பிரீமியம் ஸ்டோரி
'தலை'யாயக் கடமை!
##~##

லை போனால்கூட அந்த அளவுக்கு வருந்த மாட்டார்கள். ஆனால், தலைமுடி போனால் மொத்த அழகும் போய்விட்டதாகப் பலரும் பதறிவிடுகிறார்கள். இந்த முடிப் பதட்டத்தில் மட்டும் ஆண், பெண் என்கிற பாகுபாடு இல்லை. தலைமுடியில் என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை எப்படி இயற்கை முறையில் நிவர்த்தி செய்வது என்பது குறித்துச் சொல்கிறார் சித்தமருத்துவ நிபுணர் செர்லி நான்ஸி. 

'முடி கொட்டுவதுதான் பலருக்கும் தலைவலி. முன் பக்கமாகச் சிலருக்கு வழுக்கை விழுவது பரம்பரையைப் பொருத்ததே. சரியான பராமரிப்பு இல்லாததாலும் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும், ஏதேனும் நோய்த் தொற்றுகளினாலும் தலைமுடியில் பூச்சி வெட்டுபோல் ஏற்படும். பரம்பரையைச் சார்ந்துதான் முடியின் தன்மை அமையும் எனச் சொல்ல முடியாது. ஆனால், சிலருக்கு அதுவும் ஒரு காரணம்.

டைஃபாய்டு மற்றும் வைரல் காய்ச்சலின்போது, கேன்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, ரத்தசோகை ஏற்படும்போது, உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது, முடி கொட்டுதல் ஏற்படும். பெண்களுக்குக் குழந்தை பிறந்த உடனேயும், பால் கொடுக்கும் காலங்களிலும் முடி கொட்டுதல் ஏற்படலாம். நிணநீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறு மற்றும் மன அழுத்தம் போன்ற

'தலை'யாயக் கடமை!

காரணங்களாலும் முடி கொட்டுதல் ஏற்படலாம்.'' என ஆரம்பித்தவர் துணைத் தலைப்புகளோடு விரிவாக விளக்கத் தொடங்கினார்.

முடி பராமரிப்பு...

தலை குளிக்கச் செல்லும் முன் எண்ணெய் அல்லது மூலிகைத் தைலங்களைத் தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கலாம். சிலருக்கு வறட்சியான முடி அமைப்பு இருக்கும். அவர்களுக்கு இது ஏற்றது.

முட்டை வெள்ளைக்கரு, வினிகர், தயிர், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால், அவகோடா (பட்டர்ஃபுரூட்), செம்பருத்தி இலை, மருதாணி இலை, கற்றாழையின் சதைப்பற்று நிறைந்த பகுதி இவற்றில் ஏதேனும் ஒன்றை, குளிக்கச் செல்லும் முன் தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டுப் பின் குளிக்கலாம்.  

ஹாட் ஆயில் மசாஜ்:

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவை மூன்றையும் கலந்தோ அல்லது தனித்தனியாகவோ எடுத்துக்கொண்டு, மிதமாகச் சூடுபடுத்தி விரல்களின் நுனிகளின் மூலமாக, முடியின் வேர்பகுதியில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பொடுகுத் தொல்லை உள்ளவர்களும் சுருட்டை முடி உள்ளவர்களும் முடியைப் பராமரிக்க இது சிறந்த வழி.

பொதுவாக அடர்த்தியான முடி உடையவர்கள் சிகைக்காயையும், அடர்த்திக் குறைவான முடி அமைப்பு இருப்பவர்கள் அரப்பையும் பயன்படுத்துவது சிறந்தது. முடியை நன்றாக அலசிய பின் டீயின் டிக்காஷன் ஒரு கோப்பை எடுத்து, முடியில் தடவிக்கொள்ளலாம் அல்லது முட்டையின் வெள்ளைக் கரு, ரோஸ் மேரி ஆயில் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தலையில் தடவி, பின் அலசிவிடலாம். இதனால் முடியில் தூசுகள் தங்குவதைக் குறையும்.

இயற்கையான சில எண்ணெய்கள்:

இளநரை, முடி உதிர்தல், பொடுகு இவற்றால் பாதிக்கப்பட்டோர் நல்ல கருமையான கூந்தலைப் பெறக் கரிசாலை, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி, அவுரி, பிரம்மி, மருதாணி இவற்றுடன், சரிபாதி அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தடவினால், கருமையான முடி கிட்டும்.

பொடுகுத் தொல்லை அகல:

பொடுகு அதிகமாக இருந்தால், வெப்பாலைத் தைலம், அருகன் தைலம், பொடுதலைத் தைலம் இவற்றைப் பயன்படுத்தலாம். ஹாட் ஆயில் மசாஜ் செய்வதாலும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். பொதுவாக வறண்ட முடி உடையவர்களிடையேதான் பொடுகுத் தொல்லை அதிகமாகக் காணப்படும். அவர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம்.

புழுவெட்டு:

புழு வெட்டு பொதுவாக எல்லா வகையான முடிகளையுமே பாதிக்கக்கூடியது. இது ஒருவிதமான பூஞ்சைக் காளானால் ஏற்படும் பாதிப்பு. ஆற்றுத் தும்மட்டிக்காயின் உள்பக்கச் சதையை நீக்கிவிட்டு, தேங்காய் எண்ணெயை ஊற்றி ஊறவைத்து, அந்த எண்ணெயைப் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், புழு வெட்டுக்கு விடை கொடுக்கலாம்.

முடி உதிர்வைக் குறைப்பதற்கான வழிகள்...

ரத்தசோகை:  ரத்த சோகை காரணமாக முடி உதிர்கிறது எனத் தெரிந்தால், அத்திப் பழம், பேரிச்சைப் பழம், இரும்புச் சத்து மருந்துகள், கரிசாலைக் கற்பக மாத்திரை இவற்றை உட்கொள்வதன் மூலம் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.

புரதச் சத்துக் குறைபாடு: பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புரதச் சத்து குறைபாடு ஏற்படும். இதனால் முடி உதிர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க முட்டையின் வெள்ளைக்கரு, மீன் எண்ணெய் மாத்திரைகள், கேரட், கருவேப்பிலைப் பொடி தினம் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்

மன அழுத்தம்: அமுக்கரா அல்லது அஸ்வகந்தா மருந்துகள் சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இவற்றை எடுத்துக்கொண்டால்,  மன அழுத்தம் குறையும். தியானம், யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதற்குச் சிறந்த வழி.

-க.அருண்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்,

ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

 வாரத்தில் மூன்று முறையாவது தலை முடியை வாஷ் செய்வது நல்லது.

வாரத்தில் மூன்று முறையாவது  அவசியம் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

தனி சீப்பு மற்றும் தனி டவல் பயன்படுத்த வேண்டும்.

அதிகமான முடி உதிர்வு ஏற்படுவது தை மற்றும் பங்குனி மாதங்களில்தான். இந்தக் காலங்களில் ஹாட் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்வது நல்லது  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு