Published:Updated:

என்ன நோய்.. என்ன அறிகுறி?

என்ன நோய்.. என்ன அறிகுறி?

##~##

''கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று மூச்சிரைப்பு. அவருடைய குடும்ப மருத்துவர் 'இது ஆஸ்துமாவாக இருக்கலாம்’ என்று சந்தேகப்பட்டு, என்னிடம் செகண்ட் ஒபீனியனுக்காக அனுப்பினார். அந்தப் பெண்ணை மலப் பரிசோதனை செய்து கொண்டுவருமாறு சொன்னேன். அவர்கூட நினைத்திருப்பார்.... மூச்சிறைப்புக்கும் மலப் பரிசோதனைக்கும் என்ன சம்பந்தம் என்று. மறுநாள் டெஸ்ட் ரிப்போர்ட்டுடன் வந்தார். அவரது மலப் பரிசோதனை அறிக்கையில் ஏராளமான குடற்புழுக்களின் முட்டைகள் இருப்பது தெரியவந்தது. முறையான சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு வந்திருந்த 'போலி ஆஸ்துமா’ போயே போய்விட்டிருந்தது. இப்படி ஒரு நோய்க்கான அறிகுறி என்று நாம் நினைப்பது, உண்மையிலேயே வேறு ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.' - நோய்களுக்கான அறிகுறிகளை எந்த அளவுக்கு நம்பலாம் என்றதற்கு இப்படி ஒரு விசித்திரமான உதாரணத்துடன் விளக்க ஆரம்பித்தார் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவரும், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருமான ஈ.தண்டபாணி. 

ஒரே அறிகுறி... பல நோய்கள்:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்ன நோய்.. என்ன அறிகுறி?

நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, நெஞ்சுவலி, பித்தப்பைக் கோளாறுகள் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் என்று தவறாகக் கணிக்கப்படுகின்றன. பித்தப்பையில் கற்கள் இருந்தால் மாரடைப்புக்கான அறிகுறிகளை அச்சுஅசலாக அப்படியே காட்டிக் குழப்பத்தை ஏற்படுத்துவதும் உண்டு. மாரடைப்பைப் போலவே தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் வலி பரவும்; பதட்டமான மனநிலைகூட அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தோடு சேர்ந்து மாரடைப்பைப் போல மிமிக்ரி செய்வது உண்டு. அவ்வளவு ஏன்? பெண்களுக்கு கர்ப்பம் ஆனதுபோல சில போலி அறிகுறிகள் தோன்றுவது உண்டு. பொதுவாக மாதவிடாய் நிற்பதுதான் கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறி. ஆனால், உளவியல்ரீதியான பதட்டம், தாயாக வேண்டும் என்ற பெண்ணின் தவிப்பு, மன அழுத்தம், ஊட்டச் சத்துப் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதைப் போலவே வாந்தியும், தலைசுற்றலும் கொண்ட மசக்கையும் ஏற்படும் என்பதுதான் வினோதம்!

என்ன நோய்.. என்ன அறிகுறி?

தலைவலி என்பது சாதாரணமான ஒற்றைத் தலைவலியில் இருந்து, மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, மன அழுத்தம், கழுத்துத் தசைப் பிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளின் அறிகுறியாக இருக்கும்.

பல அறிகுறிகள்... ஒரே நோய்:

என்ன நோய்.. என்ன அறிகுறி?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும் ஒரு சிலருக்கும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் தோன்றிக் குழப்புவது உண்டு. தைராய்டு பிரச்னை இருந்தால் தாறுமாறான இதயத் துடிப்பு, மன அழுத்தம், அதிகப்படியான வியர்வை, முடி கொட்டுதல், நகங்களின் சீரற்ற வளர்ச்சி போன்ற பல அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

குழப்பும் அறிகுறிகள்

தைராய்டில் இன்னும் சில விசித்திரங்கள் இருக்கின்றன. அதிகமாக தைராக்ஸின் சுரந்தால் எடைக் குறைவு, வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாமை, கைகால் நடுக்கம், சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும்.

குறைவாக தைராக்ஸின் சுரந்தால், கூடுதல் எடை, குளிரைப் பொறுத்துக்கொள்ள முடியாமை, களைப்பு போன்றவை ஏற்படும்.

பல சமயங்களில் தைராய்டு குறைபாடுகள் இருப்பவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியுமே இல்லாமல் இருக்கும்.

இன்னும் சிலருக்கு தைராக்சின் அதிகமாகச் சுரக்கும். ஆனால் அறிகுறிகளோ குறைவாகச் சுரப்பதற்குத் தோன்றுபவையாக இருக்கும்!'' எனச் சொல்லும் மருத்துவர் தண்டபாணி இறுதியாக இப்படிச் சொல்கிறார்...

''அதிகமான பரிசோதனைகள் மூலமே நோயாளிக்கு வந்திருப்பது இந்த வியாதிதான் என்று உறுதியாகக் கண்டுபிடிக்கவேண்டும். பலரும் இதைப் புரிந்துகொள்ளாமல் வீணாக டெஸ்ட் எடுக்கச் சொல்வதாக நினைக்கிறார்கள். எச்சரிக்கைக்காகச் செயல்படுவது ஒருபோதும் வீணானது கிடையாது.'

- லதானந்த்

படங்கள்: ஜெ.தான்யராஜு