Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

##~##

மலை ஏறும் மலேரியா!  

மலேரியா காய்ச்சலைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். முதல் இரண்டு கட்டப் பரிசோதனை முடிவுகள் விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. ஆனால், தற்போது நடந்துவரும் மூன்றாவது கட்டப் பரிசோதனை முடிவுகள் விஞ்ஞானிகளுக்குச் சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. மருந்து செலுத்தப்பட்ட முதல் ஆண்டில் 43.6 சதவிகிதமாக இருந்த நோய்த்தடுப்புத் திறன், அடுத்த நான்கு ஆண்டுகளில் பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மலேரியா பாதிப்பில் இருந்து ஏராளமானோரை இந்த மருந்து காப்பாற்றி உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த மருந்தின் ஆற்றல் குறையும் பிரச்னையைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அக்கம் பக்கம்

 தூக்கம், துக்கம் ஆகலாமா?

அதிகப்படியான பணிச்சுமை, உணவுப் பழக்கத்தில் மாற்றம் போன்ற காரணங்களால் இந்தியாவில் தூக்கம் தொடர்பான பிரச்னையில் சிக்கி அவதியுறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒருகாலத்தில் வயதானவர்களுக்குத்தான் தூக்கத்தின்போது சுவாசித்தலில் ஏற்படும் 'ஸ்லீப் ஆப்னியா’ பிரச்னை வந்தது. ஆனால், இன்று சின்னக் குழந்தைகளுக்குக்கூட இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ஜெயராமன். சென்னை மருத்துவக் கல்லூரியில் ஸ்லீப் ஆப்னியா பிரிவின் தொடக்க விழாவின்போது இதை அவர் தெரிவிக்க, பலருக்கும் ஷாக். விழாவில் பங்கேற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் வி.கனகசபை, ''எங்கள் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் இதுவரை 700 பேருக்கு தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதில் 5 முதல் 7 சதவிகிதம் பேர் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்'' என்று அதிர்ச்சியூட்டுகிறார். இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், இதயம் பாதிக்கப்படலாம் என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம்.

அக்கம் பக்கம்

 வருகிறது புது பேண்டேஜ்!

நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவு மாணவர்கள் காயங்களில் ஏற்படும் ரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தும் மேஜிக் ஜெல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். விலங்குகளின் திசுக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளைக்கொண்டு உருவானது இந்த ஜெல். நோயாளி சைவம் என்றால் செடிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெல்லைக்கூடப் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை ஓர் எலியின் மீது விஞ்ஞானிகள் பரிசோதித்துப்பார்த்ததில், ரத்தக்கசிவு உடனடியாக நின்றுவிட்டது. அடுத்தகட்டமாக மூத்த மருத்துவர்கள் முன்னிலையில், இதைச் சற்றுப் பெரிய உயிரினங்களான பன்றி, ஆடு போன்றவற்றின் மீது தடவிப் பரிசோதிக்க உள்ளனராம். இது வழக்கமான பேண்டேஜ் முறைகளுக்கு மாற்றாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அக்கம் பக்கம்

 பகல்கொள்ளைக்கு மருந்து கொடுங்கப்பா!

பஞ்சாபைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று மருந்து நிறுவனங்கள் மருந்து விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான கடிதம் ஒன்றை, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. இதில் வெறும் ரூ.1,734 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை கம்பெனிகள் ரூ.19,800க்கு விற்பதாகத் தெரிவித்தது. இந்தக் கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு, தாமாக முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிந்து பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம். புற்றுநோய்க்கு எதிரான 72 மருந்துகளின் விலைகளை அதிரடியாகக் குறைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளதாக, பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக் குறைப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தது. பஞ்சாபில் மட்டும் குறைத்தால் போதாது எனக் கருதிய நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்துக்கும், தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நேரம் பார்த்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த அழகிரி ராஜினாமா செய்திருக்கிறார். புதிதாக வரும் அமைச்சராவது பொறுப்பான பதில் சொன்னால் சரி!

அக்கம் பக்கம்

 சர்க்கரை சந்தேகங்களுக்குத் தீர்வு!

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் இதுபற்றிய விழிப்பு உணர்வு குறைவாகவே இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளும் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு சரியான பதில் பெற முடியாமல் உள்ளனர். நான் ஏன் அடிக்கடி சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்? எப்போதாவது கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டால் தப்பா? காய்ச்சல் வரும்போதும்கூட சர்க்கரை நோய்க்கான மாத்திரையைச் சாப்பிட வேண்டுமா? என நிறைய சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் என்ரிச் என்ற நிறுவனம் டயாகேர் என்ற சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் அனைவருக்கும் புரியும் வண்ணம் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது.

சோயா... புற்றுநோயே போய்யா!

அக்கம் பக்கம்

சோயாபீனில் உள்ள புரதம் குடல், கல்லீரல், நுரையீரல் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை என்று உலகளாவிய உணவு ஆராய்ச்சி மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சோயா பீன் புரதச் சத்தும், ஒமேகா 9 கொழுப்பு அமிலமும் நிறைந்தது. சோயா பீன் உணவுகள் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை 73 சதவிகிதமும்,

அக்கம் பக்கம்

கல்லீரல் புற்றுநோய்த் திசுவை 70 சதவிகிதமும், நுரையீரல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 68 சதவிகிதம் அளவுக்கும் குறைப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சி தொடர்கிறது.

 அமைச்சரை எதிர்க்கும் கிருமி!

பன்றிக்காய்ச்சலை எதிர்கொள்ள இந்தியா முழு அளவில் தயாராகிவிட்டது என்று சமீபத்தில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இந்த அறிவிப்பு பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1என்1 வைரஸ் காதுக்கு எட்டியதோ என்னவோ... இந்தக் கிருமியின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதை வைரஸ் கிருமிகளை ஆராய்ந்துவரும் மத்திய அரசு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது சிறிய மாற்றம்தான்; இருப்பினும் பன்றிக்காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மாத்திரையை எதிர்க்கும் அளவுக்கு வைரஸ் சக்தி பெற்றுவிடவில்லை என்றும் வைரஸில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் மிகத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.