##~##

புளி, உப்பு எனச் சரியான அளவில் சேர்த்துப் பக்குவமாகச் செய்த சாம்பாரைக்கூட, சிலர் ''சாம்பார்ல இத்தனை புளியையா போடுவ..?'' என்று எரிந்துவிழுவதைக் கேட்டு, குடும்பமே அவரை வித்தியாசமாகப் பார்க்கும். ஓர் உணவில், அனைவருக்கும் சரியாக இருக்கும் சுவை, ஒருவருக்கு மட்டும் அதிகமாக இருப்பதுபோலத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? திடீரென ஒருநாள், ஸ்வீட் சாப்பிடணும்போலத் தோன்றுகிறதே, எதனால் இந்த ஏக்கம்? சுவை உணர்ந்து சப்புக்கொட்டும் நாக்கு, சுவைக்கு ஏங்குமா, உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகள், மாற்றங்களால்தான் சுவை உணர்வு வெளிப்படுகிறதா? இதுபற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம். 

''நாக்குக்கு நல்லது கெட்டது தெரியாது. சாப்பிடுவதை எல்லாம் சுவைக்கக் காத்திருக்கும். நம் வாயில் சுவை உணர்வு ஏதாவது தெரிந்தால், அது மூளை செய்யும் வேலை. ஓர் இனிப்புப் பண்டத்தைச் சாப்பிட்டதும், அந்த இனிப்புச் சுவை, நாக்கு நரம்புகளின் வழியே சமிக்ஞைகளை மூளைக்கு எடுத்துச் செல்கிறது. காய்ச்சல், உடல்நலக் கோளாறு இருந்தால், வாய் கசப்பாக இருக்கும். சில நேரங்களில் உப்பு, புளிப்பு சுவை மற்றும் உடலில் வளர்சிதை மாற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உமிழ்நீரில் பிரதிபலிக்கும். நாக்கின் நுனிப் பகுதி இனிப்பையும், உள்நாக்குப் பகுதி புளிப்புச் சுவையையும் உணர்த்தும் என்று நினைத்து இருந்தனர். ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஆய்வில், இந்தக் கருத்து தவறு என்று சொல்லி, நாக்குப் பகுதி எல்லாச் சுவைகளையும் உணரக்கூடியது என்றனர்.

யாகாவாராயினும் நாகாக்க...!

பொதுவாகச் சுவை, உடலுக்குத் தேவைப்படுகிறது என்று பொருள்கொள்ள முடியாது. சித்த மருத்துவத்தின்படி, புளிப்பு சுவை வாயில் நிறைய இருந்தால், மூட்டு வலி, கை கால் வலி என வாதத்தன்மை அதிகம் இருக்கும் என்று அர்த்தம். கபத்துக்கும் இனிப்புக்கும் அதிகத் தொடர்பு உண்டு. நுரையீரலில் கபம், சளி அதிகம் இருந்தால், நாக்கில் இனிப்புச் சுவை இருந்துகொண்டே இருக்கும். இனிப்புக்காக ஏங்கும் தன்மை இருக்கும். இதைத் தவிர, பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்து அந்த வழியில் வந்த வாரிசுகளுக்கு, இன்சுலின் சுரக்கச் செய்யும் பீட்டா செல்களின் அளவு குறைவாக இருக்கலாம். அல்லது இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காமல் போகலாம். 'இனிப்பு சாப்பிட ஆர்வமாக இருக்கு’ என்பதை 'நல்லதுதானே’ என்ற பொருளில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை பித்தம், கபம் சரியாக இருக்கிறதா என்பதை நாடித் துடிப்பை வைத்தே அறித்து கொள்ளமுடியும். பித்தம் அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய் இருக்க அதிக

யாகாவாராயினும் நாகாக்க...!

வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காச நோய் இருப்பவர்களுக்கு உமிழ் நீரில் உப்பு அதிகம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். காலையில் எழுந்ததும், வாய்ப் புளிப்பாக இருப்பதுபோல் தெரியும். இதனால் சிலர், பல் துலக்கும்போது கையைவிட்டு அடிக்கடி வாந்தி எடுப்பார்கள். இப்படிச் செய்யவே கூடாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் துலக்கும்போது வாந்தி எடுக்கலாம். ஆனால், அடிக்கடி இப்படிச் செய்தால் குடல் புண் வந்துவிடும். பித்தம் மட்டும் அல்லாமல், அமில நீரும் கலந்து வெளியே வரும். இரவில் சாப்பிட்டு முடித்துப் படுக்கும்போது அமிலம், பித்த நீர், என்சைம்கள் சுரந்து இருக்கும். கைவிட்டு வாந்தி எடுப்பதால், இந்த அமிலம், உணவுக் குழல் தாண்டி மேலே வரும். இதனால் குடல் புண் ஏற்படுகிறது.

சாப்பிட்ட உணவு ஜீரணிக்காமல் போனால், வாயில் புளிப்பு சுவை இருப்பதுபோல் தோன்றும். குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டால் வாயில் புளிப்புச் சுவை தெரியும். மலம் கழிக்கும்போது புளித்த வாடை வீசும். காரம், துவர்ப்பு அதிகமானால் என்ன பாதிப்பு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வாயில் புளிப்புச் சுவை இருந்தால் வாதம், அஜீரணம். உப்பு சுவை இருந்தால் உயர் ரத்த அழுத்தம்,

யாகாவாராயினும் நாகாக்க...!

சர்க்கரை நோயாக இருக்கலாம்.

இனிப்பு இருந்தாலும் சர்க்கரை நோயாக இருக்கலாம். இந்த சுவை உணர்வுகளை, இந்த நோயாக இருக்குமோ என்று நாமாகக் கற்பனை செய்யக் கூடாது.  

இனிப்புக்கு நாக்கு ஏங்கினால், முதலில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். குளுகோஸ் டாலரென்ஸ் டெஸ்ட் மற்றும் சீரம் இன்சுலின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உரிய பரிசோதனையின் மூலம் பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்த பிறகே, நாக்கு கேட்கும் சுவைகளைச் சாப்பிடலாம்.'' என விளக்கமாகச் சொல்லும் சிவராமன்,

''நாவுக்கு அடிமையாவதைவிட உடலுக்கு உகந்ததை அறிந்து உட்கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியம் காக்கும்!'' என முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.

   - ரேவதி, படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

  நோயைச் சொல்லும் ஆசை!

''நம்முடைய உடலில் குறைபாடு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்திக்கொள்ள நம்முடைய உடல் முயற்சிக்கும். இதற்காக அது சில குறிப்பிட்ட சுவை உள்ள உணவுகளை அதிகம் கேட்கும். ஒருவர் விரும்பிச் சாப்பிடும் சுவையைக்கொண்டே அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியலாம்'' என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் தனசேகரன்.

இனிப்பு, துவர்ப்பு - மண்ணீரல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள்

புளிப்பு - கல்லீரல், பித்தப்பை தொடர்பான பிரச்னை. கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் புளிப்பு சுவையுள்ள உணவை அதிகம் சாப்பிடுவர். இந்தக் காலத்தில் தாய், சேய் என இருவருக்கும் சேர்த்து வேலை செய்வதால், தன்னை சரிப்படுத்திக்கொள்ள புளிப்பு சுவையைக் கேட்கிறது.

கசப்பு - இதயம், சிறுகுடல்

காரம்- நுரையீரல், பெருங்குடல்

உப்பு - சிறுநீரகம், சிறுநீர்ப் பை

-பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு