Published:Updated:

பிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்!

பிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்!

பிரீமியம் ஸ்டோரி

''பிடித்ததைச் செய்யணும்; உடம்புக்கு ஏற்றதைச் சாப்பிடணும். இப்படி இருந்துட்டாலே, உடம்பும் மனசும் நாளுக்கு நாள் அழகாகிட்டே போகும்'' - வயதே ஏறாமல் இருக்கும் வரத்தைச் சொல்கிறார் பிரியா ஆனந்த். 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அச்சு அசல் அமெரிக்கப் பெண்ணாக ஜொலித்த இவரின் சொந்த ஊர் நம்ம மயிலாடுதுறை.

பிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்!

''இவ்ளோ அழகா இருக்கீங்களே எப்படி?''

##~##

''ஆரம்பிக்கும்போதே அலப்பறையா? நான் அழகா இருக்கிறதுக்கு எங்க அம்மா அப்பாவுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். எங்க அம்மா, தமிழ்... மாயவரத்துக்காரங்க. அப்பா. தெலுங்கு. அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப அழகா இருப்பாங்க. ஸோ... தானாகவே எனக்கும் ரெண்டு மாநிலத்தோட அழகும் வந்துடுச்சு. கூடவே அவங்களோட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும். அவங்க ரெண்டு பேருமே சாப்பாட்டிலும் உடல் ஆரோக்கியத்திலும் என் மேல் ரொம்ப அக்கறையா இருப்பாங்க. போட்டி போட்டு என்னைக் கவனிச்சுப்பாங்க. அம்மா, தமிழ்நாட்டு உணவு முறைகள் தொடங்கி வீர விளையாட்டுகள் வரை அனைத்தையும் சொல்லி வளர்த்தாங்க. அப்பா, ஆந்திராவோட பாரம்பரிய உணவுமுறைகளையும் வாழ்க்கைமுறைகளையும் சொல்லிக்கொடுத்தாங்க. என் சின்ன வயசுலயே குடும்பத்தோட அமெரிக்கா போய் செட்டில் ஆகிட்டோம். அங்கே போய் மேற்கத்திய முறையிலான ஆரோக்கியப் பழக்கவழக்கங்களையும், விளையாட்டுக்களையும் கத்துக்கிட்டேன். இதெல்லாம் ஒண்ணுகூடி கியூட்டா இந்தியாவுக்கே திரும்பி இருக்கேன்.''

''உங்க அழகையும் ஆரோக்கியத்தையும் எப்படி எல்லாம் பாதுகாப்பீங்க?''

பிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்!

''சிம்பிள்! எதுவுமே பெருசா கிடையாது. உணவுக் கட்டுப்பாடுகள் எனக்குக் கிடையாது. பிடிச்சதை நல்லாச் சாப்பிடுவேன். பிரியாணின்னா எனக்கு உயிர். வெளுத்து வாங்குவேன். சென்னையில் இருந்தா, நம்ம ஊரு ஸ்பெஷல் சாப்பாடு எல்லாத்தையுமே ஒரு கை பார்ப்பேன். இந்த வயசுலதானே நல்லாச் சாப்பிட முடியும். சாப்பாட்டு விஷயம் ஒரு பக்கம்னா, ஜிம், தியானம், யோகா இதெல்லாம் என்னோட மறுபக்கம். எவ்வளவுக்குச் சாப்பிடுகிறேனோ, அந்த அளவுக்கு ஒர்க் அவுட்ஸ்... வீட்டில் இருந்தேன்னா, தினமும் காலையில் எழுந்ததும் கடற்கரைக்குப் போயிடுவேன். அங்கே குழந்தைகளோட விளையாடுவேன். கையை நல்லா வீசி வாக்கிங் போவேன். அந்தக் காலை நேரத்து ரம்மியமான சூழலில் கண்ணை மூடித் தியானம் பண்ணலைன்னா, அன்னைக்கு எனக்குத் தூக்கமே வராது. இது என் மனசை எப்போதும் ஈஸியா வெச்சுக்க உதவும். தியானம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து உடம்பு முழுக்க நல்லா வியர்க்கிற வரைக்கும் ஜிம்மில் கார்டியோ ஒர்க் அவுட்ஸ் செய்வேன். ஒர்க் அவுட்ஸ் செய்து முடிச்சதும் உடனே தண்ணி குடிக்க மாட்டேன். வியர்வையோட தண்ணி குடிச்சா, உடம்புக்குக் கெடுதல். அதனால் வியர்வை மொத்தமும் நின்ன பிறகு, ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே மூச்சில் குடிச்சிடுவேன். அப்புறம் வயிறு நிறைய காலை டிஃபன். அப்பத்தானே அந்த நாள் முழுக்க உற்சாகமா இருக்க முடியும். இதெல்லாம்போக சில முக்கியமான யோகா பயிற்சிகளும் எனக்குத் தெரியும். அதையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் செய்வேன். முகத்துக்கு அளவான ஃபேஷியல், குடிக்க நிறையத் தண்ணீர் இதெல்லாம் என் சரும அழகின் ரகசியங்கள்.

பிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்!

பொதுவா எந்த அளவுக்கு வேலை பார்க்கிறோமோ, அந்த அளவுக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு நெனைக்கிற பொண்ணு நான். அனாவசியமா ஊர் சுத்த மாட்டேன். நிறையத் தூங்குவேன். கிடைக்கிற நேரத்தை வீட்டில் உள்ளவங்களோடவும் நண்பர்களோடவும்தான் செலவு செய்வேன். ஒவ்வொரு நொடியும் அழகா இருக்கும்படி பார்த்துப்பேன். சின்ன ஜோக் கேட்டாலும் வாய்விட்டுச் சிரிப்பேன். சிரிப்பே ஒரு சிறந்த உடற்பயிற்சிதான். ஒவ்வொரு தடவையும் சிரிக்கும்போதும் அடிவயிறு தொடங்கி மூளை வரை உள்ள உறுப்புகள் அனைத்துமே புத்துணர்வு பெறும். வாய்விட்டுச் சிரிக்கிறதுகூட ஒருவகை யோகாதான்.''

''நீங்க செம துறு துறு, எப்படி?''

''எப்பவுமே மனசுக்குள்ளே உயர்வான லட்சியம் இருந்தால், அந்த லட்சியமே உங்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வெச்சுக்கும். ஒரு பிரபல இயக்குனர்கிட்ட உதவி இயக்குனரா சேரணும்னுதான் நான் இந்தியாவுக்கே வந்தேன். வந்த இடத்துல ஹீரோயின் ஆகிட்டேன். ஆனாலும் என் லட்சியம் எனக்குள் இன்னும் உயிரோடு இருக்கு. அந்த லட்சியத்தை நோக்கி நான் ஓடிக்கிட்டே இருக்கேன். அந்த லட்சியம் நிறைவேறியதும் அதைவிட ஒரு பெரிய லட்சியத்தை உருவாக்கிப்பேன். இப்படி லட்சியங்கள் என்னை வழிநடத்தும் வரைக்கும் எப்போதுமே நான் இதே மாதிரி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பேன்.''

- உ.அருண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு