமார்,  

படங்கள்: எம்.உசேன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு