Published:Updated:

உலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா?

உலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா?

##~##

கூந்தலைக் காயவைப்பது என்பதே ஒரு கலை. குளக்கரையில் தலையை உலரவைத்து, சிக்கெடுத்து, சிறு குச்சியால் மென்மையாகத் தட்டிக் கிராமப் பெண்கள் மேற்கொள்ளும் உத்தி அத்தனை அழகு. ஆனால், இன்றைய சூழலில், குளித்து முடித்த கையோடு, ஹேர் டிரையரின் உதவியால் முடியை உலரவைத்து, அலுவலகத்துக்கு அரக்கப்பரக்கப் பெண்கள் ஓடுகிறார்கள். ஆற அமர ஈரக்கூந்தலைக் காயவைப்பதற்குத் தலையில் அரை அடி நீளம்கூட முடி இல்லை என்பதும் வருத்தமான விஷயம். மூளைக்கு அதீத வேலை, மாசு படிந்த நீர் மற்றும் காற்று என முடி உதிர்வதற்குப் பல காரணங்கள். ஆனாலும் இவற்றை எல்லாம்விட, உடனடியாக முடியை உலரவைக்க, அழுத்தத்துடன் சுடுகாற்றுத் தரும் ஹேர்டிரையரை அடிக்கடி பயன்படுத்துவது தலைமுடி பெரிதும் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம்.

 ஹேர்டிரையரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அழகுசிகிச்சை நிபுணரும் தோல் மருத்துவருமான தனலட்சுமியிடம் பேசினோம். ''ஹேர்டிரையர்களில் குளிர் மற்றும் சூடான காற்றை வெளியிடுவது என இரண்டு வகைகள் இருக்கின்றன. மேலும் காற்றை வெளிப்படுத்துவதிலும், மிதமானது, நடுத்தரமானது, வேகமானது எனவும் வகைகள் உள்ளன. இவற்றில் மிதமான அல்லது நடுத்தர வேகத்தில், குளிர் காற்றை மட்டுமே வெளியிடும் ஹேர்ட்ரையரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா?

எப்போதாவது மட்டும்தான் ஹேர்டிரையர் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்தினால் முடி வலுவிழந்து, முடியின் இயற்கையான நிறத்தையும் இழக்க நேரிடும். தலையில் கொப்புளங்கள் மற்றும் வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

ஹேர்டிரையரில், ஃபேனுக்கும், டிரையரின் பற்களுக்கும் அதிக இடைவெளி இருப்பதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதிகச் சத்தம் வராத, அதிர்வு தராத ஹேர்டிரையர்களாக இருப்பதும் நல்லது. மேலும் தரமான 'ஹீட் புரொடக்ஷன்ஸ் கிரீம்’ வாங்கி, ஹேர்டிரையர் பயன்படுத்துவதற்கு முன்னால், தலையில் தடவிக்கொள்ளவேண்டும். அதன் பிறகு ஹேர்டிரையரைப் பயன்படுத்தலாம். இதனால், ஹேர்டிரையர் மூலம் தலை வழியே உடலுக்குச் செல்லும் வெப்பத்தைத் தடுக்கலாம். ஹேர்டிரையர்களைத் தலை முடிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடலின் மற்ற பாகங்களுக்குப் பயன்படுத்துவது நல்லது அல்ல.

மேலும், ஹேர்டிரையர்கள் பயன்படுத்துவது என்பதே குளிர்ப் பிரதேச நாட்டினருக்கான பழக்கம். காரணம், அவர்கள் நாட்டில் தலைமுடி காய வெகுநேரம் ஆகிறது என்பதாலே இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நம் நாடு, ஏற்கெனவே வெப்ப நாடு. இங்கே இந்தக் கருவியைப் பயன்படுத்தத் தேவையே இல்லை. சாதாரணமாக ஃபேன் கீழே நின்று தலைமுடியை உலர்த்தினாலே விரைவில் தலைமுடி உலர்ந்துவிடும்'' என்றார் நம்பிக்கையாக.

அழகுக்கலை நிபுணரான வீணா குமாரவேல் ஹேர்டிரையரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதுபற்றி பேசும்போது, ''பொதுவாகச் சூடான காற்றைத் தலைமுடி காய்வதற்கும், குளிர்க் காற்றை முடி அலங்கார வடிவமைப்புக்கும் பயன்படுத்துவார்கள். இந்த ஹேர்டிரையர்களைப் பயன்படுத்துவதில் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக ஹேர்டிரையர்களை, ஸ்கேல்ப் எனப்படும் தலையின் மண்டை ஓட்டுப்பகுதியை மூடியிருக்கும் சருமத்திற்கு மிகவும் அருகே வைத்துப் பயன்படுத்தக் கூடாது. இதனால், ஸ்கால்ப் பகுதி மிகவும் பாதிப்பு அடையும். ஸ்கால்ப் பகுதிக்கும், ஹேர்டிரையருக்கும் இடையே குறைந்தது இரண்டு அங்குலமாவது இடைவெளி இருக்கவேண்டும். ஹேர்டிரையரில் இருந்துவரும் சூடான காற்றை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்ந்து, முடியின் வேர்ப்பகுதியே பாதிக்கப்படும்.'' என்றார் எச்சரிக்கும் விதமாக.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டுங்கள் தோழிகளே!

- உ.அருண்குமார்,

படம்:  ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்